சேமுமு. முகமதலி
சேமுமு. முகமதலி (சேமுமு. முஹமதலி; சேமுமு. முஹம்மதலி; பேராசிரியர் சேமுமு. முகமதலி; முனைவர் சேமுமு. முகமதலி; டாக்டர் சேமுமு. முகமதலி) (பிறப்பு: மார்ச் 03, 1951) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தனது இலக்கியப் பணிகளுக்காக தமிழக அரசின் 'உமறுப் புலவர் விருது' உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
சேமுமு. முகமதலி, மார்ச் 03, 1951-ல் பிறந்தார். பள்ளிக் கல்வியை நிறைவு செய்த இவர், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'தமிழ் நாடகங்களில் பாத்திரப் படைப்புகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சேமுமு. முகமதலி மணமானவர். மனைவி ஹஜியா ஹுமைரா பீவி வங்கி அதிகாரியாகவும், சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியை ஆகவும் பணியாற்றினார். இவர்களுக்கு இரு மகள்கள். முதல் மகள் அனீசா (டாக்டர்); இரண்டாவது மகள் அஸ்மா (பொறியாளர்)
கல்விப்பணிகள்
சேமுமு. முகமதலி, சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் 1975 முதல் 1982 வரை உதவிப் பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1983 முதல் 1995 வரை பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மாணவர்கள் பலருக்கு ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட வழிகாட்டியாகச் செயல்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
பேராசிரியர் முகமதலி பல்வேறு இதழ்களில் இஸ்லாமிய இலக்கியம் குறித்த திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த நூல்களையும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் எழுதினார். கவிதைகளும், சிறுகதைகளும் முஸ்லிம் முரசு, தினமலர், தினகரன், மாலைமுரசு, சமரசம், மணி விளக்கு, பிறை, நர்கிஸ், இஸ்மி உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகின.
பேராசிரியர் முகமதலி அரிய பல இஸ்லாமிய நூல்களைப் பதிப்பித்தார் பல்வேறு இஸ்லாமியக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் பங்குபெற்றுச் சொற்பொழிவாற்றினார். சிறப்புக் கட்டுரைகளை வாசித்தார். சிறுகதை, ஆய்வு, உரை விளக்கம் எனப் பலவகை நூல்களை எழுதினார்.
ஊடகம்
வானொலி
பேராசிரியர் முகமதலி பல வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நபிகள் நாயகத்தின் சிந்தனைகள், செய்குதம்பிப் பாவலரின் இலக்கியத் தொண்டு, இலக்கியத்தில் மனிதநேயம், சிந்தனை நாள், தியாகத் திருநாள், புனித ரமலான், பக்ரீத் என பல்வேறு தலைப்புகளில் பல உரைகளை நிகழ்த்தினார்.
தொலைக்காட்சி
பேராசிரியர் முகமதலி, பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். கவிதை, நாடகம், நேர்காணல், வினாடி - வினா, மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், கலந்துரையாடல், கேள்வி - பதில்கள், இலக்கிய விளக்கங்கள் எனப் பலவிதங்களில் பங்களித்தார்.
இதழியல்
பேராசிரியர் சேமுமு. முகமதலி 'இனிய திசைகள்' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். பல்வேறு பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் ஆசிரியராகச் செயல்பட்டார்.
பொறுப்பு
- தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர்
- சர்வதேச இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர்
- இஸ்லாமிய தமிழ் இலக்கிய அகாதெமி தலைவர்
- நண்பர்கள் இலக்கியப் பேரவைத் தலைவர்
- செயிண்ட் ஆண்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர்
- மயிலாப்பூர் மண்டலப் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர்
- தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கழக இணைச் செயலாளர்
- ஜமாலியா கல்விச் சங்க இணைச் செயலாளர்
- தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க உறுப்பினர்
- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மேம்பாட்டு சங்க உறுப்பினர்
- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் அமைப்பு உறுப்பினர்
- முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்புகளின் உறுப்பினர்
- சென்னை ஹார்மனி அசோசியேஷன் உறுப்பினர்
விருதுகள்
- கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் பொதுக் கல்வியில் புதிய எழுத்தறிவு பெற்றவர்களுக்கான இலக்கியத்திற்கான தேசிய விருது - 'இங்கே சாதி சாகுது' நாடகத்திற்காக. (1981)
- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 'நாவலர்' பட்டம்
- தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் படப்பை இளைஞர் நலச் சங்கம் அளித்த 'இலக்கியச்சுடர்' பட்டம்
- மலேசிய தமிழ் முஸ்லிம் சங்கம் வழங்கிய 'முத்தமிழ் மாமணி' பட்டம்
- நிடூர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் வழங்கிய 'தமிழ் மாமணி' பட்டம்
- ஜமாலியா மேல்நிலைப் பள்ளி, வெள்ளி விழா நினைவுப் பரிசு (1989)
- அகில இந்திய ஹஜ் கருத்தரங்கு நினைவுப் பரிசு (1989)
- புனித அந்தோணி மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு நினைவுப் பரிசு (1995)
- சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாtடு நினைவுப் பரிசு (1999)
- தமிழக அரசின் உமறுப்புலவர் விருது
மதிப்பீடு
சேமுமு. முகமதலி எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், ஆய்வாளர், கல்வியாளர் எனப் பல களங்களில் செயல்பட்டார். அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தார். நண்பர்களுடன் இணைந்து இஸ்லாமிய இலக்கியங்களுக்கு உரையும், விளக்கமும் எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியராக அறியப்படுகிறார்.
நூல்கள்
கட்டுரை/ஆய்வு நூல்கள்
- தமிழ்க்கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு
- கருத்தரங்க கோவை
- சந்தத் திருப்புகழ் (சையத் முகமது ஹசனுடன் இணைந்து எழுதியது)
- குரா மாது (சையத் முகமது ஹசனுடன் இணைந்து எழுதியது)
- ஆன்மிகமும் அதன் அடிப்படை குணங்களும்
- திருநபி சதகம்
- திரு மக்கா பள்ளு
- ஆறாவது சர்வதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் ஆய்வரங்க கோவை
- திருக்கரண புராணம்
- ரவுசுல்கூல் படைப்போர்
- தித்திக்கும் திருமண மாலை
- நபிகள் நாயக காப்பியங்கள்
- தமிழ்க் கவிதை நாடகங்கள் - தொடக்கமும் வளர்ச்சியும்
- தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு
- கவிதை நாடகத்துறை வளர்கிறது
நாடகம்
- இங்கே சாதி சாகுது
பதிப்பு
- தையார் சுல்தான் நாடகம்
- அலி பாதுஷா நாடகம்
- லால் கௌஹர் நாடகம்
- அப்பாஸ் நாடகம்
- மெய்ஞ்ஞானச்சிந்து
உசாத்துணை
- பேராசிரியர் சேமுமு. முகமதலி இணையதளம்
- பேராசிரியர் சேமுமு. முகமதலி நேர்காணல்
- பேராசிரியர் சேமுமு. முகமதலி நேர்காணல், யூ ட்யூப் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:19:07 IST