under review

சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி

From Tamil Wiki

சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு) 'சேனைத் தலைவர் மரபு விளக்கம்' என்னும் நூலுக்கு மறுப்பாகத் தோன்றிய நூல். இதன் ஆசிரியர் நரசிங்கபுரம் வீராசாமி முதலியார்.

வெளியீடு

சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி, செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இதன் பதிப்பாசிரியர் ஸ்ரீ காஞ்சி நாகலிங்க முனிவர். 1926-ல், சிறுமணவூர் முனிசாமி முதலியார் ௮ண்டு சன்ஸின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. இதனை வெளியிட்டவர், திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச.சபாபதி முதலியார். இந்நூலை இயற்றியவர் நரசிங்கபுரம் வீராசாமி முதலியார். இவர், இராமலிங்க வள்ளலாரின் மாணவர்களுள் ஒருவர்.

நூல் அமைப்பு

சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுளத் தொடர்ந்து கலிவெண்பாவில் அமைந்த 111 கண்ணிகள் உள்ளன.

உள்ளடக்கம்

காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய 'சேனைக் தலைவர் மரபு விளக்கம்' என்னும் நூலில் உள்ள பிழைகளுக்கு மறுப்பாகத் தோன்றியதே 'சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி' நூல். வீரபாகுத் தேவருடன் தோன்றிய செங்குந்தர்கள், முருகப் பெருமானது படைக்குத் தலைமை பூண்ட காரணத்தினாலும், செங்குந்தர்களில் பலர் சோழ மன்னர்களுடைய சேனைக்குத் தலைமை தாங்கிய காரணத்தாலும் இவர்கள் 'சேனைத்தலைவர்' என்றும், இவர்களுடைய மரபு 'சேனைத் தலைவர் மரபு' என்றும் வழங்கப்படுகிறது.

செங்குந்தர்களின் பெருமை இந்நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

  • ஸ்ரீ கயிலாய பரம்பரையினர்
  • சுப்பிரமணிய மரபினர்
  • நவவீரர் சந்ததியர்
  • சேனைத்தலைவர்
  • தில்லைமாகாளித் தேரோடச் செய்தவர்கள்
  • ஏலேலசிங்கனுக்கு மெய்த்தலை கொடுத்தவர்கள்

பாடல்

கொல்லி மலையான் குலவியபொன் னித்துறையான்
சொல்லரிய சீர்த்திபெறுஞ் சோணாடன் - நல்லமலர்ப்

பொன்னா ருறந்தையான் போற்றுங்கோ ரப்பரியான்
தன்னே ரிலாதமதத் தந்தியான் - மின்னாரும்

ஆத்திமலர் மாலையா னம்புவியிற் பாவலர்கள்
ஏத்தியபா மாலை யினிதணிந்தோன் - மாத்தரங்க

வாரியொலி போன்முழங்கும் வண்மைதிகழ் மும்முரசான்
பாரிலுயர்த் தும்புலிப்ப தாகையான் - சீருயர்ந்த

ஆணையினா னெவ்வுலகு மாண்மைசெ லுத்திவரும்
கோணலிலாச் செல்வமிகு கோவேந்தன் - வேணிகரான்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:33:48 IST