under review

சேத்திர வெண்பா

From Tamil Wiki

சேத்திர வெண்பா (சேத்திரத் திருவெண்பா) சைவத் திருமுறைகளில் பதினோறாம் திருமுறையில் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியது. உடலின் நிலையாமையைச் சுட்டி தலங்களில் கோவில் கொண்ட சிவபெருமானை வணங்கும்படி அறிவுறுத்தும் வெண்பாக்களைக் கொண்டது.

ஆசிரியர்

ஐயடிகள் காடவர்கோன் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ அரியணை ஏறியவர். விரைவில் அரசுரிமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, துறுவுபூண்டு பல தலங்களுக்குச் சென்று பாடி வழிபட்டார். சிதம்பரத்துக்கு வந்து சில காலம் தங்கியிருந்து வழிபட்டார். பல நாட்கள் பல திருப்பணிகளைச் செய்து, இறுதியில் இறைவன் திருவடி எய்தினார். இவர் கி.பி. 6-ம் நூற்றாண்டினராக இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் காலத்துக்கும் முந்தையவர் என்று கருதப்படுகிறது.

நூல் அமைப்பு

சேத்திரத் திருவெண்பா 24 வெண்பாக்களால் ஆனது. ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு சிவத்தலத்தைப் பாடியதால் சேத்திர வெண்பா எனப்பட்டது. இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை யின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழி பட்டு உய்தல் வேண்டும்’ என்பதையே அறிவுறுத்துகின்றன. குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருவிடைவாய், திருநெடுங்களம், தண்டலை, திருவானைக்கா, திருமயிலை, உஞ்சேனை மாகாளம், திருச்சாய்க்காடு, சிராமலை, மழபாடி, திருவாப்பாடி, கச்சி ஏகம்பம், திருப்பனந்தாள், ஒற்றியூர், திருமயானம் ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

பாடல் நடை

திருவையாறு

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி, ஏங்கி, நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை..

கூன் விழுந்து, குனிந்து , கோலூன்றி, இருமி, ஏங்கி வாயில் நுரை தள்ளி தின்புறும் முன் திருவையாற்றில் கோவில் கொண்ட இறைவனை வாயால் பாடுக.

திருவாரூர்

காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

இளமை கடந்து, நலிவதற்குமுன் திருவாரூரில் கோவில் கொண்ட ஆரூரனை வணங்குக.

உசாத்துணை


✅Finalised Page