சேசுநாதர் அம்மானை
சேசுநாதர் அம்மானை (பதிப்பு:1927), இயேசுநாதர் மீது இயற்றப்பட்ட அம்மானை இலக்கிய நூல். இதன் ஆசிரியர் ச. செல்வராஜு ரெட்டியார்.
வெளியீடு
சேசுநாதர் அம்மானை நூலை, 1927-ல், சென்னை, பரங்கிமலை, செல்வம் அண்ட் கம்பெனியார், சென்னை சத்திய நேசன் அச்சகத்தில் பதிப்பித்து வெளியிட்டனர். இதன் ஆசிரியர் ச. செல்வராஜு ரெட்டியார்.
ஆசிரியர் குறிப்பு
ச. செல்வராஜு ரெட்டியார், பி.ஏ., எல்.டி கற்றவர். சென்னை மயிலாப்பூர், செயின்ட் பீட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். மதிவீரன், சுசீலா அல்லது கபாலமலைக்கள்ளர், நமது ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரின் சீவிய சரிதை, சத்தியநாதன் அல்லது சிலுவையும் பிறையும், ஞானசவுந்தரி, புனித அந்தோனியார் போன்றவை அவர் இயற்றிய பிற நூல்கள்.
நூல் நோக்கம்
சேசுநாதர் அம்மானை நூல் இயற்றியதன் நோக்கம் குறித்து, ச. செல்வராஜு ரெட்டியார், மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து, அவர்மீது பற்றுதல் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்றியதாக நூலின் இறுதியில் குறிப்பிட்டார்.
நூல் அமைப்பு
அம்மானை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த சேசுநாதர் அம்மானை நூலின் தொடக்கத்தில் காப்பு வெண்பா ஒன்று இடம்பெற்றது. இறுதியில் இரு விருத்தங்களும், இடையில் 1969 அம்மானைக் கண்ணிகளும் இடம்பெற்றன. நூலில் 45 உட்தலைப்புகள் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
சேசுநாதர் அம்மானை நூலில், இயேசுநாதர் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், அவரது அற்புதங்கள், உபதேசச் செய்திகள் இடம்பெற்றன.
பாடல்
இயேசு செய்த அற்புதங்கள்
நோயாளி குஷ்டம்நிறை நொய்யவொரு நிர்ப்பாக்கியன்
இருந்தஊர் தன்னிலே ஏகன் வருகை கண்டு
வருந்தியவர் முன்வந்து வல்லவனைத் தான்பார்த்து
ஆண்டவரே சித்தமுற்றா லடியேன் குணமடைந்து
ஈண்டுசுத்தம் நானடைவேன் என்றுபதம் வீழ்ந்தானாம்
சித்த மிருக்குது காண் சுத்தமா யிருவென்றார்
அத்தனுரை கேட்டவுடன் அக்குஷ்டம் நீங்கினதே
அப்போது சேசுபரன் அன்னவனைத் தான் விளித்து
தப்பாமல் நீ சென்று ஆசாரிய னிடத்தில்
காட்டுவாய் வேறெங்குங் கழறாதே என்றுரைத்தார்
நாட்டமுடன் சென்றவனும் நாற்றிசையும் பேசினனாம்
இயேசுவின் சிலுவைப்பாடு
நரம்புகள் தாமறவும் நல்லெலும்பு டைந்திடவும்
வரம்பின்றிச் சோரி வடிந்திடவும் காயங்கள்
நிறைந்திடவும் எம்பெருமான் நீணிலத்தில் பாடுபட்டு
அறைந்த சிலுவையிலோர் ஆறுதலு மில்லாமல்
கஷ்டப் படுகையிலே கர்த்தனருள் பாருங்கள்
நிஷ்டூர வாதை நினையாமல் நம்முடைய
தேவைகளை யேநினைந்தார் தீயர்நமை யேநினைந்தார்
ஏவைபழி யால்விளைந்த ஏகபரன் கோபத்தைத்
தணித்திடவுந் தம்மைத் தயவின்றிக் கொன்றிடவும்
கணித்த மனிதருக்குங் காசினியில் பாவத்தால்
தம்மைச் சிலுவையினில் தள்ளியறை வோருக்கும்
இம்மை யினியறையும் ஈனகுண மாந்தருக்கும்
வேண்டல் அவசியமென் றெண்ணிப் பரனையழைத்
தாண்டவருந் தந்தையரே அறியாமற் செய்கின்றார்
இவர்களைமன் னித்தருளு மென்று ஜெபித்தாராம்
பவவினையைப் போக்கவந்த பாங்குநிறை தேவபரன்
மதிப்பீடு
18, 19, 20-ம் நூற்றாண்டுகளில் இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பிள்ளைத்தமிழ், அந்தாதி, காவியம் எனப் பல நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய கிறித்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும், 'அம்மானை' வடிவில் இயற்றப்பட்ட நூலாகவும் சேசுநாதர் அம்மானை நூல் அறியப்படுகிறது. எதுகை, மோனை அமைப்புடன், எளிய நடையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:05:39 IST