under review

செ. சீனி நைனா முகம்மது

From Tamil Wiki
செ. சீனி நைனா முகம்மது

செ. சீனி நைனா முகம்மது(செப்டம்பர் 11, 1947-ஆகஸ்டு 7, 2014 ) மலேசியாவின் குறிப்பிடத்தக்க மரபுக்கவிஞர், தமிழறிஞர்.'உங்கள்குரல்' எனும் இதழின் ஆசிரியர். இறையருட்கவிஞர், நல்லார்க்கினியர், தொல்காப்பிய ஞாயிறு போன்ற புனைப்பெயர்களாலும் அறியப்பட்டார். மரபிலக்கியக் கவிதைகளும், இலக்கிய நூல்களும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

செ. சீனி நைனா முகம்மது செப்டம்பர் 11, 1947 அன்று, தமிழ்நாட்டில் கீழாயூர் இளையான்குடி சிவகங்கை மாவட்டத்தில் செய்யது ஆலம்-இபுறாம் பீ தம்பத்தியனருக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் அறுவர். தமிழ்நாட்டில் இளையான்குடி இடைநிலைப்பள்ளியில் படிவம் 3 வரை பயின்று பிறகு மலேசியாவில் படிவம் 5 வரை கல்வியைத் தொடர்ந்தார். 1966--ம் ஆண்டு கெம்பிரிட்ஜ்(Cambridge) பள்ளி இறுதி சான்றிதழைப் பெற்றார். தமிழகத்தில் ஜமால் முஹம்மது கல்லூரியில் 1967--ம் ஆண்டு முதல் 1968--ம் ஆண்டு வரை இளங்கலை படிப்பு படித்து, முடிவு பெறாத நிலையில் மலேசியாவிற்குத் திரும்பினார்.

தனிவாழ்க்கை

பள்ளி பருவம் முடித்தவுடன் இவர் கிள்ளானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்தார். பிறகு, அலோர் ஸ்டாரில் பள்ளிகளுக்கு அறிவியல் பொருட்களை வினியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் பினாங்கில் மளிகைக் கடை ஒன்றை நடத்தினார். இவர் நவமணிகளை விற்கும் விற்பனையாளராகவும் இருந்தார். மனைவியின் பெயர் இரகிமா.

1994--ம் ஆண்டு மே மாதம் 'உங்கள்குரல்’ கணினி அச்சு நிறுவணத்தைத் தொடங்கினார். 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 'உங்கள்குரல்’ இதழாசிரியராகப் பொறுப்பேற்று, முதல் 'உங்கள்குரல்’ இதழை வெளியிட்டார். இவர் ஆசிரியர்களுக்கு இலக்கண பயிலரங்குகளும் கவிதைப் பட்டறைகளும் நடத்தினார். வானொலி, மேடைக் கவியரங்கங்களிலும் பாடினார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயகாந்தனுடன்

செ. சீனி நைனா முகம்மது தமிழ் இலக்கணம், மரபிலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர். 'உங்கள்குரல்’ மாத இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றி தமிழ் இலக்கணக் கட்டுரைகளையும் இலக்கியப் படைப்புகளையும் வெளியிட்டார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளால் கவரப்பட்டார். மரபுக் கவிதை எழுதுவதில் திறமை பெற்றிருந்தார். 1958--ம் ஆண்டு முதல் 2011--ம் ஆண்டு வரை சீனி நைனா முகம்மது எழுதிய 200-க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகள் தேன்கூடு எனும் கவிதைத்தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.

சீனி நைனா முகம்மது 2.png

தமிழ் இலக்கணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நூற்பாக்களை நேரடியாக ஆராயத் தொடங்கி புணர்ச்சி விதிகளை எளிமையான முறையில் முன்வைத்தார். கோவை செம்மொழி மாநாட்டில் தமிழ்ச் சொற்புணர்ச்சி கோட்பாடுகளும் புதிய விதிகளும் என்ற கட்டுரையை எழுதினார். 'நல்ல தமிழ் இலக்கணம்', புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள், தொல்காப்பியக் கடலில் ஒரு துளி போன்ற நூல்கள் வழி தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தினார். ஆசிரியர்களுக்கு இலக்கணப் பயிலரங்குகளும் கவிதைப் பட்டறைகளும் நடத்தினார்.

செ. சீனி நைனா முகம்மது இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன் தமிழின் செம்மொழித் தகுதி பற்றி நாற்பது உலக அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய செம்மொழிச் சிறப்பு மலரை முதன் முதலாக வெளியிட்டார். கவிதைப் பூங்கொத்து என இவர் வெளியிட்ட 25 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மலேசியாவில் பள்ளி இறுதி நிலை அரசுத் தேர்வுக்குரிய தமிழ் இலக்கியப் பாட நூலாக இருந்தது.

செ. சீனி நைனா முகம்மது எழுதிய நிலைபெறநீ வாழியவே எனும் கவிதை, மலேசிய தமிழ் வாழ்த்தாக நாடெங்கும் இசைக்கப்பட்டு வருகின்றது. இவர் வானொலி, மேடைக் கவியரங்கங்களிலும் பங்குபெற்றார்.

பொது வாழ்க்கை

நவம்பர், 1997 தொடங்கி 2014--ம் ஆண்டு வரை உங்கள் குரல் மாத இதழில் இதழாசிரியராகச் செயல்பட்டார். நம் குரல் என்ற இஸ்லாமிய இதழுக்கும் இதழாசிரியராகப் பணியாற்றியதோடு இஸ்லாமிய மதப் படைப்புகளையும் புனைந்துள்ளார். வானொலியில் 'குர் ஆன்' குறித்த உரைகளை நிகழ்த்தியுள்ளார். 80-களில் மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

செ. சீனி நைனா முகம்மது 1970-1974 ஆண்டுகளில் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத்தலைவராகச் செயலாற்றினார். 1978--ம் ஆண்டு பெர்மின் தேசிய நிறுவனத்தின் செயலாளராகவும் 1982--ம் ஆண்டு அந்நிறுவனத்தின் உதவித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2011--ம் ஆண்டு மலேசியாவில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலக்கியப் பகுதியில் பொறுப்பாளராகச் செயல்பட்டார். 2007--ம் ஆண்டு தொடங்கி ஈப்போ குறிஞ்சித்திட்டின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

மறைவு

சீனி நைனா முகம்மது ஆகஸ்டு 7, 2014 அன்று காலமானார்

இலக்கிய இடம்

மரபுக் கவிதைகளையும் யாப்பிலக்கணத்தையும் இளைஞர்களிடம் கொண்டு செல்லப் பங்காற்றியவர். ஆசிரியர்களுக்காக மாணவர்களுக்கு இலக்கணத்தை எளிமையாக கற்பிக்குக்கும் பட்டறைகளை நடத்தினார்.

நூல்கள்

கவிதை
  • தேன்கூடு (செ.சீனி நைனா முகம்மது அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல், 2011)
  • கவிதைப் பூங்கொத்து (25 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல், 2004)
இலக்கணம்
  • நல்ல தமிழ் இலக்கணம் (2013)
  • புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள் (2013)
  • தொல்காப்பியக் கடலின் ஒரு துளி (2015)
இதழ்கள்
  • தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர் (40 உலக அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள்)
  • உங்கள்குரல்
  • நம்குரல்

விருதுகள், பரிசுகள்

  • தேன்கூடு கவிதை தொகுப்பு நூல் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசை வென்றது.
  • மலேசிய இந்திய காங்கிரசு (ம. இ. கா) வைரவிழாவில் தமிழ்மொழி இலக்கியப் பணிக்காக தங்கப் பத்தக்கம் பெற்றார்.
  • 2007-ம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் இறையருட்கவிஞர் எனும் விருதைப் பெற்றார்.
  • 2013-ம் ஆண்டில் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரால் 'தொல்காப்பிய ஞாயிறு’ எனும் விருதைப் பெற்றார்
  • 2014-ம் ஆண்டு கும்பகோணம் நகரில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் 'இலக்கியச் சுடர்’ விருதும் 10,000 ரூபாய் பொற்கிழியும் பெற்றார்.
  • தமிழ்நேசன் ஞாயிறு கவியரங்கத்தில் இருமுறை பரிசு பெற்றார்.
  • மதுரையில் வெளிவந்த 'குரானின் குரல்’ நடத்திய வெள்ளிவிழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

வாழ்க்கை வரலாறுகள், ஆவணப்படங்கள்

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு என ஐ.சண்முகநாதன் எழுதிய நூலில் உள்ள படைப்பாளர்களின் குறிப்புகளில் சீனி நைனா முகம்மது குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

உசாத்துணை

  • சீனி நைனா முகம்மது, செ. (2011). தேன்கூடு கவிதைத் தொகுப்பு, பினாங்கு: உங்கள்குரல்
  • சீனி நைனா முகம்மது, செ. (2007). செம்மொழி மலர், பினாங்கு: உங்கள்குரல்.
  • சீனி நைனா முகம்மது, செ. (2014). புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள், பினாங்கு: உங்கள்குரல்.
  • சீனி நைனா முகம்மது, செ. (2015). தொல்காப்பியக் கடலின் ஒரு துளி, பினாங்கு: உங்கள்குரல்.
  • பவானி, ஆ. & மனோன்மணி தேவி, அ. (2021). தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் (பக். 69-75). தஞ்ஜோங் மாலிம் : சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்
  • சீனி நைனா முகம்மது வாழ்க்கை குறிப்பு



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jan-2023, 06:59:07 IST