under review

செறுகாடு

From Tamil Wiki
செறுகாடு

செறுகாடு (ஆகஸ்ட் 26,1914 - அக்டோபர் 28, 1976). ) செறுகாடு கோவிந்த பிஷாரடி. மலையாள எழுத்தாளர். ஆசிரியர். கேரள கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவுவதில் பெரும்பங்காற்றியவர். நாடக ஆசிரியராகவும் புகழ்பெற்றிருந்தார். இவருடைய தன்வரலாறான வாழ்க்கைப்பாதை முக்கியமான இலக்கிய ஆக்கமாகவும், ஆவணமாகவும் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

செறுகாடு இன்றைய மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ண வட்டத்தில் செம்மலச்சேரி என்னும் ஊரில் ஆகஸ்ட் 26,1914 -ல் செறுகாட்டு பிஷாரம் என்னும் குடும்பத்தில் நாராயணி பிஷாரஸ்யாருக்கும் கீழீட்டில் பிஷாரத்து கருணாகர பிஷாரடிக்கும் பிறந்தார். புகழ்பெற்ற ஓவியரான ஆறங்கோடு ராராயண பிஷாரடி செறுகாட்டின் அம்மாவின் முதல் கணவர். அவருக்கு மனநலம் குறைந்தமையால் அவ்வுறவு முறிந்தது. அதன்பின் கருணாகர பிஷாரடியை மணந்தார்

குரு கோலாலன் எழுத்தச்சனின் திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். மலப்பிறம் பெரிந்தல்மண்ண கரிங்கநாடு ஆகிய ஊர்களில் பள்ளிக்கல்வியை முடித்து தனிமுயற்சியால் மலையாளம் வித்வான் தேர்விலும் வென்றார். குடுமப்பின்னணியில் இருந்து வைத்தியமும் சம்ஸ்கிருதமும் கற்றார். பிஷாரடி என்பது ஆலயத்தில் பணியாற்றும் சிறிய இனக்குழு. சோதிடம், மருத்துவம் ஆகியவற்றையும் குலத்தொழிலாகச் செய்வார்கள்

தனிவாழ்க்கை

1936-ல் கீழீட்டில் லட்சுமி பிஷாரஸ்யாரை மணந்தார். ரவீந்திரன், ரமணன், கே.பி.மோகனன், மதனன், சித்ரா, சித்ரபானு ஆகியோர் வாரிசுகள். கே.பி.மோகனன் இலக்கியவாதியும் இடதுசாரி அமைப்புகளில் முக்கியமான பங்களிப்பாற்றியவருமாவார்.

செறுகாடு செறுகர, செம்மலச்சேரி ஆகிய ஊர்களில். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் வேலைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப்பணியாற்றினார். கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அரசுப்பணியில் சேர்ந்தார். பட்டாம்பி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1960-ல் ஓய்வுபெற்றபின் யூனிவர்சிட்டி கிரான்ட் கமிஷன் பேராசிரியராக பணிநீட்சி பெற்றார்.

அரசியல்

இளமையிலேயே இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட செறுகாடு ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராகவும், தொடக்ககாலத் தலைவராகவும் பணியாற்றினார். 1948-ல் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மக்கரப்பறம்பு பேரணியை தடையை மீறி நடத்தி கைதானார். மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். மலபார் விவசாயிகள் சங்க இயக்கத்திலும், ஆசிரியர் சங்க இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.கேரள புரோகமன கலாசாகித்ய சங்கம், தேசாபிமானி ஸ்டடி சர்க்கிள் ஆகிய முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர்.

இலக்கியப் பணிகள்

செறுகாடு கேரளத்தின் முற்போக்கு இலக்கிய அமைப்புகளை நிறுவி முன்னெடுத்தவர்களில் ஒருவர். செறுகாடு (சிறியகாடு, அவருடைய குடும்பப்பெயர்) என்னும் பெயரிலும் மலங்காடன் என்ற பெயரிலும் எழுதினார்

செறுகாடு எழுதிய 'முத்தச்சி' என்னும் நாவல் அவருக்குப் பெரும்புகழை ஈட்டி அளித்தது. மக்ஸீம் கார்க்கியின் தாய் நாவலின் கருவை கேரளச்சூழலில் விரித்து எழுதிய நாவல் இது. 'தேவலோகம்' என்னும் நாவலும் புகழ்பெற்றது. வி.சாம்பசிவன் கதாபிரசங்கம் வழியாக அந்நாவலை மக்களிடையே புகழ்பெறச்செய்தார். செறுகாடு எழுதிய 'நம்மளொந்நு' என்னும் நாடகமும் முக்கியமானது.செறுகாடு அவருடைய தன்வரலாறான 'ஜீவிதப்பாத' (வாழ்க்கைப்பாதை) என்னும் நூலுக்காக இன்று முக்கியமாக மதிக்கப்படுகிறார். கேரளத்தில் கம்யூனிஸ்டு இயக்கம் உருவாகி நிலைபெற்றதன் வரலாற்றை நுணுக்கமான செய்திகளுடன் விவரிக்கும் நூல் அது.

இறப்பு

அக்டோபர் 28,1976-ல் செறுகாடு மறைந்தார்.

விருதுகள்

1977 கேரள சாகித்ய அகாதெமி விருது (வாழ்க்கைப்பாதை) (மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டது)

நினைவுகள்

கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் செறுகாடு நினைவு விருது 1978 முதல் வழங்கப்பட்டு வருகிறது

நூல்கள்

நாவல்கள்
  • முத்தச்சி
  • மண்ணின்றே முன்னில்
  • பூப்ரபு
  • மரணபத்ரம்
  • மருமகள்
  • பிரமாணி
  • சனிதச
  • தேவலோகம்
நாடகங்கள்
  • ஸ்னேகபந்தங்கள்
  • மனுஷ்ய ஹிருதயங்கள்
  • குட்டித்தம்புரான்
  • வால்நட்சத்திரம்
  • விசுத்த நுண
  • சுற்றுவிளக்கு
  • தறவாடித்தம்
  • நம்மளொந்நு
  • ஸ்வதந்த்ர
  • அடிம
  • முளங்கூட்டம்
  • ஜன்மபூமி
  • ரக்தேஸ்வரி
  • அணக்கெட்டு
  • கொடுங்காற்று
  • குட்டித்தம்புராட்டி
  • டாக்டர் கசன்
  • ஒடுக்கத்தே ஓணம்
சிறுகதைகள்
  • செகுத்தான்றே கூடு
  • தெருவின்றேகுட்டி
  • முத்ர மோதிரம்
  • சுட்டன் மூரி
கவிதை
  • மனுஷ்யனே மானிக்குக
  • அந்தப்புரம்
  • மெத்தாப்பு
  • ஆராதன
  • திரமால
தன்வரலாறு
  • வாழ்க்கைப்பாதை
குழந்தை இலக்கியம்
  • ஒரு திவஸம்
  • தந்த்ரக்குறுக்கன்
  • கறுப்பன் குட்டி
பிற
  • மேனோன்றே மேனி
  • வெள்ளச்சந்த
  • ஓணம் வருந்நு
  • சொசைட்டி பிரசிடெண்ட்
தமிழில்

வாழ்க்கைப்பாதை ( தமிழாக்கம் நிர்மால்யா)

உசாத்துணை


✅Finalised Page