சு. குமணராசன்
சு. குமணராசன் (பிறப்பு: பிப்ரவரி 5, 1957) எழுத்தாளர், கடல்சார் பொறியாளர், தனித்தமிழ் ஆர்வலர், சமூகப் பணியாளர், பேச்சாளர். 'தமிழ் இலெமுரியா' இதழின் ஆசிரியர். மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகளை நிறுவித் தொண்டாற்றி வருபவர்.
பிறப்பு, கல்வி
சு. குமணராசன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மூலைக்கரைப்பட்டியில் சுந்தரராசன், மூக்கம்மாள் இணையருக்கு பிப்ரவரி 5, 1957-ல் பிறந்தார். மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்றார்.
1973-ல் முதல் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். 1975 முதல் 1979 வரை இந்தியக் கப்பல்படைப் பயிற்சியகத்தில் கடல்சார் பொறியியல் படிப்பை நிறைவுசெய்தார். கடல்சார் பொறியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், சுற்றுச் சூழல், மேலாண்மை, ஒளிப்படக் கலை எனப் பல துறைகளில் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள் பெற்றார்.
தனிவாழ்க்கை
சு. குமணராசன் நங்கையை மணந்தார். ஆவார். நங்கை எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் மகள். மகன் இங்கர்சால். மகள் சகானா. இவருடைய இல்லத்து நூலகம் பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய எட்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டது.
இளம் வயதில் பெரியார், அண்ணாத்துரை, காமராஜர், கருணாநிதி ஆகிய தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இவர் பணியின் நிமித்தமும், தமிழ் அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் அமெரிக்கா, கனடா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரான்சு, எகிப்து, ஐரோப்பிய நாடுகள், டென்மார்க், ஆசுத்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, இலங்கை, அரபு நாடுகள், மத்திய தரைக் கடல் நாடுகள் ஆகியவற்றிற்கு பயணம் செய்தார்.
பணி
தொழிலில் இந்தியப் பாதுகாப்புத் துறைக் கப்பல் தளம், கடலோரப் பாதுகாப்புப் படை, கிரேட் ஈஸ்ட்டன் சிப்பிங், எஸ்ஸார் எரிவாயு மற்றும் எண்ணெய்க் குழுமம் ஆகிய நிறுவனங்களில் மூத்த பொறிஞர், மேலாளர், துணைப் பொது மேலாளர், பொது மேலாளர் எனப் பல பதவிப் படிநிலைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்றார்.
சமூகப்பணி
மும்பையில் தமிழ் மொழி, தமிழர் இன நலம் சார்ந்த சமூகப் பணிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் இயங்கி வருபவர். தமிழ் மொழி, தமிழர் உரிமை, இனநலம், சமூகவியல் சார்ந்து மகராட்டிரா மாநிலத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
இதழியல்
"தமிழ் இலெமுரியா" இதழின் முதன்மை ஆசிரியர். பதின்மூன்று ஆண்டுகள் வெளியிட்டார். இந்த இதழ் தமிழ் நாட்டின் சிறந்த இதழ் என்ற தகுதியைப் பெற்று 2018-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் தமிழ்ப் பேராயம் "சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது" பெற்றது.
அமைப்புப் பணிகள்
- பம்பாய் பகுத்தறிவாளர் கழகம்
- பம்பாய் திருக்குறள் பேரவை
- மும்பைத் தமிழர் பேரவை
- திராவிட முன்னேற்றக் கழகம்
- பம்பாய்த் திருவள்ளுவர் மன்றம்
- ஈழ நட்புறவுக் கழகம்
- மும்பை தமிழ் இலக்கிய வளர்ச்சிக் கழகம்
- மராத்திய மாநில எழுத்தாளர் மன்றம்
ஆகிய அமைப்புகளின் நிறுவன அமைப்பாளராகவும், செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு தொண்டாற்றினார்.
இலெமுரியா அறக்கட்டளை
"இலெமுரியா அறக்கட்டளை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இதன்மூலம் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி உதவி அளித்து வருகிறார். கோவிட்-19 தீநுண்மி தாக்கப்பட்ட காலத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு மக்களுக்குப் பேரிடர் காலத்து உதவிகளைக் கொண்டு சேர்த்தார்.
தமிழ் அறக்கட்டளை
தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பெங்களூருவில் தொடங்கப் பெற்ற "தமிழ் அறக்கட்டளை" என்ற அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருபவர். ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் உதவியுள்ளார்.
பொறுப்புகள்
- 2004-ல் இந்திய அரசு மும்பைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறங்காவலாராக நியமனம் செய்தது.
- எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் தென் மத்திய ஆசிய நாடுகளின் குழுமத்தில் பாதுகாப்புத் துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார்.
- அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் அறிவுரைஞராகவும் உள்ளார்.
எழுத்து, உரை
பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டு மொரிஷியஸ், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உரையாற்றியுள்ளார். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட கழக இலக்கியங்கள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் உரையாற்றியும் வருபவர்.
நூல் பட்டியல்
- பார்வையின் நிழல்கள்
- உலகை அறிவோம்
- மனக்குரல்
- துணை எழுத்து
- உலகை மாற்றிய சொல்வெட்டுகள்
- பனித்துளியின் நுனித்துளிகள்
- மறந்து போன நினைவுகள்
- தமிழ் அறிவோம்
- செய்நன் விதைகள்
- செவ்வியல் இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- THE FIFTH PILLAR (ENGLISH)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:11:33 IST