under review

சு. கருணானந்தம்

From Tamil Wiki
கவிஞர் கருணானந்தம்

சு. கருணானந்தம் (சுந்தரமூர்த்தி கருணானந்தம்; ஆனந்தம்; பிறப்பு: அக்டோபர் 15, 1925) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர். திராவிட இயக்கம் சார்ந்து செயல்பட்டார். அஞ்சல்துறையில் பணியாற்றினார். தமிழக அரசுச் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

கருணானந்தம் அக்டோபர் 15, 1925 அன்று, தஞ்சாவூர் மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடலில், சுந்தரமூர்த்தி-ஜோதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். கரந்தை தமிழ்ச் சங்கப் பள்ளியிலும், தஞ்சாவூரில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி கற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார்.

தனி வாழ்க்கை

கருணானந்தம், ஈ.வெ. ராமசாமியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். திராவிட இயக்க இதழாளராகச் செயல்பட்டார். 23 ஆண்டுகள் அஞ்சல்துறையில் பணியாற்றினார். தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். 1976-ல் பணி ஓய்வு பெற்றார். மணமானவர்.

கோவூர் நூல் மொழிபெயர்ப்பு - கருணானந்தம்

இலக்கிய வாழ்க்கை

கருணானந்தம், தினமணி கதிர், முத்தாரம் போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரை, தொடர்கள் எழுதினார். பல இதழ்களில் பல்வேறு புனை பெயர்களில் கவிதைகள் எழுதினார். திராவிடர் கழகக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். வானொலியில் சிறப்புரையாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டார்.

இதழியல்

கருணானந்தம், குடியரசு இதழில் ஈ.வெ. ராமசாமிப் பெரியாருக்கு உதவியாளராகச் செயல்பட்டார். அவ்விதழில் பல கட்டுரைகளை எழுதினார். குடியரசு இதழின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்.

அரசியல்

கவிஞர் கருணானந்தம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திராவிடர் கழக உறுப்பினர் ஆனார். ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு உதவியாளராகச் செயல்பட்டார். ஈரோட்டில், நாற்பதுகளில் திராவிடர் மாணவர் பேரவையைத் தொடங்கினார். அதன் முதல் மாநாட்டை ஈ.வெ.ரா. பெரியார், அண்ணாத்துரையை அழைத்து நடத்தினார். கருணானந்தம் ஈ.வெ.ரா. உருவாக்கிய கருப்புச் சட்டை படையின் முதல் அமைப்பாளராக இருந்தார். திராவிட மாணவர் பயிற்சிப் பாசறையின் அமைப்பாளராகச் செயல்பட்டார். திருத்துறைப் பூண்டியில் முதலாவது திராவிட மாணவர் மாநாடு, முதலாவது கருப்புச் சட்டை மாநாடு ஆகியவற்றை நடத்தினார். ஈ.வெ.கி. சம்பத்துடன் இணைந்து ஈரோட்டில், ‘சிந்தனையாளர் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

பூக்காடு நூலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு

விருதுகள்

  • கருணானந்தம் எழுதிய ‘பூக்காடு’ கவிதை நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
  • இருபதாம் நூற்றாண்டின் காவியக் கவிஞர் பட்டம்.
  • சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில் பாராட்டும் கேடயமும்.
  • பெரியார் பெருந்தொண்டர் பட்டம்.

மறைவு

கருணானந்தம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மறைந்த ஆண்டு பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

நாட்டுடைமை

கருணானந்தத்தின் நூல்கள் அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ஆவணம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கருணானந்தத்தின் நூல்கள் சில சேமிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

கருணானந்தம், சமூகத்தின் மூடப் பழக்கவழக்கங்களை, சாதிக் கொடுமைகளைக் கண்டித்துப் பல கவிதைகளை எழுதினார். கதைகளை கவிதைகளாக-கதைப் பாடல்களாக-எழுதினார். ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் மிக விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அண்ணாவின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தினார். திராவிட இயக்கம் சார்ந்து செயல்பட்ட படைப்பாளிகளுள் ஒருவராக கருணானந்தம் மதிக்கப்படுகிறார்.

கவிஞர் கருணானந்தம் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • பூக்காடு
  • கனியமுது
  • சுமைதாங்கி
  • அண்ணா காவியம்
உரை நூல்கள்
  • அண்ணா சில நினைவுகள்
  • தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
மொழிபெயர்ப்பு
  • டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்

உசாத்துணை


✅Finalised Page