சு.கமலா
- கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)
சு. கமலா (கமலா சுப்பையா-ஜனவரி 14, 1960) மலேசியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர். இதழாசிரியரான இவர் குறுநாவல், சிறுகதை, புதுக்கவிதை, மரபுகவிதை, சிறுவர் பாடல்கள், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். இதழியல் வழி மரபிலக்கிய வளர்ச்சிக்கு முதன்மையான பங்கினை வகித்தார்.
பிறப்பு, கல்வி
சு. கமலா ஜனவரி 14, 1960 அன்று, பினாங்கில் உள்ள பத்து ஃபிரிங்கி மீனவ கிராமத்தில் சுப்பையா குமாரசாமி-ரெங்கம்மாள் சின்னையா இணையருக்குப் பிறந்தார். ஆறு சகோதர சகோதரிகளில் இவர் ஐந்தாவது பிள்ளை ஆவார். இவர் தம் தொடக்கக் கல்வியைப் பத்து ஃபிரிங்கி தேசியப் பள்ளியில் தொடங்கினார். தஞ்சோங் பூங்கா இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரை கல்வி கற்றார். ஆறாம் படிவம், மேல்நிலை வரை இவர் அப்துல்லா முன்ஷி இடைநிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் தமிழ்மொழியைப் பள்ளியில் கற்க இயலாததால், அரிச்சுவடியின் மூலம் ஏழு வயதிலியே தமிழ் எழுத படிக்க கற்றுக்கொண்டார். அடிப்படை இலக்கணத்தைப் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த திரு.ஹமீது சுல்தான் வழி கற்றார்.
தனிவாழ்க்கை
தொடக்கத்தில் இவர் தொழிற்சாலை ஊழியராகவும் காப்புறுதி முகவராகவும் வேலை செய்துள்ளார். 1982-1992 ஆண்டு வரை பினாங்கு நகராண்மைக்கழகத் தொழில் சங்கத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். 1994-ம் ஆண்டில் மே மாதம் 'உங்கள்குரல்' நிறுவனத்தில் உதவியாளராகச் சேர்ந்து பின்னர் 1997-ம் ஆண்டு உங்கள்குரலின் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
1986-ல் இவருக்குத் திருமணம் நடந்தது. கணவரின் பெயர் கந்தசாமி. 2011-ம் ஆண்டு இவரின் கணவர் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2008-ம் ஆண்டு இவர் தமது கண் பார்வையை இழந்தார். இவரின் எழுத்துப்பணிக்கு மகன்களான சிவபாலன் கந்தசாமி, குமணன் கந்தசாமி ஆகிய இருவரும் உதவுகின்றனர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் மலாய்ப் பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் படிவம் வரை கல்வி கற்றதால், மலாய் இலக்கியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார். பின்னர், இடைநிலைப்பள்ளி பயிலும் பருவத்தில், புதுமைப் பித்தன், டாக்டர் மு.வரதராசன், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, சாண்டில்யன் என்று பலதரப்பட்ட இலக்கியப் படைப்புகளை இவர் தேடிப் படித்தார். ஜெயகாந்தனின் எழுத்துகள் மீது இவருக்கு என்றும் தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. பின்னாளில் அனுராதா ரமணனும் வண்ணதாசனும் அசோகமித்திரனும் இவருக்குள் ஈர்ப்பை உண்டாக்கினர். ஆறாம் படிவம் தேர்வு முடிவுக்குக் காத்திருந்த தருணம் 'தமிழ் ஓசை’ நாளிதழின் வரவு இவரின் வாசிப்பு மற்றும் எழுத்து ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. முதலில் இவர் எழுத தொடங்கியது புதுக்கவிதைதான். பின்னர், 'கரும்புள்ளிகள்’ என்ற சிறுகதையை எழுதினார்.
கவிஞர் கரு.திருவரசு, கவிஞர் செ.சீனி நைனா முகம்மது ஆகியரோடு பழகியும் இணைந்து பணியாற்றியும் தமிழ் இலக்கணம் மரபிலக்கியங்களில் அனுபவம் பெற்றார். 1980-களில் ஆதி.குமணன், ஆதி இராஜகுமாரன், அக்கினி சுகுமார், எம்.ஏ.இளஞ்செல்வன் போன்றோரின் படைப்புத்திறனில் ஈர்க்கப்பட்டுப் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினார். 1981-ல் மலாய் மொழியிலும் தமிழ்மொழியிலும் எழுதத் தொடங்கிய இவர், தமிழில் பல சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகளையும் மலாய் மொழியில் சிறுகதைகளையும் மலாய்க் கவிதைகளையும் எழுதினார்.
இவரின் மலாய் சிறுகதைகள் சில மலாய் மொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில் இவரது சிறுகதை இடம்பெற்ற 'டாரி புலாவ் கெ புலாவ்’ என்ற மலாய்ச் சிறுகதைத் தொகுப்பு 1992-ம் ஆண்டு அடலாய்டு, ஆஸ்திரேலியாவில் மெட்ரிகுலேசன் நிலையில் 'மலேசியக் கல்வி’ பயிலும் மாணவர்களுக்கான பாட நூலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு தேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் மலாய்ச் சிறுகதைப் போட்டியில் இவருடைய கதை மூன்றாம் பரிசை வென்றது.
சு.கமலா, 1986-ல் 'தீ மலர்' எனும் குறுநாவல் எழுதியுள்ளார். சா.ஆ. அன்பானந்தன் இலக்கியப்பரிசு அறவாரியம் நடத்திய குறுநாவல் போட்டியில் இவருடைய தீ மலர் குறுநாவல் பரிசு பெற்றது. இவர் எழுதிய இளையோர் கதைகளில் சில கதைகள் எஸ்.பி.எம் தேர்வுத்தாளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னர், இவருடைய 25 சிறுகதைகள் 'ய’ எனும் சிறுகதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது. செ. சீனி நைனா முகம்மது அவர்களின் ஆளுமையின் மேல் உள்ள மதிப்பால் இவர் 'உங்கள் குரல்’ இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார். 2008-ம் ஆண்டில் முற்றாகக் கண் பார்வை இழந்த நிலையிலும், 'உங்கள்குரல்’ ஆசிரியர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தொடர்ந்து 'உங்கள்குரல்’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். கவிஞர் சீனி நைனா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவரின் 'தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலைத் தொகுத்து வெளியிட்டார்.
இலக்கிய செயல்பாடு
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் செயற்குழு உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். பின் அந்தச் சங்கத்தில் பொருளாளர், துணைச் செயலாளர் எனப் பொறுப்பேற்றுப் பின்னர் 12 ஆண்டுகள் செயலாளராகப் பணியாற்றினார். மேலும், 'உங்கள் குரல்’ முன்னெடுப்பில் செ.சீனி நைனா முகம்மது நாடளாவிய நிலையில் நடத்திய வகுப்புகளிலும் பட்டறைகளிலும் இணைந்து பங்காற்றினார்.
தனி ஈடுபாடு
சு.கமலா பொதுச் சேவையிலும் குறிப்பாக அரசியலிலும் சில காலம் ஈடுபட்டிருக்கிறார். பினாங்கு ஆர்கல் சாலையில் அமைந்துள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸ் கிளையின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாகச் செயல்பட்டார். இவர் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இலவச மலாய் வகுப்புகள் நடத்தியுள்ளார். அதனைத் தவிர்த்து பினாங்கு இந்திய கலை கலாசாரக் கழகத்திலும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.
இலக்கிய இடம்
சு.கமலாவின் எழுத்து மு.வரதராசனை அடிப்படையாகக் கொண்டது. நற்பண்புகளையும் நன்னெறி போதனைகளையும் மையமிட்டு இவரது சிறுகதைகளும் நாவல்களும் எழுதப்பட்டுள்ளன. மரபிலக்கியத்தை இதழியல் வாயிலாக முன்னெடுக்கும் பணியில் இவர் முதன்மை பங்கு வகித்துள்ளார் என ம. நவீன் குறிப்பிடுகிறார்.
விருதுகள்/பரிசுகள்
- சா.ஆ.அன்பானந்தன் இலக்கியப் பரிசு வாரியத்தின் குறுநாவல் பரிசு (1986)
- டத்தோ கு.பத்மநாதன் நூல் பரிசு (1987)
- தேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் மலாய்ச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (1987)
- பாரதிதாசன் நூற்றாண்டு விழாச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1991)
- பினாங்கு மாநில அரசு, YTL நிறுவணம், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1997)
- பினாங்கு மாநில அரசு, YTL நிறுவணம், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் முதல் பரிசு (1997)
- மலேசியத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (1999)
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழாப் பணமுடிப்பு (2013)
வாழ்க்கை வரலாறுகள், ஆவணப்படம்
- பெண்ணிய எழுத்தாளர் பினாங்கு சு.கமலா (மு.சேகரன்)
நூல்கள்
குறுநாவல்
- தீ மலர் (1986)
சிறுகதை
- இளையோர் கதைகள் (2013)
- ய (சிறுகதைத் தொகுப்பு,2021)
உசாத்துணை
- கமலா, சு. (2021). ய சிறுகதைத் தொகுப்பு
- மலேசியத் தமிழ் இலக்கியத்துறையில் பெண்கள்-நா.மகேஸ்வரி
- சு. கமலா சிறுகதைகள்: விதைகளை மட்டுமே உற்பத்திச் செய்யும் பூ மரங்கள் - ம. நவீன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:57 IST