சுவாமிநாத பண்டிதர்
- பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)
சுவாமிநாத பண்டிதர் (வண்ணார்பண்ணை சுவாமிநாத பண்டிதர்) (மறைவு: 1937) சைவ நூல்களை அச்சில் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சைவ சொற்பொழிவாளராகவும், பதிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள வண்ணார்பண்ணை என்னும் ஊரில் சின்னத்தம்பிப் பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் தம்பையாப் பிள்ளை. (பிறப்பு வருட விவரங்கள் அறியப்படவில்லை).
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வி கற்றார். பின் ஆறுமுக நாவலரின் மருமகனும் பெரும் புலவருமான ந. ச. பொன்னம்பலபிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். பின் அவருடன் சில காலம் இலங்கையில் உள்ள சைவக்கோவில்களுக்கு பொன்னம்பலபிள்ளையுடன் புராணம் பாடச் சென்றார். பின் தனியாக இலங்கையில் உள்ள கோவில்களுக்கும், இந்தியாவில் உள்ள கோவில்களுக்கும் புராணம் பாடச் சென்றார்.
பதிப்பு பணி
இவர் சென்னைக்கு வந்து 1905-ம் ஆண்டு சைவவித்தியாநுபாலன அச்சியந்திரசாலை என்னும் அச்சகம் ஒன்றை உருவாக்கி சைவ நூல்களை வெளியிட ஆரம்பித்தார். முதன்முதலில் திருவாதவூரடிகள் புராணம் என்ற நூலை 1906-ம் ஆண்டு வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.
பதிப்பித்த நூல்கள்
- சிவஞான போத மாபாடியம்
- திருக்கோவையார் உண்மை
- தேவார அடங்கன்முறை
- திருவிளையாடற் புராணம்
- குமரகுருபரர் பிரபந்தம்
- சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம்
தருமபுர ஆதீனத்தினத்தாரால் வெளியிடப்பட்ட பல நூல்கள் இவரின் மேற்பார்வையின்கீழ் வெளியிடப்பட்டன. இவருக்கு தருமபுர ஆதீனம் வித்வத்சிரோமணி என்ற பட்டம் வழங்கியது.
சொற்பொழிவுகள்
இவர் சைவ சமயத்தின் மேல் பற்று கொண்டு பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சொற்பொழிவாற்றியுள்ளார். இவர் சென்னையில் இருந்த சைவசித்தாந்த சமரசக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று சொற்பொழிவாற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மக்கள் அனைவரும் கூடும் விழாக்களான மகாமகம் போன்ற இடங்களில் சைவ மாநாடுகளை நடத்தி பெரும் கவனத்தை ஈர்த்தார்.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய வித்யாசாலை என்றப் பள்ளியை ஏற்படுத்தி மேலும் பொருள் உதவிகள் செய்து அதை நடத்த உறுதுணையாக இருந்தார்.
மறைவு
தம்முடைய இறுதிகாலத்தை சிதம்பரத்தில் கழித்த சுவாமிநாத பண்டிதர் 1937-ம் ஆண்டு மறைந்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Dec-2022, 19:15:15 IST