சுசித்ரா மாரன்
- மாறன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாறன் (பெயர் பட்டியல்)
- சுசித்ரா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுசித்ரா (பெயர் பட்டியல்)
சுசித்ரா மாரன் (சுசித்ரா) (பிறப்பு செப்டம்பர் 27, 1977) தமிழ்க் கவிஞர், சிறுகதை எழுத்தாளர். தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்
பிறப்பு ,கல்வி
சுசித்ரா மாரனின் இயற்பெயர் சுசித்ரா. தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டையில் செப்டம்பர் 27,1977 அன்று சுகுமாரன்-சௌந்தரவல்லி இணையருக்கு பிறந்தார். பள்ளிக் கல்வியை அம்மன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் , அம்மன்பேட்டை அருள்நெறி உயர்நிலைப் பள்ளியிலும், தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தஞ்சையிலும் படித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (BSc Chemistry) பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் உயிர் வேதியியல் முதுகலைப் பட்டமும்( Msc Biochemisytu) , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (MPhil), இளங்கலை கல்வியியல் (B Ed) ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
- சுசித்ரா மாரன், துணை குடியரசுத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்குகள் அரசு நிகழ்ச்சிகளின் நெறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
- 2001 முதல் 2010 வரை கரன் மற்றும் AMN தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
- தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரி, பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
- தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு விழா நிகழ்வைப் பொதிகை தொலைக்காட்சிக்காகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது, மகன் பிரணவ் உடன் சென்னையில் வசித்து வரும் சுசித்ரா மாரன், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராகப் (Section officer) பணிபுரிந்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தலைமைச் செயலகத்தின் தமிழ் மன்றத்தின் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சுசித்ரா தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்மன்றமே தன் படைப்பூக்கத்திற்கான பயிற்சிக்களம் என்று குறிப்பிடுகிறார்.
சுசித்ரா அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் பெண் கவிஞர்கள் அமைப்பின் 'வல்லினச் சிறகுகள்' கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்
'ஆறு' என்ற தலைப்பிலான சுசித்ராவின் முதல் கவிதை 2018-ல் சொல்வனம் இணைய இதழில் வெளியானது. இவரது கவிதைகள் கணையாழி, கல்கி, ஆனந்த விகடன், 'காமதேனு', 'இனிய உதயம்', 'பாக்யா' ஆகிய அச்சு இதழ்களிலும் 'சொல்வனம்', 'பதாகை', 'கீற்று', 'கதவு', 'காற்றுவெளி', 'கொலுசு' ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகி உள்ளன.
நூல்
சுசித்ரா மாரனின் முதல் கவிதைத் தொகுப்பு அவயங்களின் சிம்ஃபொனி(2021). இந்நூலை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இலக்கிய இடம்
"பழந்தமிழ் பரிச்சயத்துடன் நவீனக் கவிதை முடைகிற சுசித்ரா மாரனின் 'அவயங்களின் சிம்ஃபொனி’ எனும் இத்தொகுப்பு எல்லா விருதுகளுக்கும் உரிய சக்தி பீடமாக விளங்குகிறது" என்று இந்து தமிழ் இணைய இதழ் பாராட்டியுள்ளது.
விருதுகள் மற்றும் பரிசுகள்
- திருப்பூர் இலக்கிய வட்ட விருது (2021).
- தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அசோகமித்திரன் படைப்பூக்க விருது (2021).
- கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சுசித்ரா மாரனின் சிறுகதை "மடையான் மடையான் பூப்போடு" இரண்டாம் பரிசைப் பெற்றது (2020).
- இராஜேந்திர சோழன் கால சிறுகதைகள் என்ற வரலாற்று சிறுகதை போட்டியில் சுசித்ரா மாரனின் 'திருமுக்கூடல்' என்ற கதை சிறப்பு பரிசு பெற்றது.
உசாத்துணை
- அவயங்களின் சிம்ஃபொனி கவிதைத் தொகுப்புக்கான விமர்சனம்
- கல்கி இதழில் பரிசு பெற்ற சிறுகதை (பக். 15
- சுசித்ரா மாரனின் முகநூல் பக்கம்;
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Nov-2023, 09:44:22 IST