under review

சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம்

From Tamil Wiki
Vel1.jpg

மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான ஆலயங்களுள் சுங்கை பட்டாணி நகர மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயம் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது.

ஆலய வரலாறு

1914-ம் ஆண்டு ஆதீனம் அண்ணாசாமி பிள்ளை அவர்களால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. 1924-ல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆலயம் தற்போது இருக்கும் இடத்தில் இதற்கு முன்னர் ஒரு நீதிமன்றம் இருந்துள்ளது. ஆலயம் நிறுவப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிலத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கி பெரிய ஆலயமாகக் கட்டுவதற்கு ஆதீனம் அண்ணாசாமி பிள்ளை ஆவன செய்துள்ளார். ஆதீனம் அண்ணாசாமி பிள்ளையின் மகனான அமரர் அ.சுப்பிரமணியம் ஜே.பி 1940 தொடங்கி 1999 வரை சுமார் அறுபது வருடங்கள் ஆலயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1972-ம் ஆண்டு தொடங்கி 1974- ஆம் ஆண்டு வரை, அமரர் அ. சுப்பிரமணியம் ஜே.பி. அவர்கள் ஆலய நிர்வாகத்தின் கௌரவச் செயலாளராக இருந்தபொழுது, ஆலயத் திருமண மண்டபமான அண்ணாசாமி பிள்ளை திருமண மண்டபத்தைக் கட்டி முடித்துள்ளார். மீண்டும் 1996- ஆம் ஆண்டு அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் ஆலயத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய செயலவை உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதென முடிவெடுத்துள்ளனர். மே 12, 1997அன்று ஆலயத்திற்கு அருகிலேயே தற்காலிக ஆலயம் அமைக்கப்பட்டுப் பாலாலய குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பின்னர், ஆலயத் திருப்பணிகள் தொடங்கியுள்ளன. 1998- ஆம் ஆண்டு முதல் 2000- ஆம் ஆண்டு வரை அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்களின் தலைமையிலேயே புதிய நிர்வாகத்தினர் ஆலயத் திருப்பணி வேலைகளைத் தொடர்ந்துள்ளனர். ஆகஸ்ட் 15, 1999 அன்று அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்களின் மறைவுக்குப் பிறகு சி. நந்தகோபாலன் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆலயத் திருப்பணிகளை நிறைவு செய்தார். புதிய ஆலயத்தின் குடமுழுக்கு ஏப்ரல் 9, 2000 அன்று நடைபெற்றது. மிகப்பெரிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு, அதற்கு இரு பக்கத்திலும் உயரமான வேல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2014- ஆம் ஆண்டு ஆலய நூற்றாண்டு குடமுழுக்கும், கடந்த டிசம்பர் 4, 2022 அன்றுஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டுக் குடமுழுக்கும் நடைபெற்றன.

லண்டன் முருகன்

இந்தியாவில் செதுக்கப்பட்ட முருகன் சிலை லண்டனுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும், பின்னர் அது மீண்டும் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததால் லண்டன் முருகர் என்ற பெயர் பெற்றதாகக் கூறிப்படுகிறது.

ஆலய அமைப்பு

சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத் தோரணவாயில் வடகிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு மேலே முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடு மயில் மீது அமர்ந்துள்ள சுதைச் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைக்கு இருபுறத்திலும் காவடி, பால்குடம், மேள வாத்தியங்கள் தூக்கிச் செல்லும் பக்தர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலை கோபுரமாக நிறுவப்பட்டுள்ளது. கோபுரத்தின் வலதுபுறத்தில் எட்டுக் கரங்களோடு விநாயகரின் சிற்பமும், இடது புறத்தில் வேல் தாங்கிய முருகன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்ளே இடது புறத்தில் நடராஜர் திருவுருவமும் வலது புறத்தில் வேங்கடமுடையான் திருவுருவமும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள் பிரகாரத்தின் மேலே முருகன் வரலாறு சுதை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நடுவே முருகப்பெருமானின் கருவறை அமைந்துள்ளது. கருவறைக்கு நேரே மயில்வாகனமும் கொடிமரமும் உள்ளன. கொடிமரத்தினைச் சுற்றி ஐம்பொன்னிலான பூண் பூட்டியிருக்கிறார்கள். கருவறைக்கு இடது புறத்தில் வசந்த மண்டபம் உள்ளது. இதில் நடராஜரின் ஐம்பொன் திருமேனியோடு, சிவகாமி , நால்வர் பெருமக்கள், கலைமகள், திருமகள் போன்ற தெய்வங்களின் ஐம்பொன் திருமேனிகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு நேர் வெளியே வேல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் அரசமரத்திற்கு கீழே விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகருக்கு அருகே இரண்டு நாகர் சிலைகள் உள்ளன. அவரைச் சுற்றி விநாயகரின் பல்வேறு உருவங்களிலான சுதை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள அன்னதான மண்டபத்திற்கு அப்பால் முனிஸ்வரருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. வலது கையில் சூலமும் இடது கையில் கதையும் பிடித்தபடி அமர்ந்துள்ள அவருக்கு முன்னால் இரண்டு குதிரை சிலைகளும் ஒரு அய்யனார் சிலையும் உள்ளது. அய்யனாருக்கு அருகில் நாய் சிலை ஒன்றும் உள்ளது.

ஆலயத்திற்கு வலது புறத்தில் நவகிரகச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு நேர் பின்னால் மயில் கூண்டு உள்ளது. அதற்கு இடது புறத்தில் வெள்ளித் தேர் நிறுத்தி வைக்கும் கூடாரம் உள்ளது.

மூலவர், உற்சவர் திருவுருவங்கள்
Vel2.jpg

கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி இடது கையைத் தொடை மீது வைத்தபடி மூலவர் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். உற்சவர் திருவுருவம் வள்ளி தெய்வானை சகிதமாய், நாற்கரங்களோடு அமைந்துள்ளது. உற்சவர் திருவுருவம் தைப்பூசத்தின் போது தேரில் வலம் வருகிறது.

ஆலயத் திருவிழா

முருகனுக்குத் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாள் செட்டிபூசம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் நாளில் முருகப்பெருமான் வெள்ளி ரதம் ஏறி சுங்கை பட்டாணி நகரை வலம் வருகின்றான். தைப்பூசத் திருவிழாவில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் வரை கலந்து கொள்கின்றனர். தமிழர்களுக்கு இணையாக சீனர்களும் காவடிகளும் பால்குடங்களும் தூக்கி நேர்த்திக்கடன் செலுத்துவது இத்திருவிழாவின் கூடுதல் சிறப்பாகும். தைப்பூசத்திற்கு காவடி தூக்கும் பக்தர்கள் ஆலயத்திற்கு அருகில் இருந்தும் மற்றும் ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் ஆலயத்திலிருந்தும் தூக்கிக் கொண்டு வருகின்றனர். தைப்பூசத்தோடு சேர்த்து முருகனுக்குரிய ஏனைய திருவிழாக்களும் (வைகாசி விசாகம் போன்றவை) சிறிய அளவில் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.

ஆலய அமைவிடம், திறந்திருக்கும் நேரம்

சுங்கை பட்டாணி தொடர்வண்டி நிலையத்திலிருந்து 700 மீட்டர் தொலைவிலும், நகர உருமாற்று மையத்திலிருந்து (UTC) 550 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Sri Subramaniya Swami Devasthanam,

551, Jalan Kuala Ketil,

Sungai Petani,

Kedah, Malaysia.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

காலை 5.30 தொடங்கி மதியம் 12.00 வரை

மாலை 5.00 தொடங்கி இரவு 9.00 வரை

மேற்கோள்


✅Finalised Page