சுகன்
சுகன் (1965- ஜூன் 5, 2015) தமிழ் இலக்கியச் சிற்றிதழாளர், எழுத்தாளர். சுந்தர சுகன் என்னும் சிற்றிதழை இருபத்தெட்டு ஆண்டுகாலம் தொடர்ச்சியாக நடத்தினார்.
பிறப்பு, கல்வி
சுகனின் இயற்பெயர் க.சுந்தரசரவணன். தஞ்சையைச் சேர்ந்தவர். சுகனின் தாத்தா தியாகி கே.வி.திருஞானம். சுகனின் அம்மா நா.சுசிலா அவருக்கு இலக்கிய அறிமுகத்தை அளித்தவர்.
தனிவாழ்க்கை
சுகன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் மனைவி சௌந்தரவதனா. இரண்டு குழந்தைகள்.
சிற்றிதழ் பணி
ஜூன் 1987 முதல் 'சுகன்' என்னும் சிற்றிதழை கையெழுத்து இதழாக தொடங்கினார். நகலச்சு, ரோனியோ, அச்சு இதழ் என பல வடிவங்களில் தொடர்ந்து 28 ஆண்டுகள் ஒரு மாதம்கூட இடைவெளியின்றி 333 இதழ்கள் வெளியிட்டார். நடுவே பதிவுச்சிக்கல்களால் இதழின் பெயர் 'சுந்தர சுகன்', 'செளந்தர சுகன்' என மாற்றம் பெற்றது. இதழில் தொடர்ச்சியாக அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டார்.
இலக்கியப்பணி
சுகன் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஐந்து கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. அவை சுகன் பதிப்பக வெளியீடாக வந்தன.
பதிப்புப்பணி
சுகன் சுந்தரசுகன் என்னும் பதிப்பகத்தையும் நடத்தினார். வா.மு. கோமு போன்ற பல இளம் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டார்.
அமைப்புப் பணிகள்
- கவிஞர் வெற்றிப்பேரொளியோடு இணைந்து தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தை உருவாக்கினார்
- 'தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை' எனும் அமைப்பைத் தொடங்கி, இலக்கிய நிகழ்வுகளை நடத்தினார்
- 'சுகன் பைந்தமிழ்த் தடாகம்' வழியே தன் மாணவர்களின் படைப்புகளை நூலாக வெளியிட்டார்
மறைவு
சுகன் ஜூன் 5, 2015-ல் மறைந்தார்.
இலக்கிய இடம்
சுகன் சிற்றிதழாளராகவும், இலக்கிய அமைப்பாளராகவும் இலக்கியத்திற்குப் பணியாற்றினார். பல புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்தார்.
நூல்கள்
கவிதை
- சுகந்த சுரங்கள்
- உயிரில் நடந்த உற்சவங்கள்
- காதல் லிபிகள்
- சாமக்கூத்து
- பூஞ்சாலி
சிறுகதை
- ஆழத்திலிருந்து அனலொன்று
உசாத்துணை
- சுகன் அஞ்சலி முருகேஷ் தி ஹிந்து
- சுகன் நினைவுக்கட்டுரை ஜெயதேவன்
- சிற்றிதழ் அறிமுகம் திண்ணை
- சிற்றிதழ் உலகம் அஞ்சலிக்கட்டுரை
- கூடு சிற்றிதழ் கட்டுரை+
+~+ +~
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jun-2025, 03:54:50 IST
