under review

சுகதகுமாரி

From Tamil Wiki
சுகதகுமாரி
சுகதகுமாரி

சுகதகுமாரி (ஜனவரி 22, 1934 – டிசம்பர் 23, 2020) மலையாளக் கவிஞர், பேராசிரியர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி, ஆதரவிழந்தோர் சேவையின் முன்னோடி, களச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

சுகதகுமாரி கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான போதேச்வரன், கார்த்தியாயினி இணையருக்கு மகளாக ஜனவரி 22, 1934-ல் பிறந்தார். சுகதகுமாரியின் தமக்கை ஹ்ருதயகுமாரி கல்வியாளர், பண்பாட்டு ஆய்வாளர். தங்கை சுஜாதா பேராசிரியர், கவிஞர், சூழியல்போராளி. சுகதகுமாரி தத்துவத்தில் முதுகலைப் பட்டம்பெற்று கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

சுகதகுமாரி வி.க.வேலாயுதன் நாயரை மணந்தார். மகள் லஷ்மி. வி.க.வேலாயுதன் நாயர் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்.

அமைப்புப் பணிகள்

சுகதகுமாரி கேரள மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர். பெண்களின் உரிமைக்கான பல போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். கேரளத்தின் மனநோய் காப்பகங்களின் குரூரமான நடத்தைளுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டமே மனநோயாளிகளுக்கான மானுட உரிமைகளைப்பற்றிய சட்டங்களுக்கும் நெறிகளுக்கும் வழிவகுத்தது. சுகதகுமாரியின் போராட்டங்களில் மனித உரிமைகள் குறித்தவை சூழலியலுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை.

பிரகிருதி சம்ரக்ஷண சமிதி

பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்த சுகதகுமாரியை 1982-ல் சைலண்ட் வேலியை காப்பதற்காக நடந்த சூழியல் போராட்டம் மையத்துக்கு கொண்டுவந்தது. சூழியல்போராட்டத்திற்காக 'பிரகிருதி சம்ரக்ஷண சமிதி' என்னும் அமைப்பை உருவாக்கினார்.

அபயா

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க 'அபயா' என்கிற இல்லத்தை நிறுவினார்.

சுகதகுமாரி

இலக்கிய வாழ்க்கை

சுகதகுமாரி 1961-ல் தன் இருபத்தியேழாவது வயதில் 'முத்துச்சிப்பி' என்னும் கவிதைத்தொகுதியை வெளியிட்டார். 1962-ல் வெளிவந்த 'புதுமுளகள்' [புதியகுருத்துகள்] என்னும் நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதியகவிஞர்களில் சுகதகுமாரி மட்டுமே பெண். சூழலியல் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய இடம்

மலையாள விமர்சகர் ஒருவர் ‘அன்னையின் சீற்றம்’ என சுகதகுமாரியின் கவிதைகளை வரையறுத்தார். ”மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. மென்மையான உறுதியான குரலில் பேசுபவை. உணர்ச்சிகரமானவை. கூரிய படிமங்களும் இசைத்தன்மையும் உடையவை.” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

சுகதகுமாரி

விருது

  • 1968-ல் கேரள சாகித்ய அகாடமி விருது
  • 1982-ல் ஒடக்குழல் விருது
  • 1984-ல் வயலார் விருது
  • 2004-ல் சாகித்ய அகாதெமி விருது
  • 2006-ல் பத்மஸ்ரீ விருது
  • 2013-ல் சரஸ்வதி சம்மான் விருது
  • எழுத்தச்சன் விருது

மறைவு

சுகதகுமாரி டிசம்பர் 23, 2020-ல் காலமானார்.

நூல் பட்டியல்

மலையாளம்(கவிதை)
  • முத்துசிப்பி (1961)
  • பதிரபூக்கள் (1967)
  • பாவம் மானவஹிரிதயம் (1968)
  • இருள் சிறகுகள் (1969)
  • இராத்திரி மழ (1977)
  • அம்பாலா மணி (1981)
  • குறிஞ்சி பூக்கள் (1987)
  • துலாவர்ஷப்ப்ச (1990)
  • ரதயே எவிடே (1995)

உசாத்துணை



✅Finalised Page