under review

சிவனணைஞ்ச பெருமாள் கதை

From Tamil Wiki
Sinnananjan kadhai.jpg

சிவனணைஞ்ச பெருமாள் கதை (சின்னணைஞ்சான் கதை) தமிழில் வழக்கில் உள்ள நாட்டார் வாய்மொழி கதைகளுள் ஒன்று. தென்காசி மன்னன் சீவலமாறனின் தங்கை பொன்னுருவியின் மகன் சிவனணைஞ்ச பெருமாள் இக்கதையின் நாயகன். குமரி மாவட்டம் மணிகட்டிப் பொட்டலில் உள்ள கோவிலில் சிவனணைஞ்ச பெருமாள் மூல தெய்வம். சிவனணைஞ்ச பெருமாள் கதையை முனைவர் ஆ. நிர்மலாதேவி சுவடியிலிருந்து பதிப்பித்துள்ளார்.

ஆசிரியர்

சுவடி

சிவனணைஞ்ச பெருமாள் கதையின் சுவடி வடிவம் சிதையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. அதில் இதனை வில்லுப்பாட்டு வடிவில் கதையாக பாடியவர் ஆறுமுகம் பெருமாள் புலவர் என்ற குறிப்பு உள்ளது.

புத்தகம்

இக்கதைப்பாடலை சுவடியிலிருந்து எடுத்து நூலாக முனைவர் ஆ. நிர்மலாதேவி பதிப்பித்தார்.

கதைச்சுருக்கம்

சீவலமாறன் தென்காசி மன்னனாக இருந்தான். அவன் தங்கை பொன்னுருவி தென்காசி, செங்கோட்டையின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த செம்பவளராசனை மணந்தாள். மணமுடித்து பல நாட்கள் ஆனபின்னும் குழந்தை பாக்கியம் இல்லாததால் சீவலமாறன் கலக்கமுற்றான். குறத்தியை வரச்சொல்லும் படி ஆணையிட்டான். குறத்தி வந்து பொன்னுருவியின் கையைப் பார்த்து அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த ஆண் மகன் பிறப்பான். ஆனால் சீவலமாறனின் முன்னோர் ஆண்ட பகுதியில் அமைந்த பகவதி கோவில் இடிபாடுடன் உள்ளது. அதனை மறுசீரமைத்தால் உடனே குழந்தை பேறு உண்டாகும் என்றாள்.

சீவலமாறன் தன் படைகளை அனுப்பி சிதலமடைந்த கோவிலை மீட்டெடுக்க ஆணையிட்டான். பகவதி கோவில் மீட்டெடுக்கப்பட்ட மூன்றாம் நாள் சிவன் பொன்னுருவியின் கனவில் குறுமுனி போல் தோன்றினார். மறுநாளே பொன்னுருவி கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. சிவனின் அருளால் பிறந்ததால் சிவனணைஞ்ச பெருமாள் எனப் பெயரிட்டனர். சிவனணைஞ்ச பெருமாள் ஆயுதப் பயிற்சி, சிலம்பம், அடவு முறைகள் கற்றுக் கொள்ள இருளப்பனாயன் பணிக்கரிடம் அனுப்பப்பட்டான். சிவனணைஞ்ச பெருமாள் அனைத்தையும் கற்று தேர்ந்தது தென்காசி படைவீட்டின் தலைவராக ஆனான்.

தென்காசியில் துணி துவைக்கும் வண்ணான் குலத்தில் சடையன் வண்ணானின் மகளாக சின்னணைஞ்சி பிறந்தாள். உரிய பருவம் எய்தியதும் அவளை மாட வண்ணானுக்கு மனமுடித்து வைத்தனர். சின்னணைஞ்சியும் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஒரு முறை சின்னணைஞ்சி துவைக்க துணி பெறுவதற்காக அரண்மனைக்கு போனபோது அங்கே சிவனணைஞ்ச பெருமாள் அவளைக் கண்டான். கண்டதும் அவள் மேல் காதல் கொண்டான். தன் காதலை நேராக சின்னணைஞ்சியிடம் சொன்னான்.

சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளின் காதலை மறுத்தாள். மறுத்த கையோடு சிவனணைஞ்ச பெருமாளை ஏசியும், திட்டியும் அங்கிருந்து ஓடினாள். சின்னணைஞ்சி தன் காதலை மறுத்ததும் சிவனணைஞ்ச பெருமாள் தன் விருப்பத்தை மறத்தலைவன் வழியாக தூதனுப்பினான். சின்னணைஞ்சி அதையும் மறுக்கவே. மலைக்குச் சென்று வசியமருந்து கொண்டு வந்து வெற்றிலையில் தடவி சிறுக்கன் வழியாக சின்னணைஞ்சியிடம் கொடுத்தான். வசியமருந்தை சாப்பிட்டதும் சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளுக்கு அடிமையானாள். சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளுடன் உடலாலும், உள்ளத்தாலும் ஒன்று பட்டு அவனுடனே தங்கிவிட்டாள்.

ஊருக்குள் வந்த தன் மனைவியை காணாது மாட வண்ணான் அவளை தேடி வந்தான். அவளைக் காணாது அவளது தாய் வீடு சென்று விசாரித்தான். அங்கேயும் அவள் இல்லாததால் அரண்மனைக்குச் சென்று மன்னன் சீவலமாறனிடம் முறையிட்டான். சீவலமாறன் சின்னணைஞ்சியை தேடும் படி தன் படை வீரர்களிடம் ஆணையிட்டார்.

சிவனணைஞ்ச பெருமாள் தங்கியிருந்த மண்டபத்திற்கு பாத்திரங்களில் சோறும், இரண்டு வாழையிலையும் செல்வதைக் காவலர்கள் கண்டனர். உடன் தங்கியிருப்பது வண்ணாத்தி சின்னணைஞ்சி என விசாரித்து அறிந்து மன்னனிடம் முறையிட்டனர். முதலில் சீவலமாறன் தன் மந்திரியையும், தங்கை பொன்னுருவியையும் அனுப்பி சிவனணைஞ்ச பெருமாளுக்கு அறிவுரை கூறும் படி சொன்னார். சிவனணைஞ்ச பெருமாள் சின்னணைஞ்சியை எதன் பொருட்டு விட முடியாது எனச் சொல்லவே இருவரையும் பிடித்து வரும்படி மன்னர் ஆணையிட்டார்.

தென்காசி படை முழுவதும் சென்று சிவனணைஞ்ச பெருமாள் மண்டபத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் சிவனணைஞ்ச பெருமாள் தனியாக போரிட்டான். போரின் இறுதியில் சின்னணைஞ்சி, மறத்தலைவன், இருளப்பனாசான் மூவரும் மறைந்தனர். படை வீரர்கள் சிவனணைஞ்ச பெருமாளை கைது செய்து மன்னரிடம் கொண்டு வந்தனர். சீவலமாறன், ‘தன் மருமகனே ஆனாலும் தாழ்குலப் பெண்ணை விரும்பி வாழநினைத்தவன். இவனை தண்டிக்காமல் விட்டால் இவனே முன்னுதாரணமாக மாறிவிடுவான்’ எனச் சொல்லி சிவனணைஞ்ச பெருமாளின் தலையை வெட்டும் படி ஆணையிட்டார்.

ஊரும், தாயும், சுற்றமும் கூடி அழ சிவனணைஞ்ச பெருமாள் ஊருக்கு வெளியே வெட்டுமிடத்திற்கு அழைத்து வரப்படுகிறான். தலையாரி சிவனணைஞ்ச பெருமாளை வெட்டச் சொல்லி மழுவெடுக்கும் வரை மட்டும் சுவடில் உள்ளது.

சிவனணைஞ்ச பெருமாள் மழுவால் வெட்டி கொல்லப்பட்டதாகவும். அதன் பின் அவன் தெய்வமாகி சிலையானதாகவும் வில்லுப்பாட்டு போன்ற வாய்மொழி கதைகளிலிருந்து அறிய முடிகிறது. சிவனணைஞ்ச பெருமாள் தெய்வமாக குமரி மாவட்டத்தின் மணிகட்டிப் பொட்டலில் கோவில் கொண்டுள்ளான். சிவனணைஞ்ச பெருமாள் வாதையாகவும், துணை தெய்வமாகவும், தெய்வமாகவும் வேறு பல கோவில்களிலும் வழிப்படப்படுகிறான். சிவனணைஞ்ச பெருமாள் கழுவேற்றிக் கொல்லப்பட்டதாகவும் சில பாடல்களில் உள்ளது. சீவலமாறன் படையெடுத்து வந்ததும் சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளிடம் தன் கழுத்தில் கத்தி வைத்து குத்தச் சொல்லியதாகவும், அவ்வாறே செய்து தானும் கழுத்து அறுத்து இறந்ததாகவும் வேறு பாட்டில் உள்ளன.

பிற கதைப்பாடல் பற்றிய குறிப்புகள்

ராமாயணக் கதைகள், கன்னடியன் படைப்போர், ஐவர் ராசாக்கள் கதை, நீலி என்னும் இசக்கி கதை, தோட்டக்காரி கதை, பஸ்மாசுரன் கதை, சாஸ்தா கதை, மோகினி கதை, ஐயனார் கதை போன்ற கதைகள் பாடலின் குறிப்பில் வருவதால் இக்கதைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்ததுள்ளது என முனைவர் ஆ. நிர்மலாதேவி குறிப்பிடுகிறார்.

கிளைக்கதை

சிவனணைஞ்ச பெருமாள் கதையின் கிளைக் கதையாக அரவமுத்து வீரன் கதைப் பாட்டில் உள்ளது.

பார்க்க: அரவமுத்து வீரன் கதை

சின்னம்மை கதை

சின்னணைஞ்சி சின்னம்மை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறாள். ஆறுமுக நாட்டார் ‘சின்னம்மை கதை’ என்ற தலைப்பிலே கதைப்பாடலை பதிப்பித்தார்.

கதைப்பாடல்

இக்கதைப்பாடல் நிகழ்ந்த காலகட்டத்தின் சமூக அடுக்குகளையும் அதிலுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பற்றி பேசுவதாலும், இக்கதைப்பாடல் மூலம் சமூக சாதிய பிரிவினைகளையும், கலப்பு மணம், அதன் விளைவு ஆகியன மைய கதைப்பெருளாக வருவதாலும் இக்கதைப்பாடல் சமூக கதைப்பாடலாக வகைப்படுத்தப்படுகிறது.

பார்க்க: கதைப்பாடல்கள், சமூக கதைப்பாடல்கள், கதைப்பாடல் வகைகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page