சின்மயானந்தர்
சின்மயானந்தர் (பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா) (சின்மயானந்த சரஸ்வதி) (Swami Chinmayananda) (மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) நவவேதாந்தக் கொள்கை கொண்ட துறவி, சின்மயா மிஷனை உருவாக்கியவர், சிவானந்த சரஸ்வதியின் மாணவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர்களில் ஒருவர். ஆன்மிகப் பணிகளுடன் கல்விப் பணிகளையும் சேவைப் பணிகளையும் இணைத்து முன்னெடுத்தார். வேதாந்தத்தை கீதை உரைகள் வழியாக விளக்கினார். அத்வைத வேதாந்த ஞானம், பகவத்கீதை, உபநிடதங்கள் சார்ந்த விரிவுரைகள் நிகழ்த்தினார்.
பிறப்பு, கல்வி
சின்மயானந்தரின் இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன். இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டம் பூதம்பள்ளி என்ற ஊரில் குட்டா மேனன், பாருக்குட்டி இணையருக்கு மே 8, 1916-ல் பிறந்தார். தாய் மூன்றாவது குழந்தைப் பிரசவத்தின் போது இறந்தார். பாலகிருஷ்ணன் தன் தாயின் மூத்த சகோதரியான கொச்சு நாராயணியிடம் வளர்ந்தார். தந்தை கொச்சி அரசரின் மருமகன்.
கேரளத்தின் கொச்சியிலுள்ள ராம வர்மா உயர்நிலைப் பள்ளி, திரிசூர் விவேகோதயம் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். 1932-34-ல் எர்ணாகுளத்திலுள்ள கலைக்கல்லூரியில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். திரிசூர் புனித தாமஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். ஊடகவியல் துறை சார்ந்த கல்வியும் கற்றார்.
பணி
சின்மயானந்தர் படிப்ப முடித்தபின் ஊடகவியல் துறையில் பணியாற்றினார். ராம ராவோ அவர்களின் உந்துதலினால் 'நேஷனால் ஹெரால்ட்' என்ற பத்திரிகையில் தலைமை பத்திரிக்கை நிருபராக பணியாற்றினார். சமூகவியல், பொதுநலக்கோட்பாடு, வரலாறு, கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார். "In Praise of the Postman"; "The Mochi-Symbol of Craftsmanship" ஆகிய கட்டுரைகள் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான வலுவான குரலாக பாராட்டப்பட்டார். பத்திரிக்கை நிருபராக சுவாமி சித்பவானந்தரை நேர்காணல் செய்வதற்காகச் சென்றபோது ஆன்மிக வாழ்க்கையை நோக்கி நகர்ந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டம்
சின்மயானந்தர் 1942-ல் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார். எழுதியும், துண்டு பிரசுரங்கள் எழுதியும், அச்சடித்தும் விநியோகித்தார். அவருக்கு எதிராக வாரெண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய பாகிஸ்தான் நாட்டிலுள்ள அபோட்டாபாதில் தலைமறைவாக இருந்தார். 1944-ல் பஞ்சாப் வந்து விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 1942-ல் பிறப்பித்த வாரெண்ட்டின் படி கைதாகி 1944-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விஷ்வ இந்து பரிஷத்
சின்மயானந்தர் 1964-ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். அதன் ஆன்மிக குருவாக இருந்தார்.
சின்மயானந்தர் உலக இந்து கவுன்சில் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இந்துக்கள் தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 1964-ல் உலகலாவிய கத்தோலிக்க மதத் தலைவரான போப் "International Eucharistic Conference" ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு செய்தார். இதில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. எனவே சின்மயானந்தர் 1964-ல் சாந்தீபனி ஆசிரமத்தில் ஹிந்துக்களுக்கான மாநாடு ஒன்றை கூட்டி போப் சொன்னதை விடவும் அதிகமான மக்களை இந்து மதத்தில் இணைப்பதாக அறிவித்தார். ஷிவராம் ஷங்கர் ஆப்தேவுடன் இணைந்து இந்த கூட்டத்தை 1964-ல் கூட்டினார். அதுவே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. இந்துக்களை விழிப்படையச் செய்வதையும், அவர்களுக்கு உலக அரங்கில் தங்களின் மதத்தைப் பற்றிய பெருமிதத்தை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
ஆன்மிக வாழ்க்கை
பாலகிருஷ்ணன் ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தபின் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். சுவாமி சிவானந்தரிடம் பிப்ரவரி 25, 1949 சிவராத்திரி அன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு சுவாமி சின்மயானந்தா என்ற பெயரைப் பெற்றார். இமயமலையில் சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் எட்டு ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்றார். அவரின் அறிவுரையின்படி ஓராண்டு இந்தியாவெங்கும் பணம் ஏதுமில்லாமல் பயணம் செய்தார். அது அவருக்கு உண்மையான இந்தியாவைக் காண்பிக்கும் என சுவாமி தபோவன் அறிவுறுத்தினார். ஓராண்டுக்குப் பின்னர் தன் முதல் உரையை 'Let us be Hindus' என்ற தலைப்பில் புனேவிலுள்ள கணேசரின் கோவிலில் ஆற்றினார்.
சுவாமிகளின் ஆசியுடன் வேதாந்தத்தை உலகெங்கும் பரப்பினார். இந்திய தத்துவத்துக்கான வருகைதரு பேராசிரியராக அமெரிக்காவில் பணியாற்றினார். ஹார்வெர்ட் பல்கலைக்கழகம், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் மற்றும் பல அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் சிறப்பாசிரியாராக கற்பித்துள்ளார். அத்வைத வேதாந்த ஞானம், பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை உபதேசித்தார்.
மாணவர்கள்
சின்மயானந்தரின் முதன்மையான சீடர் சுவாமி தயானந்தர், தனது குருவின் அத்வைத தத்துவத்தை பரப்புவதில் முதன்மையாக ஈடுபட்டார். சின்மயானந்தர் இருநூற்றைம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கினார்.
சின்மயா மிஷன்
சின்மயானந்தர் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சின்மயா அமைப்பை (Chinmaya Mission) டிசம்பர் 1953-ல் உருவாக்கினார். உலகெங்கும் இதன் வழியாக பல ஆசிரமங்களையும், ஆன்மிக மையங்களையும், பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் ஆரம்பித்தார். உலகெங்கும் முந்நூற்றி ஐம்பது மையங்களில் இயங்கும் சின்மயா மிஷன் இந்தியப் பண்பாடு, கலாச்சாரம், வேதாந்தம் ஆகியவற்றைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நிர்வாகத் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.
சின்மயா மிஷன் - மேற்கு அமெரிக்காவில் 1975-ல் தொடங்கப்பட்டது.
சின்மயானந்தர் பல்வேறு சமய நம்பிக்கையாளர்களுக்கிடையேயான உரையாடலை விரும்பினார். 1971-ல் அமெரிக்காவின் ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த Interfaith seminarஇல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சாந்தீபனி சாதனாலயா
சின்மயானந்தர் அத்வைத தத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் நவீன கால குருகுலத்தைக் கற்பனை செய்தார். மாணவர்கள் மூலம் வேதாந்தத் தத்துவத்தை வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பினார். இதன் பொருட்டு மும்பை நகரில் 'சாந்தீபனி சாதனாலயா' என்ற அமைப்பை உருவாக்கினார். இங்கு ஆங்கில மொழி வாயிலாக வேதாந்தக் கல்வி போதிக்கப்படுகிறது.
பாலவிஹார்
பாலவிஹார் என்பது 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சின்மயா இயக்கத்தின் கிளை. நாடெங்கும் பாலவிஹார் கிளைகள் செயல்படுகின்றன.
சின்மயா யுவகேந்திரா
2003-ல் சின்மயா யுவகேந்திரா (CHYK) அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது உலகளாவிய சின்மயா இயக்கத்தின் இளைஞர் கிளை. 13-28 வயதினருக்காகத் துவங்கப்பட்டது. சுவாமி தேஜோமயானந்தர் சின்மயா யுவகேந்திராவின் நோக்கம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி ஒரு முழுமையான இலக்கை நோக்கி, உன்னத நெறிகளுடனும், உயரிய சிந்தனைகளுடனும் பயணிக்கச் செய்து, அவர்கள் வாழ்வை வெற்றியடையச் செய்வது என்று வரயறுத்தார்.
இளைஞர் ஆளுமைத் திறன் திட்டம்
சின்மயா மிஷன் 'இளைஞர் ஆளுமைத் திறன் திட்டம்' (Youth Empowerment Programme - YEP) என்ற கல்வியும் சேவையும் கலந்த ஒரு வித்தியாசமான உறைவிட குருகுல கல்வித்திட்டத்தைத் துவக்கியது. இத்திட்டத்தின் கோட்பாடு: "அறிந்துகொள்-சேவைபுரி-வளர்ச்சியடை" என்பது. கல்லூரி மாணவர்களுக்கான இத்திட்டம், முற்றிலும் நன்கொடைகளால் செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் தமக்குமுன் நிற்கும் சவால்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றை வெற்றிகொள்வதற்குக் கையாள வேண்டிய, யதார்த்தமான வழிமுறைகளைக் கண்டறிந்து செயலாற்றவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. இதில் தேர்ச்சியுறும் மாணவர்கள், "யுவ வீரர்கள்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சின்மயா இயக்கத்தின் மையங்களில் ஒரு வருட காலம் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களது சேவை, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் இத்திட்டத்தின் மூலம் பெரும் வெற்றி கிட்டியதால், உற்சாகம் கொண்ட யுவவீரர்களை உருவாக்க அமெரிக்காவிலும் YEP தொடங்கப்பட்டது.
தேவியர் குழு
ஒரு வீட்டின் தாய் ஆன்மீக சாதகராகவும் அமைந்துவிட்டால் அவ்வீட்டின் சூழலே முற்றிலும் மாறுபட்டு விடுகிறது. அவர்கள் வெளியே நிகழும் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டுமென்ற அவசியம் எழுவதில்லை என்பது சின்மயானந்தரின் கருத்து.
"நீ ஒருத்தி மாறும்பொழுது உனது சுற்றுப்புறமே மாறுகிறது. தாயான நீயே ஒரு வழிகாட்டி மற்றும் குருவாகிறாய்"-.என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ,முதன் முதலில் பெண்களுக்கென 'தேவியர் குழு' என்ற அமைப்பினையும் சென்னை நகரில் 1958-ம் ஆண்டு சின்மயானந்தர் தொடங்கினார்.
எழுத்து
சுவாமி சின்மயானந்தர் முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பல ஆன்மிக நூல்களுக்கு உரை எழுதினார். மக்களின் ஆன்மீக, மன மறுமலர்ச்சி சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார். பகவத்கீதை, உபநிடதங்கள், வேதங்கள் ஆகியவற்றிற்கு விளக்க உரைகள் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவரது நூல்கள் தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
விருதுகள்/சிறப்புகள்
- 1992-ல் ஐக்கிய நாடுகளின் அவையில் "Planet in Crisis" என்ற உரையை ஆற்றினார்.
- 1993-ல் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் நாடாளுமன்றக் கூட்டத்தில், இந்து ஹோஸ்ட் கமிட்டியால் சுவாமி சின்மயானந்தா இந்து மதத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1993-ல் வைஷ்ணவ ஹிந்து பரிஷத் நடத்திய மதத் தலைவர்களின் மாநாடான வேர்ல்ட் விஷன் 2000'- ல் தனது வாழ்நாள் முழுவதும் மனிதகுலத்திற்கு தன்னலமின்றி சேவை செய்ததற்காக கௌரவிக்கப்பட்டார்
- 1992-ல் அமெரிக்க இதழான "Hinduism Today" இவருக்கு 'இந்த வருடத்தின் இந்து' 'Hindu of the Year' என்ற விருதை வழங்கியது.
- 2015-ல் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அவரின் உருவப்படம் பொறித்த இருபது ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
திரைப்படம்
2014-ல் சின்மயானந்தரின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் 'On a Quest' என்ற திரைப்படமாக சின்மயா அமைப்பால் தயாரிக்கப்பட்டது. 2022-ல் பொதுமக்கள் பார்க்க ஏதுவாக யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 2022-ல் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
பங்களிப்பு
- பிற மதத்தினர் இந்துக்களை மதம் மாற்றும் பரப்புரைகளுக்கு எதிரான அமைப்புகளை ஏற்படுத்தினார்.
- வேதாந்த தத்துவங்கள், உபநிடதங்கள் சார்ந்த உரைகள் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு
- BMI சார்ட் (Body Mind Intellect) என்ற சட்டகத்தை ஏற்படுத்தினார். இந்தக் கருவி இவரின் முக்கியமான கண்டுபிடிப்புக் கருவியாக பெயர் பெற்றது. மனிதனின் அனுபவத்தை வேதாந்த அறிவியல் கொண்டு அளவிடும் கருவி இது.
விவாதம்
சின்மயானந்தர் 1992-ல் ஃப்ராங்ஃபர்ட், ஜெர்மனியில் நிகழ்ந்த ஐந்தாவது ஐரோப்பிய இந்து கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அயோத்யா பிரச்சனையே பிராதனமாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் சின்மயானந்தர் பாபர் மசூதியின் 14 தூண்கள் இந்து கோயிலுக்கு சொந்தமானது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அந்த ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் இவரின் இந்த வரி சர்ச்சைக்குள்ளானது.
மறைவு
சுவாமி சின்மயானந்தா ஆகஸ்ட் 3, 1993-ல் சான் டியேகோ, கலிபோர்னியாவில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர்.
உசாத்துணை
- சின்மயா மிஷன் - வலைதளம்
- A biopic on the life of Swami Chinmayananda - youtube
- ChinmayaChannel - youtube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2026, 13:33:04 IST