under review

சின்னஞ்சிறுகோபு

From Tamil Wiki
சின்னஞ்சிறுகோபு

சின்னஞ்சிறுகோபு (கோபு; க. ராஜேந்திரன்) (பிறப்பு: ஆகஸ்ட் 14, 1953) நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர், இதழாளர், ஓவியர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. ராஜேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய சின்னஞ்சிறுகோபு, ஆகஸ்ட் 14, 1953 அன்று, இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ள முடிகண்டநல்லூரில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். ஓவிய ஆர்வத்தால் ஓவியம் கற்றார். மணமானவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். சின்னஞ்சிறுகோபு விவசாயத்தைத் தனது முழு நேரப் பணியாகக் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

சின்னஞ்சிறுகோபு, பள்ளி மாணவராக இருக்கும்போது பஞ்சாயத்து போர்டு நூலகத்திற்குச் சென்று வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். ஓவியர் கோபுலு மீதும், அவரது ஓவியத்தின் மீதும் உள்ள ஈடுபாட்டால், தனது பெயரை 'சின்னஞ்சிறுகோபு' என்று மாற்றிக்கொண்டார். அப்பெயரிலேயே 'கையெழுத்து இதழ்' ஒன்றை நடத்தினார். அதற்காக எழுத்தாளர் 'சாவி'யின் பாராட்டைப் பெற்றார். முதல் ஒன்றரை வருடங்கள் வார இதழாகவும், அதன்பின் மாத இதழாகவும் வந்த இவ்விதழ், அதன் பின் வருட இதழாக வெளிவந்தது. 2018-ல், பொன்விழா ஆண்டு மலர் வெளியானது.

1969-ல், 'மத்தாப்பூ' என்ற இதழில் கோபுவின் ஓவியத்துடன் அவரது படைப்புகள் பிரசுரமானது. தொடர்ந்து சின்னஞ்சிறுகோபு வரைந்த ஓவியங்களுடன் அவரது நகைச்சுவைப் படைப்புகள் பிரசுரமாகின. முதல் கதை சிற்றிதழ் ஒன்றில் 1970-ல் வெளியானது. 'அணில்', 'முயல்' தொடங்கி, 'ஆனந்த விகடன்', 'குமுதம்', 'குங்குமம்', 'கல்கி', 'மக்கள் குரல்' எனப் பல இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதினார். கோபுவின் பெயரில் ஒரே நேரத்தில் தினமணி உள்ளிட்ட இதழ்களின் தீபாவளி மலர்களில் 100 துணுக்குகள் பிரசுரமாகின. 1978 முதல் 'வடுகவிருட்சியூர் அமுதா' என்ற பெயரில் வாசகர் கடிதங்கள், கட்டுரைகள் எழுதினார். பத்து வருடங்களில் வெளியான கடிதங்களைத் தொகுத்து "வடுகவிருட்சியூர் அமுதாவின் வாசகர் கடிதங்கள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். வல்லிக்கண்ணன் அந்நூலுக்கு மதிப்புரை எழுதி ஊக்குவித்தார். ராஜேந்திரன், அமுதா போன்ற புனை பெயர்களிலும் எழுதினார். சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார்.

நகைச்சுவைத் துணுக்குகள் 3500-க்கும் மேல், கதைகள் 800-க்கும் மேல் எழுதினார். கவிதைகளும், குழந்தைப் பாடல்களும் எழுதியுள்ளார். 2000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆயிரக்கணக்கான வாசகர் கடிதங்களும் எழுதியுள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேல் புத்தக எண்ணிக்கை கொண்ட நூலகத்தைத் தன் வீட்டில் அமைத்துள்ளார்.

விருதுகள்/பரிசு

  • பாரதியாரைப் பற்றி அரும்பு இதழ் நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு
  • பல்வேறு இதழ்கள் நடத்திய போட்டிகளில் முதல் பரிசு தொடங்கி பல்வேறு பரிசுகள்

மதிப்பீடு

சின்னஞ்சிறுகோபு, வெகுஜன இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளையும், பொதுவாசிப்புக்குரிய கவிதைகளையும், ஒரு பக்கக் கதைகளையும், வாசகர் கடிதங்களையும் எழுதிய எழுத்தாளராக அறியப்படுகிறார்.

நூல்

  • வடுகவிருட்சியூர் அமுதாவின் வாசகர் கடிதங்கள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Dec-2025, 09:35:04 IST