under review

சிதம்பரம் பிள்ளை

From Tamil Wiki
சிதம்பரம் பிள்ளை

சிதம்பரம் பிள்ளை (ஜூலை 5, 1899 - நவம்பர் 18, 1970 ) கல்வி, தொழிலாளர் நலன், சமயம் என பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து மக்கள் தொண்டாற்றியவர். எளிய நிலையில் இருந்து தன் உழைப்பின் வழி பெரும் செல்வந்தராக உயர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

கரு. சிதம்பரம் பிள்ளை ஜூலை 5, 1899 அன்று தமிழ் நாடு திருச்சி மாவட்டம் ஓமத்தூரில் கருப்பண்ணன் பிள்ளை -காமாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பத்தில் இவர் இரண்டாவது மகன். தொடக்கக்கல்வியை கிராமத்துப் பள்ளியிலேயே தொடங்கினார். பத்து வயது வரை அப்பள்ளியில் படித்த அவரின் கல்வி தந்தையின் திடீர் மறைவினால் தடைப்பட்டது.

குடும்பம், தொழில்

சி.என் அண்ணாதுரையுடன்
மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நண்பர்களுடன்

தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது பதினான்காவது வயதில் இலங்கைக்குச் சென்று அவரின் பெரியப்பா மகனின் மளிகைக் கடையில் பணி செய்யத் தொடங்கினார். சில ஆண்டுகள் அங்குப் பணி செய்தார். 1916-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் சிதம்பரம் பிள்ளை மலாயாவிற்கு வந்தார். பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ எனும் ஊரில் ஆர்க்காடியா தோட்டத்தில் மூக்கப்பிள்ளை என்பவர் நடத்திக் கொண்டிருந்த மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு மாதச் சம்பளமாக எட்டு வெள்ளி கொடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் அக்கடையில் சிறப்பாக வேலை செய்தபின் தனது சொந்த கடையை ஸ்பைனி தோட்டத்தில் திறந்து வியாபாரம் செய்தார். பின்னர் தெலுக்கன்சன் (தெலுக் இந்தான்) நகரில் ஜாலான் அன்சன் (ஜாலான் பண்டார்) புதிய கடையை அமைத்தார். அதன் தொடர்ச்சியாக நகரின் மையத்தில் ஜாலான் பசார் எண் 5 என்ற இடத்தில் பெரிய பலசரக்குக் கடையைத் திறந்து வெற்றிகரமாக வியாபாரம் செய்தார்.

சிதம்பரம் பிள்ளை 1920-ல் தமிழ் நாட்டில் செல்லாய் அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குமாரசாமி, நடராஜா, பெரியசாமி, கமலாவதி, தனலெட்சுமி ஆகிய ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். சிதம்பரம் பிள்ளையின் மனைவி திருமதி செல்லாய் 1982-ல் தமிழகத்தில் காலமானார்.

தோட்டம் வாங்குதல்

நேருவுடன்

விரிந்த வியாபார அனுபவத்திற்குப் பிறகு சிதம்பரம் பிள்ளை ரப்பர் தோட்டங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆங்கிலேய தோட்ட முதலாளிகள் மலாயாவில் தங்கள் தோட்டங்களை விற்று விட்டு பிரிட்டன் திரும்புவதில் ஆர்வம் காட்டிய சூழலை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவர் ஊத்தான் மெலிந்தான் அருகில் இருந்த தோட்டத்தை வாங்கி அதற்கு காமாட்சி தோட்டம் என தன் அன்னையின் பெயரைச் சூட்டினார். அதுவே அவர் வாங்கிய முதல் தோட்டமாகும். பிறகு தொடர்ந்து ஜாலான் கம்பார் சசக்ஸ் தோட்டம், பீடோர் அருகில் பனோப் போடியன் தோட்டம், சங்காட் ஜோங்கில் ஆறாங்கட்டை தோட்டம் (சிதம்பரம்பிள்ளை தோட்டம்) என பல ரப்பர் தோட்டங்களை வாங்கி பெரும் சொத்துடமையாளராக உயர்ந்தார். கீழ்ப்பேரா மாவட்டத்தில் 3500 ஏக்கர் தோட்டங்களுக்கு அவர் உரிமையாளராக இருந்தார்.

சமூகப் பணிகள்

சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி
சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

ஜாலான் ஜாவாவில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் ஜூன் 20, 1952-ல் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி கட்டுமானப்பணிகள் தொடங்கின. யோகி சுத்தானந்த பாரதி இப்பள்ளியின் அடிகோல் விழாவை நடத்தி வைத்தார். ஜூலை 10, 1954-ல் பேரா சுல்தான் யூசுப் இஜுடின் பள்ளியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். தரமான கல்வி வசதிகளும் இடவசதியும் கொண்ட நாட்டின் பெரிய தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்தது. மேலும், குலோஸ்தர் தோட்டம் (இப்போது பெரி. சிதம் தோட்டம்) என்று அழைக்கப்பட்ட தோட்டத்தில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி சிதம்பரம் பிள்ளை பெயரிலேயே இயங்கி வருகின்றது.

ஆதரவற்றோர் இல்லம்
ஆதரவற்றோர் இல்லம்

ஆதரவற்ற முதியவர்களையும் சிறார்களையும் பாதுகாக்கும் முகமாக கசாஸ் தோட்டத்தில் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை சிதம்பரம் பிள்ளை கட்டினார். இன மொழி மத வேறுபாடுகள் இன்றி வசதி குறைந்த 100 சிறுவர்களும் 100 முதியவர்களும் தங்கும் வசதிகளுடன் இந்த இல்லம் கட்டப்பட்டது. இவ்வாதரவற்றோர் இல்லம் ஜூலை 8, 1970-ல் பேராக் சுல்தானால் திறப்பு விழா கண்டது. இந்த இல்லம் முறையாக இயங்க ஒரு குழுவையும் தனது மற்றொரு தோட்டமான பனப்படியன் தோட்டத்தின் 253 ஏக்கர் நிலத்தின் வருமானத்தையும் சிதம்பரம் பிள்ளை அமைத்து கொடுத்தார்.

தமிழ் எங்கள் உயிர் நிதி
பொன்னாடை போர்த்தும் நிகழ்வில் (கோ.சாரங்கபாணி, அமைச்சர் சம்பந்தன், பேரா. முத்துராசாகண்ணன் ஆகியோருடன்)

மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடக்கப்பட்ட போதும் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதி திரட்டலின் போதும் சிதம்பரம் பிள்ளை, கோ. சாரங்கபாணிக்கு உற்ற துணையாக இருந்து தானும் நிதி கொடுத்து பிறரையும் நிதி கொடுக்க வழியுறுத்தினார். போரா மாநிலத்தின் முகவராக இருந்து அந்த நிதி திரட்டும் பணிக்கு உதவினார்.

வாழ்நாள் முழுதும் பல கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதை கடமையாக கொண்டிருந்தார்.

பொறுப்புகள்

  • தெலுக் இந்தான் ம.இ.கா கிளைத் தலைவர்
  • நகரசபை உறுப்பினர்
  • கீழ்ப்பேரா இந்தியர் சங்கத் தலைவர்
  • கீழ்ப்பேரா தமிழ் இளைஞர் மணிமன்ற ஆலோசகர்
  • கீழ்ப்பேரா தமிழர் சங்க ஆலோசகர்

விருதுகள்

  • 1957-ல் பேரா சுல்தான் ஜே.பி(சமாதான நீதிபதி) விருது வழங்கினார்.
  • 1965-ல் பேரா சுல்தான் டி.பி.எம்.பி எனப்படும் டத்தோ விருது வழங்கினார்.
  • 1969-ல் பேரா சுல்தான் எஸ்.பி..எம்பி எனப்படும் டத்தோஶ்ரீ விருது வழங்கினார்
  • 1970-ல் தெலுக் இந்தான் , பெளலின் தெருவுக்கு சிதம்பரம் பிள்ளை பெயர் சூட்டப்பட்டது
  • மார்சு 24, 1957 கோ.சாரங்கபாணி தலைமையில் சிங்கப்பூரில் பொன்னாடை அணிவித்து ‘வள்ளல்’ பட்டம் வழங்கப்பட்டது. தென்கிழகாசியாவில் இதுவே முதல் பொன்னாடை போர்த்தும் நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறைவு

சிதம்பரம் பிள்ளை பெயரில் சாலை

செம்பனை ஆலை உட்பட பல பெரும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அதில் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற திட்டம் அவரிடம் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றும் முன்னரே அவர் நவம்பர் 18 1970-ல் தனது 71-ஆவது வயதில் மரணமடைந்தார்.

உசாத்துணை

  • ஒரு வள்ளலின் வரலாறு -1997 -பாவலர் திருக்குறள் மணியன்


✅Finalised Page