சிக்கல் ருத்ராபதி பிள்ளை
- ருத்ராபதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ருத்ராபதி (பெயர் பட்டியல்)
- சிக்கல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிக்கல் (பெயர் பட்டியல்)
சிக்கல் ருத்ராபதி பிள்ளை (ஆகஸ்ட் 15, 1865 - ஜூலை 10, 1937) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
ருத்ராபதி பிள்ளை ஆகஸ்ட் 15, 1865 அன்று நாதஸ்வரக் கலைஞர் சுப்பையா பிள்ளை - நாராயணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். கிருஷ்ணஸ்வாமிப் பிள்ளை (நாதஸ்வரம்), சின்னத் தம்பி பிள்ளை என்ற இரு தம்பிகளும் ரத்தினம்மாள் என்ற தங்கையும் ருத்ராபதி பிள்ளையின் உடன்பிறந்தவர்கள்.
கீழ்வேளூர் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளையிடம் பல ஆண்டுகள் குருகுலவாசம் செய்தார்.
தனிவாழ்க்கை
ருத்ராபதி பிள்ளை கூறைநாட்டைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் இருந்தனர்.
மகன்கள்:
- முத்துக்குமார பிள்ளை (நாதஸ்வரம்) - மனைவி: பெரியதெரு நாராயண பிள்ளையின் மகள்
- சுப்பையா பிள்ளை
மகள்கள்:
- மனோன்மணி (கணவர்: கூறைநாடு கிருஷ்ணஸ்வாமி பிள்ளை)
- நாரயணி மீனாக்ஷி (கணவர்: நாதஸ்வர கலைஞர் பெரியதெரு ஸ்ரீனிவாஸ பிள்ளை)
இசைப்பணி
ருத்ராபதி பிள்ளை ராக ஆலாபனையில் சிறந்தவர். இவரது தோடி ஆலாபனையில் சிறப்பால் புதுக்கோட்டைப் பகுதிகளில் தோடி ருத்ராபதி என்ற பெயர் பெற்றிருந்தார். சென்னை, புதுக்கோட்டை, நாகப்பட்டணம் ஆகிய ஊர்களிலும் ராமநாதபுரம், சிவகங்கை முதலிய சமஸ்தானங்களிலும் பல பரிசுகள் பெற்றவர். ராமநாதபுரத்தில் தங்க நாதஸ்வரமும் சிவகங்கையில் தங்கத்தோடாவும் அவர் பெற்ற பரிசுகளில் சில.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
சிக்கல் ருத்ராபதி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- சிக்கல் சுப்பிரமணிய பிள்ளை
- சிக்கல் நாராயணப் பிள்ளை
- காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை
- கீழ்வேளூர் ராமையா பிள்ளை
மறைவு
சிக்கல் ருத்ராபதி பிள்ளை ஜூலை 10, 1937 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2023, 20:30:20 IST