சயந்தன்
சயந்தன் (1980 ஜூன் 5) ஈழத்தமிழ் எழுத்தாளர். புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் வாழ்கிறார். ஈழப் போரிலக்கியத்தின் முக்கிய பிரதிகளான ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களின் ஊடாக வாசகர்கள் மத்தியில் பரந்த அறிமுகத்தைப் பெற்றார்.
பிறப்பு ,கல்வி
இலங்கையின் வடக்கே காரைதீவு என்ற இடத்தில் கதிரேசம்பிள்ளை - கமலேஸ்வரி இணையருக்கும் 1980-ம் ஆண்டு ஜூன் 5--ம் திகதி பிறந்தார். இயற்பெயர் சயெந்திரன். ஆரம்பக்கல்வியை தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் பின்னர், போரினால் இடம்பெற்ற இடப்பெயர்வுகளின்போது, உயர்கல்வியை யாழ் இந்துக்கல்லூரி, முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலயம், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றார்.
தனி வாழ்க்கை
1995-ம் ஆண்டு காரைத்தீவில் இருந்து வன்னிக்கும் 1998-ம் ஆண்டு தமிழகத்திற்கும் இடம்பெயர்ந்த சயந்தன், மீண்டும் இலங்கைக்குச் சென்று 2003-ல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். பின்னர், 2006-ல் சுவிஸ்லாந்துக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் சயந்தன், சுற்றுலாத்துறையில் பணிபுரிந்துவருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சிறுகதைகள்
இலங்கையின் தேசிய பத்திரிகைளில் ஒன்றான தினக்குரலில், 1998-ம் ஆண்டு சயந்தன் என்ற புனைபெயரில் “எங்கட மக்கள்" - என்ற முதலாவது சிறுகதை வெளியானது. தொடர்ந்து, சயந்தனின் பல சிறுகதைகள் 'தினக்குரல்' பத்திரிகையில் வெளியாயின. 2003-ம் ஆண்டு சயந்தனின் “அர்த்தம்" - என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு சரிநிகர் குழுமத்தின் நிகரி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தது. சயந்தனின் சிறுகதைகள் தடம், காலச்சுவடு, அம்ருதா ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
நாவல்கள்
’நாவல்தான் எனக்கு வசப்பட்ட கலை. அதில்தான் நிதானத்தையும் சுதந்திரத்தையும் உணர்கிறேன். சிறுகதை கைக்குள் திமிறுகிற ஓர் உயிரியைப்போல இருக்கிறது’ என்று சயந்தன் குறிப்பிட்டார். தமிழ் நாவல்களில் விரிவான வாழ்க்கைப்பரப்பில், வரலாற்றில் கதைமாந்தர்களை நிறுத்தி ஆராயும் நாவல்களை சயந்தன் எழுதியிருக்கிறார்.
2012-ம் ஆண்டு தமிழினி பதிப்பகத்தின் ஊடாக வெளியான “ஆறாவடு" நாவல், சயந்தனை அறியப்பட்ட எழுத்தாளராக பலரிடம் கொண்டுபோய் சேர்த்தது. 2015-ம் ஆண்டு தமிழினி பதிப்பகத்தின் ஊடாக வெளியான - இலங்கையின் மலையக மக்களின் வாழ்வைப் பேசுகின்ற - ஆதிரை நாவல், சயந்தனை தமிழின் முக்கிய நாவலாசிரியராக முன்னிறுத்தியது. 2021-ல் சயந்தனின் அஷேரா என்னும் நாவல் வெளியாகியது.
பதிப்பகம்
2020-ம் ஆண்டு 'ஆதிரை' என்ற பெயரில் ஆரம்பித்த பதிப்பகத்தின் ஊடாக, சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளை வெளிக்கொண்டுவரும் பணியில் சயந்தன் ஈடுபட்டுள்ளார்.
விருதுகள்
- 2017 - கனடா இலக்கியத் தோட்டத்தின் சிறந்த புனைவுக்கான விருது
- 2018 - "த இந்து" குழுமத்தின் இளம் படைப்பாளருக்கான பிரமிள் விருது
இலக்கிய இடம்
ஈழத்தில் இடம்பெற்ற கொடிய போரையும் அதன் நீட்சிகளில் படர்ந்திருக்கும் துயரையும் இலக்கியமாக புனைந்த மிக முக்கிய எழுத்தாளர் சயந்தன். போர் குறித்த புனிதமான விம்பங்களுக்கு அப்பால், சாதார மனிதர்களின் இன்பமும் கனவும் எது என்ற கேள்விகளின் ஊடாக சயந்தனின் நாவல்கள் ஈழப்போரிலக்கியத்தின் புதிய பக்கங்களை பேசியிருக்கின்றன. தனது மக்களுக்கான விடுதலை வேண்டும் என்ற அகக் கொதிப்பிலிருந்து தனது எழுத்துக்களின் ஊடாக சயந்தன் மெல்லிய நிறைவை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
“ஆறாவடு” நாவல் வெளியானபோது, “தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்" - என்று குறிப்பிட்டார் ஷோபாசக்தி.
“துல்லியமான சித்தரிப்பின் வழியாக எந்தவித ஜோடனைகளும் இன்றி உணர்வுகளைக் கடத்தி விடுகிறார். பெரிய தத்துவ குழப்பங்கள் ஏதுமற்ற மனிதர்களைக் கொண்டே இவ்வளவு அழுத்தமான சித்தரிப்பு உருவாக்குவது ஆச்சரியமளிக்கிறது.’ என்று எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் சயந்தன் பற்றி கூறுகிறார்.
நூல்கள்
நாவல்
- ஆறாவடு (2012 - தமிழினி)
- ஆதிரை (2015 - தமிழினி)
- அஷேரா (2021 - ஆதிரை)
சிறுகதை
- அர்த்தம் (2003 - நிகரி)
- பெயரற்றது (2013 - தமிழினி)
- மொழிபெயர்ப்பு
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- சயந்தனின் ஆறாவடு 2021-ம் ஆண்டு ஜேர்மன் மொழியில் Offene Wunde என்ற பெயரில் வெளியானது.
வெளி இணைப்புக்கள்
- சயந்தனின் இணையம்
- சயந்தன், தமிழினி பக்கம்
- சயந்தன் நேர்காணல்
- சயந்தன் சிறுகதைகள் இணைப்பு
- சயந்தன் படைப்புகள்
- "புனைவுக்கு அனுபவம் ஒரு பொருட்டில்லை" - சயந்தன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Sep-2022, 22:38:13 IST