under review

சம்யுக்தா மாயா

From Tamil Wiki
சம்யுக்தா மாயா

சம்யுக்தா மாயா (பிறப்பு: மே 17, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர். இணைய இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

சம்யுக்தா மாயா (இயற்பெயர் உமா மகேஸ்வரி) தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கோபாலகிருஷ்ணன், சாந்திமதி இணையருக்கு மே 17, 1982-ல் பிறந்தார்.உடன்பிறந்தவர் ஒரு தம்பி. போடிநாயக்கனூரிலுள்ள சிசம்(SCISM) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண்மையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கோவை வேளாண் கல்லூரியில் சூழலியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சம்யுக்தா மாயா ஜூன் 7, 2015-ல் ஆனந்த் என்பவரை மணந்தார். மகள் அமெய்ரா நிவ்ரிதி.

இலக்கிய வாழ்க்கை

சம்யுக்தா மாயாவின் முதல் கவிதை 2008-ல் வெளியானது. அவரது படைப்புகள் உயிரெழுத்து, உயிர்மை, ஆனந்த விகடன், கணையாழி, தினகரன், கல்குதிரை ஆகிய இதழ்களில் வெளிவந்தன. முதல் கவிதைத் தொகுப்பு 'டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு' 2016-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. 'தீ நின்ற பாதம்' இரண்டாவது கவிதைத் தொகுப்பு (2023 சால்ட் பதிப்பகம்).

சம்யுக்தா இணைய இதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

"இக்கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள். அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன. மாயாவின் கவிதைகளில் பெருமளவு புதிய சொற்கள் பிரயோகங்களைக் காணமுடிகிறது. பிரிவும் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் கொண்ட இக்கவிதைகள் சுய இரக்கத்தை முன் வைக்கவில்லை. மாறாகப் பிரிவை, துயரை, தனிமையை எதிர்கொண்ட விதத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன. தனிமையை மிக நுண்மையாக உணர்ந்த ஒருவரின் மென்குரல் போலவே கவிதைகள் ஒலிக்கின்றன." என எஸ். ராமகிருஷ்ணன் சம்யுக்தா மாயாவின் 'டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு' கவிதைத் தொகுப்பு குறித்து மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு, கவிதை தொகுப்பு (2016) (உயிர்மை பதிப்பகம்)
  • தீ நின்ற பாதம், கவிதை தொகுப்பு (2023) (சால்ட் பதிப்பகம்)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jun-2024, 18:42:39 IST