under review

சக்தி ஜோதி

From Tamil Wiki
சக்திஜோதி

சக்தி ஜோதி (மார்ச் 15,1972) தமிழில் எழுதிவரும் கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி, சமூகப்பணியாளர்.

சக்திஜோதி (நன்றி: ஆனந்த விகடன்)

பிறப்பு, கல்வி

சக்தி ஜோதி தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் பாண்டியன், சிரோன்மணி இணையருக்குப் பிறந்தார். சக்தி ஜோதியின் தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர் மின்சாரம் எடுக்கும் திட்டங்களில் இளநிலை கட்டிடப் பொறியாளராகப் பணிபுரிந்தார். தேனி மாவட்டம் மணலார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ஆரம்பக்கல்வி கற்றார். இராயப்பன்பட்டி புனித அலோஷியஸ் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி கற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். “சங்ககால பெண்களின் நிலை” என்கிற தலைப்பில் இளநிலை ஆய்வாளர் பட்டமும், “சங்க இலக்கியத்தில் ஆண் மையக் கருத்துருவாக்கம்” என்கிற தலைப்பில் முனைவர்ப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

சக்தி ஜோதி, சக்திவேலை மணந்தார். கணவர் சக்திவேல் வேளாண்மை, கட்டிட வடிவமைப்பில் பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சக்திஜோதி அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.

சக்திஜோதி

இலக்கிய வாழ்க்கை

சக்தி ஜோதியின் முதல் கவிதை தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்திய இறையியல் மலரில் வெளியானது. சக்தி ஜோதியின் முதல் கவிதைத் தொகுப்பு “நிலம் புகும் சொற்கள்” 2008-ல் வெளியானது. பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 2007 முதல் சுப்ரமணிய சிவா, மகாகவி, இனிய நந்தவனம் போன்ற சிறு பத்திரிக்கைகளில் கவிதைகள் வெளியாகின. உயிர் எழுத்து, காலச்சுவடு, புதுவிசை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளியானது. குங்குமம் தோழி இதழில் சங்கப்பெண்பாற் புலவர்களைப் பற்றிய கட்டுரைத்தொடர் ’சங்கப் பெண் கவிதை’ என்ற நூலாக வெளிவந்தது. காமதேனு இணைய இதழில் தொடராக வந்த கட்டுரைகள் ’ஆண் நன்று பெண் இனிது’ என்ற நூலாக வெளிவந்தது. சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார்.

சக்திஜோதி

இலக்கிய இடம்

”சக்தி ஜோதியின் கவிதைகளில் நான் காண்பது வன்மம் இல்லாத விடுதலைத் தேடல்” என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்

விருது, சிறப்புகள்

  • சிற்பி அறக்கட்டளை விருது.
  • ஏழைகளுக்கான திறன் மேம்பாட்டின் மூலம் அதிகாரம்" என்ற லைவ் விருதை சென்னை லயோலா கல்லூரி அய்யம்பாளையம், ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார மற்றும் கல்வி நல அறக்கட்டளை நிறுவனரான சக்தி ஜோதிக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
  • இந்திய அரசின் தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனாவிற்குச் சென்று வந்துள்ளார். இப்பயண அனுபவங்களை பயணக் கட்டுரையாகவும் ஒரு தொடரை எழுதியுள்ளார்.
  • சாகித்திய அகாடெமி நடத்துகின்ற உலக மகளிர் தினம் , உலகத் தாய்மொழி நாள் கவிதை வாசிப்பு மற்றும் தென்னிந்திய மொழி கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளில் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டு கவிதை வாசித்துள்ளார்.

நூல்கள்

கவிதை
  • நிலம் புகும் சொற்கள் (உயிர் எழுத்து பதிப்பகம், 2008)
  • கடலோடு இசைத்தல் (உயிர் எழுத்து பதிப்பகம், 2009)
  • எனக்கான ஆகாயம் (உயிர் எழுத்து பதிப்பகம், 2010)
  • காற்றில் மிதக்கும் நீலம் (உயிர் எழுத்து பதிப்பகம், 2011)
  • தீ உறங்கும் காடு (உயிர் எழுத்து பதிப்பகம், 2012)
  • சொல் எனும் தானியம் (சந்தியா பதிப்பகம், 2013)
  • பறவை தினங்களைப் பரிசளிப்பவள் (வம்சி பதிப்பகம், 2014)
  • மீன் நிறத்திலொரு முத்தம் (வம்சி பதிப்பகம், 2015)
  • இப்பொழுது வளர்ந்து விட்டாள் (டிஸ்கவரி புக் பேலஸ்,2016)
  • மூங்கிலரிசி வெடிக்கும் பருவம் (டிஸ்கவரி புக் பேலஸ், 2016)
  • வெள்ளிவீதி (டிஸ்கவரி புக் பேலஸ், 2018)
  • கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் (டிஸ்கவரி புக் பேலஸ், 2021)
கட்டுரை
  • சங்கப் பெண் கவிதை (சந்தியா பதிப்பகம், 2018)
  • ஆண் நன்று பெண் இனிது (தமிழ் திசை பதிப்பகம், 2019)

இணைப்புகள்


✅Finalised Page