under review

க. வேந்தனார்

From Tamil Wiki
க. வேந்தனார்

க. வேந்தனார் (நவம்பர் 5, 1918 – செப்டம்பர் 18, 1966) ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், மரபுக்கவிஞர், பேச்சாளர். குழந்தைக் கவிதைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

க. வேந்தனாரின் இயற்பெயர் நாகேந்திரம்பிள்ளை. இலங்கை யாழ்ப்பாணம் வேலணையில் கனகசபைப்பிள்ளை, தையல்நாயகி இணையருக்கு நவம்பர் 5, 1918-ல் பிறந்தார். ஆரம்பக்கல்வியை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலை ஆகியவற்றில் பயின்றார். ஆசிரியரான சோ. இளமுருகனாரின் மூலம் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு தன் பெயரை க. வேந்தனார் என மாற்றிக் கொண்டார். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தின் பிரவேச பால பண்டித தேர்வுகளிலும், மதுரை தமிழ்ச் சங்கத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

க. வேந்தனார் 1947-ல் வேலணையைச் சேர்ந்த நாகலிங்கத்தின் மகள் சவுந்தரநாயகியை மணந்தார். பிள்ளைகள் கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளம்வேள். இளம்வேள் சிறுவயதிலேயே காலமானார்.

ஆசிரியப்பணி

க. வேந்தனார்

க. வேந்தனார் முப்பத்தியிரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 1934-45-ல் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலையில் கல்வி பயின்றார். 1946-66 வரை யாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, நவநீத கிருஷ்ணபாரதி, மறைமலை அடிகள் ஆகியோரின் நட்பு கிடைத்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலான தமிழ் இலக்கிய நூல்களை பண்டித வகுப்புக்களுக்கும் பிற வகுப்புக்களுக்கும் கற்பித்தார். 1964 முதல் இலங்கை அரசின் பாடநூல் வெளியீட்டு சபையின் தமிழ்ப்பகுதி உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

க.வேந்தனார் பத்துப்பாட்டு முதல் பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து அவற்றைப்பற்றிய கட்டுரைகள் எழுதினார். இந்துசாதனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமயக் கட்டுரைகளை எழுதினார். வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். க. வேந்தனார் சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார். கம்பராமாயண அயோத்தியா காண்டத்து மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப் படலம் என்பவற்றிற்கு அவர் உரைகள் எழுதினார். ஸ்ரீலங்கா சைவாதீனத்தின் வெளியீடான 'நாவலன்' பத்திரிக்கையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார். சமகாலச் சூழல்களிலிருந்து கருத்துக்களை எடுத்துக் கொண்டு கதைப்பாடல்கள் பாடினார்.

கவிதைகள்

க.வேந்தனார் ஈழநாடு முதலிய பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார். இலங்கை வானொலியிலும் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகின. க. வேந்தனாரின் கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘கவிதைப் பூம்பொழில்’ என்ற பெயருடன் ஸ்ரீ லங்கா புத்தகசாலை 1964-ல் வெளியிட்டது. இத்தொகுப்பிற்கு சி. கணபதிப்பிள்ளை, சோ. இளமுருகனார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் எழுதினர். சிறுவர்களுக்கான எளிய சந்தநயமிக்க கவிதைகள் எழுதினார். குழந்தைக் கவிஞராக அறியப்படுகிறார்.

விருதுகள்

  • மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார்.
  • சைவசித்தாந்த சமாஜத்தில் சைவப் புலவர் பட்டம் பெற்றார்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார்.
  • திருவாவடுதுறை ஆதீனத்தாரால் ‘தமிழன்பர்’ பட்டம் 1947-ல் பெற்றார்.
  • ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரால் ‘சித்தாந்த சிரோமணி’ (1964) பட்டம் பெற்றார்.

மறைவு

க. வேந்தனார் செப்டம்பர் 18, 1966-ல் காலமானார்.

நூல்கள்

  • திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும் (1961)
  • கவிதைப் பூம்பொழில் (1964, 2010)
  • குழந்தை மொழி (சிறுவர் பாடல்கள், 2010)
பாட நூல்
  • இந்து சமயம்
  • கம்பராமாயணம் - கும்பகர்ணன் வதைப் படலம்
  • கம்பராமாயணம் - காட்சிப்படலமும் நிந்தனைப் படலமும்
  • கம்பராமாயணம் - மந்தரை சூழ்ச்சிப்படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்
  • பாரதியார் பாடல்கள் விளக்கவுரை
கட்டுரை
  • தன்னேர் இலாத தமிழ் (2010)
  • மாணவர் தமிழ் விருந்து (பாகம் 2, 2019)
  • தமிழ் இலக்கியச்சோலை (பாகம் 3, 2019)
  • குழந்தைமொழி (பாகம் 1, 2018)
  • குழந்தைமொழி (பாகம் 2, (2019)
  • குழந்தைமொழி (பாகம் 3, (2019)
இவரைப் பற்றிய நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page