under review

சோ. இளமுருகனார்

From Tamil Wiki
சோ. இளமுருகனார்

சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 – டிசம்பர் 17, 1975) ஈழத்துத் தமிழறிஞர், ஆசிரியர், புலவர், நாடகாசிரியர். ஈழத்து தனித்தமிழியக்க ஆளுமைகளில் ஒருவர், சைவ அறிஞர்.

பிறப்பு, கல்வி

சோ. இளமுருகனாரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இலங்கை, யாழ்ப்பாணம், நவாலியூரில் சோமசுந்தரப் புலவர், சின்னம்மையார் இணையருக்கு ஜூன் 11, 1908-ல் பிறந்தார். நவாலியில் இராமலிங்க உபத்தியாயரிடம் ஆரம்பக் கல்வி கற்றார். கிராமப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கற்றார். தந்தையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், ஜோதிடக் கலையையும் கற்றார். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை 'இளமுருகனார்' என மாற்றிக் கொண்டார்.

பரமேசுவரி

தனிவாழ்க்கை

சோ. இளமுருகனார் பண்டிதை பரமேசுவரியை மணந்தார். சி. கணேசையர், ம.வே. மகாலிங்கசிவம், சு. நவநீதகிருட்டிண பாரதியார் ஆகியோர் இவரின் நெருங்கிய நண்பர்கள். மறைமலை அடிகள், திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தது. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகினார்.

ஆசிரியப்பணி

சோ. இளமுருகனார் ஆனைக்கோட்டை அரசினர் வித்தியாசாலை, கட்டுடை சைவத் தமிழ்ப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இருமொழி ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்வை எழுதி 'பண்டிதர்' பட்டம் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.

கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியராக இருந்த ம.வே. மகாலிங்கசிவம் காலமான பின் அப்பதவிக்கு இளமுருகனார் நியமிக்கப்பட்டார். கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கழகத்திலும் பதினைந்து ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். திருநெல்வேலிப் பரமேசுவரா ஆசிரிய கலாசாலையில் மாவை நவநீதகிருஷ்ண பாரதியாருடன் சேர்த்து விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

சோ. இளமுருகனார் தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிவந்த "சமட்டிக் கட்சி"யின் பெயரைத் தமிழரசுக் கட்சி என மாற்றினார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மொழிக்காக செயல்பட்டார். சோ. இளமுருகனார் எழுச்சியும் நகைச்சுவையும் கலந்த அரசியல் உரைகளை ஆற்றினார்.

தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

சோ. இளமுருகனார் தமிழ்ப் பாதுகாப்புக் குறித்து இவர் பல கட்டுரைகளையும், கண்டனவுரைகளும் ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் எழுதினார். "தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்" என்ற பெயரில் தனித்தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். அரசாங்கத்தை அணுகி தமிழ் இலக்கணப்பாடத்திட்டம் கலந்த பாடநூல்களை எழுதினார். தமிழ் நெடுங்கணக்கை மாற்றியமைக்கவும் சில செயற்கை ஒலிகளைப் புதிதாகப் புகுத்தவும் தமிழக அறிஞர்களும் செய்தித்தாள் ஆசிரியர்களும் முயன்றபோதும் அவற்றை எதிர்த்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இந்து சமயம் என்ற ஒற்றைப் போர்வையின் கீழ் சைவ சமயம் குறுகும் விதத்தை எதிர்த்து கட்டுரைகள் எழுதினார்.

நாடக வாழ்க்கை

சோ. இளமுருகனார் வண. சிங்கராய சுவாமிகளின் வேண்டுகோளின்படி வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தைத் தமிழில் 'கமலேசன்' என்ற பெயரில் மொழிபெயர்த்து அரங்காற்றுகை செய்தார். அவர் பணியாற்றிய உடுவில் மகளிர் கல்லூரியில் தமயந்தி திருமணம், அரிச்சந்திரன், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நாடகங்களை எழுதி மாணவிகளைக் கொண்டு அரங்காற்றுகை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சோ. இளமுருகனார் களப்பணி சார்ந்தும் மரபிலக்கியக் களத்திலும் படைப்புகளை எழுதியுள்ளார். தமிழியக்க அரசியல் மற்றும் சைவ மீட்பியக்கம் ஆகியவற்றுக்காக நாடகங்களையும், அரசியற்பாடல்களையும் எழுதினார். தனித்தழுக்கு முகாக கண்டன உரைகள் பல எழுதினார்.

மரபிலக்கியக் களத்தில் அவர் எழுதிய ஈழத்துச் சிதம்பர புராணம் முக்கியமான படைப்பு. பலவகை விருத்தப் பாக்களையும், அணிகளையும் கொண்டது. இளமுருகனாரின் மனைவிபரமேசுவரி இதற்கு உரை எழுதினார். தனிப் பாடல்கள் பல எழுதினார்.

சோ. இளமுருகனார் நூல்களில் திருமலை யாத்திரை’, ’அறப்போர்க்கு அறைகூவல்’, ’இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி’, ’குயிற்பத்து’ ஆகியவை முக்கியமானவை. ’செந்தமிழ்ச்செல்வம் நூல்' என்னும் நூல் அவருடைய தமிழியக்கப் பற்றை வெளிப்படுத்துவது. அங்கதப் படைப்பு ‘பூரணன் கதை’.

விருதுகள்

  • சோ. இளமுருகனாரின் தமிழ்ப்பணிக்காகப் பல சபைகள் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கின.
  • தமிழறிஞர்கள் 'புலவர்மணி' என்ற அடைமொழி இட்டு அழைத்தனர்.
  • காஞ்சிபுரம் மெய்கணடார் ஆதீன மகா சந்நிதானமாகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 'கவிசிந்தாமணி' என்ற பட்டம் வழங்கினார்.

மறைவு

சோ. இளமுருகனார் தனது 67-வது அகவையில் டிசம்பர் 12, 1975 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

தமிழகத்தில் உருவான தமிழியக்கத்தின் ஈழத்து நீட்சி என சோ.இளமுருகனாரை மதிப்பிடலாம். தனித்தமிழ் , சைவ மறுமலர்ச்சி ஆகியவற்றுக்காக போராடியவர். மரபிலக்கியப் படைப்புகளை எழுதியவர்.

நூல்கள் பட்டியல்

  • செந்தமிழ்ச் செல்வம் (1957)
  • ஈழத்துச் சிதம்பர புராணம்: மூன்றாவது திருத்திண்ணபுரச் சருக்கம் பாட்டும் உரையும்
  • செந்தமிழ் வழக்கு (1963)
  • தமயந்தி திருமணம் (1955)
  • திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம்: பாட்டும் உரையும்
  • பூரணன் கதை (1963)
  • வேனில் விழா
  • உசன்பதித் திருமுருகன் கப்பற் பாட்டு (1961)
  • அறப்போர்க்கு அறைகூவல்
  • புலவர்மணியின் புகழ்மாலை (1976)
  • நவாலியூர்ப் புலவர்மணியின் புகழ்மாலை (1976)
  • சிவபதம்
  • இலக்கணச் சூறாவளி
  • தொல்காப்பிய முதநூற்ச் சூத்திர விருத்தி
  • அரங்கேற்று வைபவம்
  • கவிதைவியல்
  • சொற்கலை
  • கயரோகச்சிந்து
  • சுருக்கெழுத்துச் சூத்திரம்
நாடகம்
  • தமயந்தி திருமணம்
  • கமலேசன்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
அரசியல் கவிதை
  • இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி
  • அறப்போருக்கு அறைகூவல்
  • திருமலை பாதயாத்திரை (1956)
உரைகள்
  • திருமுருகாற்றுப்படை
  • குறிஞ்சிப்பாட்டு
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • மதுரைக்காஞ்சி
  • ஐங்குறுநூறு

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page