under review

கோபப் பிரசாதம்

From Tamil Wiki

கோபப் பிரசாதம் (பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு) பன்னிரு சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் சிற்றிலக்கியம். சிவபெருமானின் மறக் கருணையையும், அறக் கருணையையும் போற்றும் நூல். சிவபெருமான் அருளின் காரணமாகக் கொண்ட கோபத்தையும், செய்த செயல்களையும் பாடும் நூல்.

ஆசிரியர்

கோபப் பிரசாதத்தை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

(கோபம்-சினம் பிரசாதம்-அருள்) கோபப் பிரசாதம் (கோபத்தால் அருளியவை) கோபம் என்ற சொல் ஆகுபெயராய் சிவபெருமான் தன் அடியார்களுக்காக கோபத்தால் நிகழ்த்தி அருளிய செயல்களைக் குறித்த நூல். அருளின் காரணமாகவே சிவபெருமான் தீயவர்களைக் கோபித்ததும், நல்லவர்களைக் காத்ததும் கூறப்படுகிறது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷத்தைக் கழுத்தில் ஏந்தியது, திரிபுரம் எரித்தது, யானைத்தோலை உரித்தது, இராவணனுக்கு அருள் செய்தது, நந்திக்கு கயிலையின் காவலர் பதவி அளித்தது, தக்ஷன் வேள்வியை அழித்தது என மறக் கருணையாலும் அறக் கருணையாலும் செய்த செயல்களைக் கூறி அவை அனைத்தும் கோபப் பிரசாதம்

இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதம்

என்று நக்கீரதேவ நாயனார் கூறுகிறார்.

கோபப் பிரசாதம் 100 அடிகளிலான ஆசிரியப்பாவாக இயற்றப்பட்டது.

பாடல் நடை

தவறுபெரிதுடைத்தே

 தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல்
 மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக்
 காழியன் றருளியும்

உலகம் மூன்றும்
 ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை
 வான்சிரம் அரிந்தும்

சினமும் அருளும்

திரிபுரம் எரிய
 ஒருகணை துரந்தும்
கற்கொண் டெறிந்த
 சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள்
 தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங்
 கோளரி போன்றும்
தோற்றிய வாரணத்
 தீருரி போர்த்தும் (20)
நெற்றிக் கண்ணும்
 நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச்
 சுவரர்க் கருளியும்

உசாத்துணை


✅Finalised Page