under review

கே.வி. சுப்ரமணிய ஐயர்

From Tamil Wiki
Kvs.jpg

கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் (K. V. Subrahmanya Aiyar)(மார்ச் 17, 1875 – நவம்பர் 7, 1969) தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர். தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டவை என்ற கண்டுபிடிப்பின் மூலம் தமிழ் கல்வெட்டாய்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ராஜராஜ சோழனின் செப்பேடுகளையும் பல அரிய கல்வெட்டுகளையும் கண்டடைந்தார்.

பிறப்பு, கல்வி

சுப்ரமணிய அய்யர் 1875-ல் அவிநாசியில் வைத்தி ஐயர்-பார்வதி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். கோவை புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். திருச்சி புனித ஜோசஃப் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும், வேதியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

தனி வாழ்க்கை

சுப்ரமணிய ஐயர் குன்னூரில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். நீலகிரியின் பழங்குடிகள் பற்றிய ஆய்வு மேற்கொண்ட வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் எனும் இந்தியவியல் ஆராய்ச்சியாளரின் உதவியாளராகப் பணிபுரிந்தபோது இந்தியவியல் ஆய்வில் ஆர்வம் கொண்டார்.

கே.வி. சுப்ரமணிய ஐயரின் மகன் கே.எஸ். வைத்தியநாதன் 'Historical geography of Kongu country' என்ற நூலை எழுதிய வரலாற்றாய்வாளர்.

தொல்பொருள் துறை/கல்வெட்டாய்வு

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் நன்றி: தமிழிணையம் தகவலாற்றுப்படை

1904-ல் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி. வெங்கய்யாவின் தலைமையில் இந்திய தொல்பொருள் கணக்கெடுப்புத்துறையில் (Archeological Survey of India) ஊட்டியில் தமிழ் எழுத்தராகப் பணியேற்றார்.

  • 1905-1908 ஆண்டுகளில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெங்கையாவுடன் கல்வெட்டாய்வில் ஈடுபட்டு பல கல்வெட்டுகளைக் காகிதத்தில் நகலெடுத்தார். கோவில்களைப் புதுப்பிக்கும் பணியில் கல்வெட்டுகள் பழுதுபடும் வாய்ப்பு இருப்பதால் அந்தப் பணிகள் தொடங்கும் முன் விரைந்து சென்று கல்வெட்டுகளைப் படியெடுத்தார். திருவாலங்காடு, திருத்தணி, சோழவந்தான் ஆலயங்களில் கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாத்தார்.
  • திருவாலங்காட்டில் சுப்ரமணிய ஐயர் கண்டுபிடித்த ராஜராஜ சோழனின் 35 செப்பேடுகள் சோழ வரலாற்றிற்கான முக்கியமான சான்றுகளாக அமைந்தன.
  • திருவெள்ளறை, ஜம்புகேஸ்வரம், குடுமியான் மலைக் கல்வெட்டுகளை நகலெடுத்தார்.
  • அதியமான் வம்சத்தினர் காலத்து நாமக்கல் அதியேந்திர விஷ்ணு கிரகக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தார்.
  • மிகுந்த முயற்சிக்குப்பின் மாங்குளம், கீழடி, அரிட்டாபட்டி, ஆனமலைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார். அழகர் புளியங்குளத்தில் வட்டெழுத்து, தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களைக் கண்டடைந்து நகலெடுத்தார்.
  • 1922-ல் பல்லவர் காலக் கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். இரண்டாம் நந்திவர்மனின் காலத்தை அவரது 65-ம் வயதில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தினார்.
  • திருநெல்வேலியில் 8 வட்டெழுத்துக் கல்வெட்டுகளைக் கண்டடைந்தார்.
  • டணாய்க்கன் கோட்டையில் ஹொய்சாள மன்னர்களின் வம்சம் பற்றிய தகவல்களையும் நீலகிரிப் படையெடுப்பையும், நீலகிரியின் பாதுகாப்பு அமைப்புகளையும் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தினார்.
  • சுந்தர சோழ பாண்டியன் சோழர்களின் சார்பாக பாண்டிய நாட்டை ஆட்சி செய்ததையும் 'மதுரை கொண்டான்' என்று பெயர்பெற்றதையும் கல்வெட்டாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தினார். மகேந்திரவர்மன் 'மகேந்திர விக்ரமன்', 'மத்தவிலாஸ க்ஷேத்ரகாரி' என்ற பெயர்களாலும் அறியப்பட்டதை பல்லவபுரம் கல்வெட்டுகள் மூலம் அறியச் செய்தார்.
  • 1919-1922 ஆண்டுகளில் திருவிதாங்கூர் தொல்லியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய போது கண்ணனூருக்கருகிலுள்ள ஏழிமலை நன்னனின் எழில்மலையே என்பதை உறுதி செய்தார்.
  • எஸ். வையாபுரிப் பிள்ளை, எல். சாமிக்கண்ணுப் பிள்ளை போன்றவர்களின் ஊக்கத்தினால் சங்க காலம் பற்றிய வரலாற்றாய்வில் ஈடுபட்டார். யாப்பருங்கலம் இயற்றிய அமிர்தசாகரர், கலிங்கத்துப்பரணி, பரிமேலழகர் பற்றிய அவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.
  • திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயத்தின் சமணக் கல்வெட்டுகளை ஆய்ந்து அது ஓர் சமண வழிபாட்டிடமாக இருந்திருப்பதற்கான வாய்ப்பை ஆவணப்படுத்தினார்.
  • தில்லைஸ்தானக் கல்வெட்டுகளில் கொங்கு வழித்தடம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு கொங்கு சோழர்களின் வரலாற்றை நிறுவினார்.
  • அடையபலம் கல்வெட்டுகள் மூலம் அப்பைய தீக்ஷிதரின் காலத்தை நிறுவினார்.

தமிழ் பிராமி எழுத்துக்கள்

பிராமி பண்டைய இந்தியாவில் வழங்கிவந்த எழுத்து வரிவடிவம். தமிழ்நாட்டில் சமணக் குகை கல்வெட்டுகள் அசோகன் பிராமி எழுத்துக்களில் இருந்ததாகக் கருதப்பட்டது. அவற்றின் வடிவம் அசோகன் பிராமியிலிருந்து மாறுபட்டது என்றும் அவை தமிழில் எழுதுவதற்காக பிராமியிலிருந்து உருவாக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துகள் என்றும், சமயச் சார்பான சில பிராகிருதச் சொற்களைத் தவிர இக்கல்வெட்டுகளின் மொழி தமிழே என்றும் கண்டறிந்து 1924 -ல் நிகழ்ந்த மூன்றாவது கீழைத்தேய மாநாட்டில், தமிழ்நாட்டில் காணப்படும் பிராமி எழுத்துக்களைத் ‘தமிழ்-பிராமி’ என்று அடையாளம் காட்டி விளக்கினார். தமிழ் பிராமியில் தமிழுக்கே உரித்தான ழ, ள, ற ஆகிய எழுத்துக்களை அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி எழுத்துக்களை வாசிக்கும் முறையைக் கண்டறிந்தார். தமிழகத்தின் பல சமணர் குகைக் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டன.

கட்டுரைகள்/நூல்கள்/உரைகள்

சுப்ரமணிய ஐயர் செந்தமிழ், 'Indian antiquery' போன்ற இதழ்களில் வரலாற்றாய்வுக் கட்டுரைகள் எழுதினார். 'Indian antiquery' இதழில் எழுதிய 'South Indian Buddhism and Jainism', 'Hero of Madurai Kanchi', Kovilolugu' கட்டுரைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன. இவர் எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகள் 'Epigraphica Indica' இதழில் வெளிவந்தன. 1907-ல் அவ்விதழில் இதழில் நந்திவர்ம பல்லவனின் திருவெள்ளறைக் கல்வெட்டுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதினார்.

தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுப்பின் ஆறாம், ஏழாம், எட்டாம் தொகுதிகளுக்கும், திருவிதாங்கூர் தொல்லியல் வரிசையின் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகளுக்கும் தொகுப்பாசிரியராக இருந்தார். "பண்டைய தக்காணத்தின் வரலாற்றுக் குறிப்புக்கள்" (Historical Sketches of Ancient Dekhan) என்னும் மூன்று தொகுதிகளைக் கொண்ட ஆய்வு நூலையும் எழுதி வெளியிட்டார்.

தார்வாடில் இருந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் கன்னட ஆராய்ச்சி நிலையத்தில் 'Methods of historical research and some dark spots in history of Rashtrakutas' என்ற தலைப்பில் மூன்று பேருரைகள் நிகழ்த்தினார்.

மதிப்பீடு

கே.வி. சுப்ரமணிய ஐயர் தமிழகக் கல்வெட்டாய்வின் முன்னோடியாக மதிப்பிடப்படுகிறார். பல அரிய கல்வெட்டுகளைக் கண்டடைந்து நகலெடுத்தார். சோழ வரலாற்றை எழுதுவதற்கு ஆதாரமான ராஜராஜ சோழனின் செப்பேடுகளைக் கண்டடைந்தார். சமணக் கல்வெட்டெழுத்துக்கள் பிராமியிலிருந்து தமிழ் உச்சரிப்புக்கேற்றவாறு உருவான தமிழ் பிராமியில் அமைந்தவை எனக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தது அவரது குறிப்பிடத்தக்க சாதனை. தமிழக வரலாற்றை வரையரை செய்வதற்கான திருப்புமுனையாக அவரது ஆய்வு அமைந்தது. ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகள் கே.வி. சுப்ரமணிய ஐயரின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் அமைந்தன.

விருதுகள்/பரிசுகள்

லண்டன் Royal Asiatic Society யின் உறுப்பினர்(1912)

இறப்பு

கே.வி. சுப்ரமணிய ஐயர் நவம்பர் 7, 1969 அன்று காலமானார்.

நூல்கள்

  • Aiyar, K. V. Subrahmanya (1917). Historical Sketches of Ancient Deccan. Modern Printing Works.
  • Aiyar, K. V. Subrahmanya (1924). The Earliest monuments of the Pândya country and their inscriptions.

உசாத்துணை

K. V. Subramanya Iyer and his Contribution to South Indian History

தென்னிந்திய கல்வெட்டியல் துறையில் கே.வி. சுப்ரமணிய ஐயரின் பங்களிப்பு, யாக்கை.காம்


✅Finalised Page