under review

கே.எஸ்.சுதாகர்

From Tamil Wiki
சுதாகர்

கே.எஸ். சுதாகர் (22 மார்ச் 1962) ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். முப்பதாண்டுகளுக்கு மேலாக புனைவிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். சிறுகதை, குறுநாவல், விமர்சனம் ஆகியவற்றை தொடர்ந்து எழுதிவருபவர். இலங்கையில் போர்க்காலத்தின்போது பல்வேறு இடம்பெயர்வுகளைச் சந்தித்து, ஆயுதப்படைகளால் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு, தொண்ணூறுகளில் நாட்டைவிட்டு வெளியேறி, தற்போது ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வசிக்கிறார்.

தனி வாழ்க்கை

இலங்கையின் வட மாகாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரின் வடக்கு எல்லைக் கிராமமான வீமன்காமத்தை சொந்த இடமாகக் கொண்டவர் கே.எஸ்.சுதாகர். ஒன்பது சகோதரர்களுக்குப் பிறகு மார்ச் 22 -ஆம் திகதி 1962-ஆம் ஆண்டு பத்தாவதாகப் பிறந்தார். தந்தையார் பெயர் செல்லத்துரை. தாயார் பெயர் சேதுப்பிள்ளை.

கே.எஸ். சுதாகர் வீமன்காமம் ஆங்கில மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர் கல்வியையும், பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டத்தையும் பெற்றார். அங்கு சில மாதங்கள் செயல்முறைப் பயிற்றாசிரியராகவும் பணிபுரிந்தார். அதன்பிறகு, பொறியியலாளராக முறையே லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம், கொழும்பு டொக்கியாட் நிறுவனம் (கப்பல் கட்டுமானம்), தேசிய உபகரண இயந்திரக் கூட்டுத்தாபனம் என்பவற்றில் பணிபுரிந்தார்.

1995-ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்குப் புலம்பெயர்ந்த கே.எஸ்.சுதாகர், 2000-ஆம் ஆண்டு அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது மெல்பேர்னில் தனது மனைவி சர்மிளா மற்றும் மகன் ரிஷி ஆகியோருடன் வசித்துவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

1983-ஆம் ஆண்டு, 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற சிறுகதை செ.சுதா என்ற பெயரிலும் 'வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி’ என்ற கட்டுரை "கதிரொளியான்" என்ற புனைபெயரிலும் ஒரே நேரத்தில் ஈழநாடு வாரமலரில் வந்தன. கே.எஸ். சுதாகர் இலங்கையில் வசித்த காலப்பகுதியில், ஈழநாடு - சிந்தாமணி பத்திரிகைகளிலும் 'உள்ளம்’ என்ற சஞ்சிகையிலும் அவரது படைப்புகள் வந்தன. தவிர, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் 1987-ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் கே.எஸ்.சுதாகரின் சிறுகதை முதற்பரிசைப் பெற்றது.

பரிசுகள்

வல்லமை இணையத்தளம் 2012-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஒரு வருடகாலம் சிறுகதைப்போட்டி ஒன்றை நடத்தி வந்தது. மாதாமாதம் அதில் வருகின்ற சிறுகதைகளை வெங்கட் சாமிநாதன் மதிப்பீடு செய்து, கதைகள் பற்றிய தனது கருத்துக்களையும் இணையத்தளத்தில் எழுதுவார். அதில் இரண்டு முறை சுதாகரின் சிறுகதைகள் முதற்பரிசு பெற்றன.

காக்கைச்சிறகினிலே சஞ்சிகை கி.பி.அரவிந்தன் நினைவாக நடத்திய சிறுகதைப்போட்டி, சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் நடத்திய சிறுகதைபோட்டி, தென்றல் சஞ்சிகை (அமெரிக்கா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), நோர்வே தமிழ்ச்சங்கம், லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம், பேராதனைப் பல்கைக்கழகம் ஆகியவை நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றிருக்கிறார். மொத்தமாக, கே.எஸ்.சுதாகர் 27 சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை பெற்றிருக்கிறார்.

இலக்கிய இடம்

பிசிறற்ற நிதானமான கதை மொழியினால் கே.எஸ். சுதாகர் புலம்பெயர் வாழ்வில் தான் சந்திக்கும் சம்பவங்களையும் மனிதர்களையும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவருகிறார். அவரது கதைகள் மிக நேரடியானவை. புறவயமானவை. புதிய நிலமொன்றில் அதிர்ச்சியூட்டக்கூடிய சம்பவங்களையும் பதற்றம் தரக்கூடிய தருணங்களையும் அவரது மொழி மிக வேகமாக உள்ளீர்த்து பதிவு செய்துவிடுகின்றது.

கே.எஸ்.சுதாகரின் "சென்றுடுவீர் எட்டுத்திக்கும்" சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் "சுதாகரின் எழுத்து எந்த அவலத்தையும், வாழ்க்கையின் எந்த ஏற்ற இறக்கத்தையும், ஆரவாரமோ, இரைச்சலோ இல்லாது, கிட்ட இருந்தும் எட்டப் பார்வையுடன், சொல்ல முடிந்து விடுகிறது. ஒரு பத்திரிகையாளரைப் போல" என்கிறார். (கணையாழி 2014 பிப்ரவரி)

நூல்கள்

  • எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுப்பு - குமரன் பதிப்பகம் 2007)
  • சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர பதிப்பகம் 2014)
  • வளர் காதல் இன்பம் (குறு நாவல் - எழுத்து பிரசுரம் 2021)

உசாத்துணை


✅Finalised Page