under review

குழந்தைப் பதிப்பகம்

From Tamil Wiki

குழந்தைப் பதிப்பகம் (1949) சிறார்களுக்கான நூல்களை வெளியிட்ட பதிப்பக நிறுவனம். பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் இதனைத் தோற்றுவித்தது. அழ. வள்ளியப்பா இதன் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

தோற்றம்

சிறார் இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனர் செ.மெ. பழனியப்பச் செட்டியார், சிறார்களுக்கான நாவல்களை வெளியிடுவதற்காகத் தனியாக ஒரு பதிப்பகத்தைத் தொடங்க எண்ணினார். அழ. வள்ளியப்பாவை அதன் பதிப்பாசிரியராகச் செயல்பட வேண்டினார். 1949-ல் குழந்தைப் பதிப்பகத்தைத் தோற்றுவித்தார். எண் 4, ட்லண்ட் கேட் காலனி, சென்னை - 600006 என்ற முகவரியிலிருந்து குழந்தைப் பதிப்பகம் செயல்பட்டது.

வெளியீடு

’மாதம் ஒரு நாவல்’ என்ற கொள்கையுடன் குழந்தைப் பதிப்பகம் செயல்பட்டது. 36 பக்கங்கள் கொண்ட, படங்களுடன் கூடிய நாவலை இரண்டணா விலையில் வெளியிட்டது. அக்காலத்துச் சிறார் எழுத்தாளர்கள் பலரது நாவல்களை குழந்தை பதிப்பகம் வெளியிட்டு ஊக்குவித்தது. பூவண்ணனின் முதல் நாவல், ‘சபாஷ் மணி’ குழந்தைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. குழந்தைப் பதிப்பகம், ஊர்தோறும் முகவர்களை ஏற்படுத்தி மாதம் ஒரு நூலை வெளியிட்டது.

குழந்தைப் பதிப்பக வெளியீடுகள் பற்றி விஜயா வேலாயுதம், “சிறுவர்கள் இந்தப் புத்தகத்தைக் காத்திருந்து வாங்கிப்படிக்கும் அளவு புகழ் பெற்றது. 36 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை அப்போது இரண்டணா. இது முதலில் நான்கணாவாக இருந்தது. ‘சிறுவர்கள் பெற்றோர் திண்பண்டம் வாங்கத்தருகிற காசுகளைச் சேமித்து இந்தப் புத்தகத்தை ஆர்வமாக வாங்குகிறார்கள். அவர்களால் இந்த விலையைத் தாங்க முடியாது’ என்று கேள்விப்பட்ட பழனியப்ப செட்டியார், இப்புத்தகத்தின் தரத்தையோ, அளவையோ, பக்கங்களையோ துளியும் மாற்றாமல், குறைக்காமல் விலையை இரண்டனாவாக மாற்றினார். செலவுகள் அதிகம் பிடித்தாலும், குழந்தைகள் இலக்கியத்தை படங்களுடன் - மிகக் குறைந்த விலையில் கொடுக்கவே அவர் விரும்பினார். அதற்காக அவர் எந்த லாப நஷ்டத்தையும் எதிர்கொள்ளத் தயாரானார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர்கள்

கீழ்க்காணும் எழுத்தாளர்களின் நாவல்களைக் குழந்தைப் பதிப்பகம் வெளியிட்டது.

மற்றும் பலர்.

நூல்கள்

கீழ்க்காணும் நூல்களை குழந்தைப் பதிப்பகம் வெளியிட்டது.

  • பாட்டிக்குப் போட்டி
  • நல்ல நண்பர்கள்
  • கட்டைவிரல் கிட்டு
  • ராணி பேசினாள்
  • மனோஹரன்
  • மஹேந்திர ஜாலம்
  • கண்ணான கண்ணன்
  • குதிரைச் சவாரி
  • தைரியசாலி
  • சுகுமார்
  • சபாஷ், மணி!
  • குருவியின் சாபம்
  • அபூர்வ வித்தை
  • ஈசாப் கதைப்பாடல்கள்
  • காந்திமதி
  • சிங்கக் குட்டி
  • என் தம்பி

விருதுகள்

குழந்தைப் பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் தமிழக அரசின் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றன. சில நூல்கள் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டன.

மதிப்பீடு

பாடல்களையும், சிறுகதைகளையும் வாசித்து வந்த சிறார்களிடையே நாவல் வடிவத்தைப் பரவச் செய்தது குழந்தைப் பதிப்பகம். மலிவு விலையில் நூல்களை வெளியிட்டு சிறார்களிடையே வாசிப்பார்வம் பெருகக் காரணமானது. சிறார் நாவல்களை வெளியிடுவதற்காகவே தோன்றிய முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றாகக் குழந்தைப் பதிப்பகம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page