under review

குறள் முத்துக்கள் (2016 நூல்)

From Tamil Wiki
குறள் முத்துக்கள் நூல்

குறள் முத்துக்கள் (2016), திருக்குறளின் செய்திகளை வினா - விடை அமைப்பில் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர், மு. இராசாராம்.

வெளியீடு

குறள் முத்துக்கள் நூலை, 2016-ல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மு. இராசாராம் இந்நூலின் ஆசிரியர்.

நூல் அமைப்பு

திருக்குறளை மையமாக வைத்து எத்தனை, எது, எதை, எப்படி, என்ன, எவை, யார் என்பது போன்ற 15 கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை கூறும் வகையில் குறள் முத்துக்கள் நூல் அமைந்துள்ளது. இந்நூலில் 988 கேள்விகள் இடம் பெற்றன. பதில்களில் குறிப்பிடப்படும் கருத்துக்களைக் கொண்ட திருக்குறளின் எண்ணும் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

நூலிலிருந்து சில வினா - விடைகள்

வினா: நமக்குத் தீமை செய்பவர்களுக்குக்கூட நாம் என்ன செய்தல் கூடாது?
விடை: தீமை (குறள் 203).

வினா: மனிதப் பிறப்பின் பயன் என்ன?
விடை: புகழ் பெற்று வாழ்வது (குறள் 231).

வினா: செய்ய வேண்டாத செயல்களைச் செய்தால் என்ன ஆகும்?
விடை: கேடு வரும் (குறள் 466).

வினா: செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாவிட்டால் என்ன வரும்?
விடை: கேடு வரும் (குறள் 466).

வினா: ’மக்கட் பதடி’ எனப் பிறர் தூற்ற வழிவகுப்பது எது?.
விடை: பயனில்லாத சொற்களைப் பாராட்டுவது (குறள் 196).

வினா: ஒருவரிடம் தொடர்ந்து வரும் வறுமை என்ன செய்யும்?
விடை: அறிவைக் கெடுக்கும் (குறள் 532).

வினா: நல்ல துணை என்ன தரும்?
விடை: முன்னேற்றம் (குறள் 651).

வினா: ஒருவரை விடாமல் தொடர்ந்து வந்து வருத்துவது எது?
விடை: தீய செயல்களால் வந்த பகை (குறள் 207).

வினா: முழுமையும் மருந்தாகிப் பயன்படும் மூலிகை மரம் போன்றது எது?
விடை: உலகத்திற்கு உதவும் பெருந்தன்மை உள்ளவரிடம் சேர்ந்த செல்வம் (குறள் 217).

வினா: மேல் உலகம் இல்லையென்றாலும் எது நல்லது?
விடை: ஏழைக்கு உதவுவது (குறள் 222).

மதிப்பீடு

குறள் முத்துக்கள் நூல் திருக்குறளின் பெருமையை, சிறப்பை, திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனைகளைச் சிறப்பித்துக் கூறுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. குறள் முத்துக்கள் நூல், திருக்குறளின் பெருமை பேசும் நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • குறள் முத்துக்கள், முனைவர் மு. இராசாராம், இ.ஆ.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2016



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2024, 09:05:44 IST