under review

குர்அதுல்ஐன் ஹைதர்

From Tamil Wiki
Timescontent.com
The New york times

குர்அதுல்ஐன் ஹைதர்(Qurratulain Hyder)( ஜனவரி 20, 1927 – ஆகஸ்ட் 21, 2007 ஞானபீடப் பரிசு பெற்ற உருது எழுத்தாளர், கல்வியாளர், இதழாளர். அவரது படைப்புகள் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அவை தனி மனிதனின் வாழ்வியலிலும், சமூகத்தின், கலாசாரத்தின் சமநிலையின்மேலும் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. 'அக்னி நதி' பரவலான கவனம் பெற்ற குறிப்பிடத்தக்க படைப்பு. தனது பெரும்பாலான படைப்புகளைத் தானே ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தார். சாகித்ய அகாதெமியின் ஆய்வுநல்கை, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார். இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். 'Grande Dame of Urdu literature' என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

Quar2.jpg

குர்அதுல்ஐன் அலிகாரில் புகழ்பெற்ற உருது எழுத்தாளர்களான சையத் சாஜித் ஹைதர், நஸர் ஜஹ்ரா (Nazar Zahra) இணையருக்கு ஜனவரி 20, 1927 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை அலிகாரில் முடித்தார். உருது கவிஞர் முகமது இக்பால், ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற பிரபலங்களும் கலைஞர்களும் இயல்பாக வந்து செல்லும் இடமாக அவர் வீடு இருந்தது. ஐனி ஆபா( Ainie Apa) என்று அழைக்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே தன் பொம்மைகளுக்காக சிறிய கதைகள் எழுதினார். அவரது பதின்ம வயதுகளில் எழுதிய கதைகள் ஃபூல்(பூ) என்னும் உருது பத்திரிகையில் வெளிவந்தன.

லக்னோவிலுள்ள இசபெல்லா தொபர்ன் கல்லுரியில் (Thoburn college) புதுமுக வகுப்பும், தில்லி இந்திரப்பிரஸ்தா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், லக்னோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஓவியம் வரைவதிலும், இசையிலும் தேர்ச்சி பெற்றார். லண்டனில் வசித்தபோது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நவீன ஆங்கில இலக்கியத்தில் பயிற்சி பெற்றார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த குர்அதுல்ஐன், 1947-ல் இந்தியா சுதந்திரமடைந்த போது தன் தாய் மற்றும் சகோதரனுடன் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். டேராடூனிலிருந்த அவரது இல்லம் தேசப் பிரிவினையால் ஏற்பட்ட கலவரத்தில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம் பெயர முடிவெடுத்தது.

தனி வாழ்க்கை

சிறு வயதிலேயே தந்தையை இழந்த குர்அதுல்ஐன், 1947-ல் இந்தியா சுதந்திரமடைந்த போது தன் தாய் மற்றும் சகோதரனுடன் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். கராச்சியில் தகவல் அலுவலராகவும், பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். லண்டனில் பிபிசி செய்தியாளராகவும், பாகிஸ்தான் தூதரகத்தின் செய்திப்பிரிவிலும் பணியாற்றினார். 1960-ல் இந்தியா திரும்பினார். பம்பாயில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழின் உதவி ஆசிரியராக குஷ்வந்த் சிங்குடன் பணியாற்றினார். இம்ப்ரின்ட்(Imprint) இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். மும்பையில்(அப்போதைய பாம்பே) இருபதாண்டுகள் வசித்தபின் தில்லிக்கருகிலுள்ள நோய்டாவிற்கு இடம் பெயந்தார்.

தில்லியில் உள்ல ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பெர்க்லி, டெக்ஸாஸ், விஸ்கான்சின், அரிஸோனா பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

குர்அதுல்ஐன் ஹதர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ஞானபீடப் பரிசு நன்றி: Hindustan Times

குர்அதுல்ஐன் ஹைதர், உருதுவிலும், ஆங்கிலத்திலும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள், பயண இலக்கியங்களை எழுதினார். தேசத்தின் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளின் நேரடி அனுபவம் அவரது படைப்புகளில் பிரதிபலித்தது. காலத்தைத் தன் கருப்பொருளாகக் கொண்ட மார்சல் ப்ரௌஸ்ட்(Marcel Proust), விர்ஜீனியா வுல்ஃப்(Virginia Woolf), வில்லியம் ஃபாக்னர்(William Faulkner) போன்றோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். குர்அதுல்ஐன் ஹைதரின் படைப்புலகின் மையக்கருவான காலம் வரலாறு மற்றும் பண்பாட்டித் தளங்களில் விரிந்தது..

பிரபலமான 'ஹுமாயூன்'உட்பட பல உருது பத்திரிகைகளில் அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு 'சிதாரோன் சே ஆகே' ( விண்மீன்களுக்கு அப்பால்) 1947-ல் வெளிவந்தது. அவரது மற்ற சிறுகதைத் தொகுப்புகள் 'ஷீஷே கே கர்' (கண்ணாடி வீடு), 'பத்ஜர் கி ஆவாஸ்' (இலையுதிர்காலத்தின் ஓசை') மற்றும் 'ரோஷினி கி ரஃப்தார்'(ஒளியின் வேகம்).

நாவல்கள்
New Directions publishing

குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய பல நாவல்கள் இஸ்லாமியர் அதிகம் வசித்த அவத் பிரதேசத்தின் வரலாற்று, சமூக, பண்பாட்டுச் சூழலை அடிப்படையாகக் கொண்டவை. சஃபினா-ஏ-ஜம்-ஏ-தில்(துயரங்களின் கப்பல்) விடுதலைக்குப்பின்னான அவத் பிரதேசத்தின் அரசியல், சமூக மாற்றங்களை ஓர் பதின்மவயதுப்பெண் வளர்ந்து பக்குவமடையும் பின்னணியில் சித்தரித்தது.

கர்திஷ்-ஏ-ரங்-ஏ-சமன் (பருவ மாற்றம்) 1857-ன் சிப்பாய்க் கலவரத்தின் பின் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றியது.

முத்தொகுப்பு(trilogy)

குர்அதுல்ஐன் ஹைதரின் பின்வரும் மூன்று நாவல்களும் பேசுபொருளின் தன்மையால் முத்தொகுப்பாகக்(trilogy) கருதப்படுகின்றன.

  • இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் துயரம் குறித்த முதல் நாவல் ‘மேரே பி சனம்கானே’ (எனது கோயில்களும்தான்)(My temples too) 1949-ல் வெளியானது. இந்துக்களும், இஸ்லாமியரும் சுமுகமாக வாழ்ந்த லக்னோ பிரதேசத்தின் தனித்தன்மையான கலாசாரம் பிரிவினையில் எழுந்த மத வேற்றுமைகளால் அடைந்த சிதைவு இந்நாவலின் பேசுபொருள்.
  • குர்அதுல்ரஐன் ஹைதர் 1959-ல் எழுதிய அக்னி நதி (ஆக் கா தர்யா)(River of fire) நாவல்அவருடைய மிகப் புகழ்பெற்ற படைப்பு. 3000 ஆண்டு கால இந்திய நாகரிகத்தின் வரலாற்றை வேத காலத்தில் தொடங்கி, பௌத்தம் இந்தியாவில் வேரூன்றிய காலகட்டம் வழியாக 1956-ல் முடியும் நாவல். வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் மனிதர்களின் சிந்தனை, ஆசாபாசங்கள், மோதல்களைச் சித்தரிக்கும் படைப்பு. சம்பா என்ற பெண் கதாபாத்திரம் வரலாறெங்கும் கைவிடப்படுதல், தனிமை, அடிமைத்தனம் என துயருறும் இந்தியப் பெண்ணின் பிரதிநிதி.
  • ஆகிர்-ஏ-ஷப்-கே ஹம்சஃபர்( இரவின் இறுதியின் சகபயணியர்) (Firefiles of the mist) அக்னி நதி நாவலின் தொடர்ச்சியாகவும், முத்தொடருக்கான முத்தாய்ப்பாகவும் கருதப்படுகிறது. ஞானபீடப் பரிசு பெற்றது. இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்த ஒரு தனிக் கலாசாரம் தழைத்த வங்காள மாநிலத்தின் சமூக, பண்பாட்டு,வரலாற்று, அரசியல் மாற்றங்களை இரண்டாம் உலகப்போர்த் தொடக்கம் முதல் கிழக்கு வங்கம் தனி நாடாகிய 1971 வரையான காலகட்டத்தில் தீபாலி சர்கார் என்ற இடதுசாரிப் போராளி மற்றும் அவளைச் சார்ந்தவர்களின் வாழ்வின் பின்னணியில் புலப்படுத்திய நாவல்.
குடும்ப வரலாறு

கர்-ஏ-ஜஹான் -தர்ஜ் ஹை(இந்த உலகத்தின் இயக்கம் தொடர்கிறது)(And the world goes on) குர் அதுல் ஐன் ஹைதர் இறுதியாக எழுதிய நூல். தன்வரலாற்றுத் தன்மைகொண்டது. பொ.யு. 740 தொடங்கி அவரது மூதாதையர்களின் வரலாற்றைத் தேடி, குடும்ப, வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து எழுதிய நூல். பொ.யு. 740 முதல் 1857 வரையான வரலாறு சுருக்கமாகவும் 1857-க்குப் பின்னான வரலாறு விரிவாகவும் அமைந்தது. தன் பெற்றோர்களின் வாழ்க்கை, இஸ்லாமியர்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், பெண் கல்வி மற்றும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.

மொழியாக்கங்கள்

குர்அதுல்ஐன் ஹைதர் ஹென்ரி ஜேம்சின் 'A portrait of a lady', டி.எஸ். எலியட்டின் 'Murder n the Cathedral' போன்ற ஆங்கில இலக்கியங்களை உருதுவில் மொழியாக்கம் செய்தார். புகழ்பெற்ற 'உருதுக் கவிஞர் காலிப்பைப் பற்றிய 'Ghālib: His Life and Poetry' நூலை அலிசர்தார் ஜாஃப்ரியுடன் இணைந்து உருவாக்கினார். தன்னுடைய படைப்புகளைத் தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதைக் கடைப்பிடித்தார். வரிக்குவரி மொழியாக்கம் செய்யாமல் ஆங்கில மொழிக்கேற்றவாறு சில மாற்றங்களுடன் தன் ஆக்கங்களைத் தானே மொழியாக்கம் செய்தார்.

விருதுகள்/பரிசுகள்

  • சாகித்ய அகாதெமி பரிசு (பத்ஜர் கி ஆவாஸ்- Sound of falling leaves நாவலுக்காக((1967)
  • சோவியத் நாட்டின் நேரு விருது(1969)
  • பத்மஶ்ரீ விருது(1984)
  • காலிப் விருது(1985)
  • ஞானபீடப் பரிசு (ஆகிர்-ஏ-ஷப் கே ஹம்சஃபர் நாவலுக்காக) (1989)
  • சாகித்ய அகாதமியின் நிரந்தர ஆய்வுநல்கை (Permanent fellow of Sahithya academy)(1994)
  • உருது அகாதெமியின் பஹதுர் ஷா ஜாஃபர் விருது(2000)
  • இக்பால் விருது
  • பத்ம பூஷண்(2005)

இலக்கிய இடம்

குர்அதுல்ஐன் ஹைதர் இந்தியாவின், உருது மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். உருது மொழியின் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez) என்றும் அழைக்கப்படுகிறார். உருது இலக்கியத்தில் அக்னி நதியின் இடம் ஹிஸ்பானிய இலக்கியத்தில் 'One hundred years of solitude' க்கு இணையானது என்று லண்டன் டைம்ஸ் மதிப்பிட்டது. அதுவரை கவிதையை முக்கிய வடிவமாகக் கொண்டிருந்த உருது இலக்கியத்தை உரைநடை நோக்கிச் செலுத்திய முன்னோடியாக அறியப்படுகிறார்.

குர்அதுல்ஐன் ஹைதரின் பெரும்பாலான படைப்புகள் வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தும் சமூக, பண்பாட்டு மாற்றங்களைப் பேசுபொருளாகக் கொண்டவை. இந்திய விடுதலைக்குப் பின்னான பிரிவினையின் நேரடி அனுபவத்தின் பாதிப்பும் அவரது தத்துவத்தேடல்களும் அவர் படைப்புகளின் அடிநாதமாக அமைகின்றன. நேரடியான வன்முறையைப் பேசாமல், கலாசாரத்திலும், மக்கள் வாழ்வுமுறையிலும் முதல் சுதந்திரப்போர்(1857), நாட்டின் பிரிவினை போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும், கலாசார அழிவுகளையும், மாற்றங்களையும், இடப்பெயர்வின் வலிகளையும், அதன் பின்னான தேசத்தின், சமூகத்தின், தனி மனிதனின் சுயத்தின் மறுவடிவமைப்பையும் பேசின. "அக்னி நதி இந்தியமொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நாவல். அது வரலாற்றை அள்ளமுயலும் விதம்தான் காரணம். வரலாற்றைத் தனக்குரிய முறையில் சுழற்றிக்கொள்கிறார் குர்அதுல்ஐன் ஹைதர்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

குர்அதுல்ஐன் ஹைதர் தனது எழுத்தில் பெரும் வரலாற்று நிகழ்வுகளையும், காலமாற்றங்களையும் குறிக்க மாய யதார்த்தம், குறும்விளக்கங்கள்(vignets), நனவோடை போன்ற உத்திகளைப் பயன்படுத்தினார். நேரியல்புத்தன்மையற்ற (non-linear), நவீனத்துவ, பின்நவீனத்துவ கூறுமுறைகளைக் கையாண்டார். அவரது படைப்புகளில் காலத்தின் வீச்சு பல பரிமாணங்களில் விரிகிறது. பெண்ணியத்தைக் குறிப்பாகப் பேசாவிடினும் ஆண், பெண்களுக்கான பாலின பேதங்களும், பாலின மாறாபடிவுருக்களும் (gender stereotypes) அவரது படைப்புலகில் காணப்படவில்லை.

அவரது அஞ்சலிக்குறிப்பில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் " குர்அதுல்ஐன் ஹைதர் இந்தியாவின், உருது மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அக்னி நதி காலத்தின், வரலாற்றின் பெரும் வீச்சை ஆராய்ந்த சிறந்த படைப்பு. இந்திய மற்றும் உருது இலக்கிய உலகங்கள் ஓர் உயர்ந்த இலக்கிய ஆளுமையை இழந்து விட்டன." என்று குறிப்பிட்டார்.

மறைவு

குர்அதுல்ஐன் ஹைதர் ஆகஸ்ட் 21, 2007 அன்று நோய்டாவில் காலமானார்.

படைப்புகள்

ஆங்கில மொழியாக்கத்தில்
  • A Season of Betrayals: A Short Story and Two Novellas ((Translated by Qurratulain Hyder).)
  • Chandni Begum (Translated by Qurratulain Hyder).
  • Fireflies in the Mist (translated by Qurratulain Hyder)
  • Housing society (Translated by Qurratulain Hyder).
  • My temples too (Translated by Qurratulain Hyder)
  • River of Fire. (Translated by Qurratulain Hyder).
  • Sound of the Falling Leaves.(Translated by Qurratulain Hyder)
  • The Exiles(short stories) (Translated by Nadeem Aslam)

உசாத்துணை


✅Finalised Page