under review

குமிழி ஞாழலார் நப்பசலையார்

From Tamil Wiki

குமிழி ஞாழலார் நப்பசலையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூலான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

குமிழி ஞாழலார் நப்பசலையார், குமிழி என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காதலினால் மகளிரடத்தில் ஏற்படும் பசலை என்பதை சிறப்புற உரைப்பதால் நல்பசலையார் என்று குறிப்பிட, அது, நப்பசலையார் என மருவியிருக்கக்கூடும். இவர் ஒரு பெண் புலவர். இவர், “குமுழி ஞாழல் நப்பசையார்” என்றும் அழைக்கப்பட்டார். குமிழி ஞாழலார், அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 160) மட்டும் பாடியுள்ளார்.

பாடலால் அறியவரும் செய்திகள

ஆமை முட்டை
  • (வட்டு - உருண்டை அல்லது குண்டு). வட்டை உருட்டி விளையாடுவது தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. யானையின் கொம்பினால் செய்யப்பட்ட வட்டு உருண்டைக்கு ஆமை முட்டை உவமையாகிறது.
  • ஆமை கோட்டுவட்டு அளவில் முட்டையிடும். உப்பங்கழியில் படர்ந்திருக்கும் அடும்புக் கொடியையும், வெண்மணலையும் சிதைத்து மணலுக்குள் முட்டையிட்டு, மணலை மூடிவிட்டுச் சென்றுவிடும். அந்த முட்டை புலவு நாற்றம் வீசும்.
  • ஆமையின் கணவன் ஆமை முட்டைகளை அடைகாக்கும் வரை பாதுகாக்கும் என்ற செய்தியில் தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற கருத்து உள்ளுறை உவமமாக அமைகிறது.

பாடல் நடை

அகநானூறு 160

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

(ஆமை முட்டையிடும். கோட்டுவட்டு அளவில் முட்டையிடும். உப்பங்கழியில் படர்ந்திருக்கும் அடும்புக் கொடியையும், வெண்மணலையும் சிதைத்து மணலுக்குள் முட்டையிடும். மணலை மூடிவிட்டுச் சென்றுவிடும். அந்த முட்டை புலவு நாற்றம் வீசும். ஆமைக்குஞ்சு (பார்ப்பு) வெளிவரும் காலத்தில் தாய் ஆமையின் கணவன் அங்கு வந்து குஞ்சுகளைப் பாதுகாக்கும். இப்படிப்பட்ட சேர்ப்பு நிலத்தின் (கடல் சேர்ந்திருக்கும் நிலம்) தலைவன் உன் காதலன். அவன் அப்போதெல்லாம் கள்ளத்தனமாக இரவில் வருவான். குதிரை பூட்டிய தேரில் வருவான். குதிரையை ஓட்ட முள் குத்தியிருக்கும் தார்க்கோலைப் பயன்படுத்த மாட்டான். பயன்படுத்தினால் குதிரை பலர் காதுகளுக்குக் கேட்கும்படிக் குதிரை சிறந்து தாவி ஓடும். அதனைத் தவிர்க்க வாள்நூல் சவுக்கு (வள்பு) பயன்படுத்துவான். அப்போது குதிரை எழில்நடை போட்டுக்கொண்டு வரும். தேர் உப்பங்கழி நீரில் நீந்துவது போல் செல்லும். தேர்ச்சக்கரம் கழியில் பூத்திருக்கும் நெய்தல் கொடியின் மேல் ஏறும். அப்போது நெய்தல் பூ பாம்பு படம் எடுப்பது போலத் தலையைத் தூக்கும். இப்படி இரவு வேளையில் திருட்டுத்தனமாக வருவான்.இப்போது ஒளிமறைவு இல்லாமல் வருகிறான். பகலில் வருகிறான். கலகலப்பாக ஒலிக்கும் தோழரோடு (இளையர்) வருகிறான். தன் வல்லமை மிக்க வாயால் அலர் தூற்றிய சிற்றூரில் வாழும் மக்கள் காணும்படி வருகிறான். குதிரை சிறந்து பாயும்படி வருகிறான். திருமணம் செய்துகொள்ள வருகிறான். எனது நிலையில்லாத நெஞ்சம் நடுங்கியது, அது இரங்கத்தக்கது, ஒடுங்கிய கரியகூந்தலையுடைய தோழியே! நினக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ?)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Mar-2023, 06:56:27 IST