under review

குமாரசெல்வா

From Tamil Wiki

To read the article in English: Kumaraselva. ‎

எழுத்தாளர் குமார செல்வா

குமாரசெல்வா (செல்வகுமார்) (பிறப்பு: மார்ச் 30, 1964) எழுத்தாளர், கவிஞர், இதழாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். குமரி விளவங்கோடு வட்டார வழக்கில் பல படைப்புகளைத் தந்தார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

செல்வகுமார் என்னும் இயற்பெயரை உடைய குமார செல்வா, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோட்டில், மார்ச் 30, 1964 அன்று, செல்லையன் - செல்லத்தாய் இணையருக்குப் பிறந்தார். ஏழு வயதில் தந்தையை இழந்தார். வறுமையான சூழலில் வளர்ந்தார். ஆரம்பக்கல்வியை மார்த்தாண்டம் எல்.எம்.ஜே.பி.எஸ் பள்ளியில் படித்தார். நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியில் பயின்றார். மேல்நிலைப் படிப்பை மார்த்தாண்டம் அரசு ஆடவர் மேல்நிலைப்பள்ளியில் கற்றார்.

மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில இளங்கலை வரலாறு பயின்றார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து இளம் முனைவர் (M.Phil) பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ‘தேசிய இன விடுதலைப் போரில் தற்கால ஈழத்தமிழ்க் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

குமாரசெல்வா

தனி வாழ்க்கை

குமாரசெல்வா, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில், தமிழ்த் துறை மற்றும் தமிழாய்வு மையத் தலைவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். மனைவி டாக்டர் சரோஜாபாய், ஹோமியோபதி மருத்துவர். மகன்கள்: சீகன்பால்க், தியான்செல்வ்.

இலக்கிய வாழ்க்கை

குமாரசெல்வா, தமிழாசிரியர் மூலம் மரபுக்கவிதைகள் எழுதக் கற்றார். பேராசிரியர் ஐசக் அருமைராசனால் நவீன இலக்கிய அறிமுகம் பெற்றார். சுந்தர ராமசாமி மூலம் எழுத்து நுணுக்கங்கள் கைவரப் பெற்றார். குமாரசெல்வாவின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘கய்தமுள்’, 1988-ல் வெளியானது. குமார செல்வா எழுதிய முதல் நாவல், ‘குன்னிமுத்து’. பருவம் எய்தியும் வயதுக்கு வராத இருளி என்ற பெண்ணின் அவல வாழ்க்கையைக் கூறிய 'குன்னிமுத்து' நாவல், வரவேற்பையும், விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றது. குமாரசெல்வா, விளவங்கோடு வட்டாரத்தின் பின்புலத்தில் தனது படைப்புகளை எழுதினார். குமாரசெல்வாவின், சிறுகதைகளான ‘சுருட்டுவாள்’, ‘ஈஸ்டர் கோழி’ போன்றவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன.

குமாரசெல்வா, பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்வேறு ஆய்வரங்குகளில் கட்டுரைகள் வாசித்தார். தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

இதழியல்

குமாரசெல்வா, ‘பாலை’ என்னும் சிற்றிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘நம் வாழ்வு’ வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘கேப்பியார்’ இதழில் பல கட்டுரைகளை எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

குமாரசெல்வா, 1985-ல், திற்பரப்பு அருவியில் பௌர்ணமிதோறும் கூடும் 'அருவிக்கரை கவியரங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ‘சங்கப் பலகை’ இலக்கிய அமைப்பின் மூலம் நூல் விமர்சனக் கூட்டங்களை நடதினார். நண்பர் கே. புஷ்பராஜ் நிறுவிய ‘வானவில் இலக்கிய வட்டம்’ அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, வானவில் இலக்கிய வட்டத்தின் சார்பில் பல்வேறு கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார்.

பொறுப்புகள்

  • ‘சங்கப் பலகை’ இலக்கிய அமைப்பின் செயலாளர்.
  • ‘தென்குமரி தமிழ்சங்கம்’ அமைப்பின் செயலாளர்.

விருதுகள்

  • லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது - ‘உக்கிலு’ சிறுகதைத் தொகுப்பிற்காக.
  • மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகம் வழங்கிய ‘நீதிஅரசர் வி.ஆர். கிருஷ்ணையர் விருது - ‘கயம்’ சிறுகதைத் தொகுப்பிற்காக.
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது - குன்னிமுத்து நாவலுக்காக.
  • ஆனந்த விகடன் வழங்கிய 2013-ம் ஆண்டின் சிறந்த நாவல் விருது - குன்னிமுத்து நாவலுக்கு.

இலக்கிய இடம்

குமாரசெல்வா, விளவங்கோட்டுத் தமிழையும் அங்கு வாழும் மக்களின் யதார்த்த சூழலையும் தனது புனைவுகளில் காட்சிப்படுத்தினார். குமரி மாவட்டத்தின் அடித்தள மற்றும் விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களது மொழியிலேயே புனைவாக்கினார். குமார செல்வாவின் ‘கய்தமுள்’ கவிதைத் தொகுப்பு, நவீன இலக்கியத்தில், வட்டார எழுத்திலான கவிதைகளை உள்ளடக்கிய முதன்மை நூலாக முன் வைக்கப்படுகிறது. குமரி வட்டாரக் கவிதையுலகில் புதிய தலைமுறையை உருவாக்கிய முன்னோடியாக குமார செல்வா அறியப்படுகிறார்.

குமார செல்வா நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • கய்தமுள்
  • தலையோடுகள்
சிறுகதைத் தொகுப்பு
  • உக்கிலு
  • கயம்
  • காக்காம்பொன்
நாவல்
  • குன்னிமுத்து

உசாத்துணை


✅Finalised Page