கி. அரங்கன்
கி. அரங்கன் (பேராசிரியர் கி. அரங்கன்; முனைவர் கி. அரங்கன்) (பிறப்பு: செப்டம்பர் 03, 1942) எழுத்தாளர், தமிழ் அறிஞர். மொழியியல் சார்ந்த பல நூல்களை எழுதினார்.
பிறப்பு, கல்வி
கி. அரங்கன், செப்டம்பர் 03, 1942 அன்று, விழுப்புரம் மாவட்டம், (இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம்) சின்னசேலத்தில் கிருட்டிணசாமி - இராசம்மாள் இணையருக்குப் பிறந்தார். சின்ன சேலம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 1960-ல் புகுமுக வகுப்புப் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1963-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்றார். 1965-ல் எம்.ஏ. (மொழியியல்) பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் 'A Contrastive study of the grammatical structures of Tamil and English' (தமிழ் ஆங்கிலம் வேற்றுமொழி இலக்கணம்) என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கி. அரங்கன் மணமானவர். குடும்பம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இயலவில்லை.
கல்விப் பணிகள்
கி. அரங்கன், 1970-ல், மைசூரில் உள்ள 'இந்திய மொழிகள் நடுவண் நிறுவன'த்தில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து விரிவுரையாளர், இளநிலை ஆய்வு அலுவலர், இணை பேராசிரியர், ஆய்வு அலுவலர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 1982-ல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறையில் முதல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 2003-ல் ஓய்வு பெற்றார். 10-க்கும் மேற்பட்ட எம்.பில், முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கினார். அண்ணாமலை, சென்னை, மதுரை காமராசர், லக்னோ, உஸ்மானியா, தெலுங்கு, வேங்கடேஸ்வரா, பொகாம்பூர், கர்நாடகம், கான்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவிலும், எம்.ஏ., எம்ஃபில், பி.எச்.டி. தேர்வாளர் குழுவிலும் பணியாற்றினார்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, தமிழ் நடைக்கையேடு முதலியவற்றுக்கான கல்விக்குழுக்களில் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
கி. அரங்கன் தமிழிலும் ஆங்கிலத்திலும், மொழியியல், இலக்கியம், சமூகவியல், இலக்கணம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். பல்வேறு ஆய்விதழ்களில் அவை வெளியாகின. தமிழிலும், ஆங்கிலத்துலுமாக 60-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டார். பழங்குடி மக்களின் மொழி குறித்த ஆய்வுக்காக ஒரிசா, ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை நிகழ்த்தினார்.
1976-ல் அமெரிக்காவிலுள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு அறிவியலராகச் (Visiting Scientist) சேர்ந்து, மொழியியல் பேராசிரியர்களான நோம் சோம்ஸ்கி, ஜான் இராபர்ட் ராஸ், மோரிஸ் ஹாலெ, பால் கிட்பார்ஸ்கி, பெர்ல் மட்டர் ஆகியோரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.
தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை, நோம் சோம்ஸ்கி: நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம் உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
மேடையுரை
மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.
இதழியல்
அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகத்தின் 'மொழியியல்' இதழ், திராவிட மொழியியல் கழகத்தின் 'அனைத்துலக திராவிட மொழியியல் இதழ்' ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
பொறுப்பு
- இந்திய மொழியியல் கழகம் (புனே), திராவிட மொழியியல் கழகம் (திருவனந்தபுரம்), அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகம் (அண்ணாமலை நகர்), இந்திய சமூக அறிவியல் - கழகம் (அலகாபாத்) ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினர். அவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
- புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்.
- தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு பேரவை உறுப்பினர்.
- தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு)
- தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர் (பொறுப்பு)
விருது/பரிசு
- தஞ்சை ஆய்வியல் கழகம், 2003-ல், கி. அரங்கனுக்கு மணி விழாவைப் பொறுப்பேற்று நடத்தியது.
வாழ்க்கை வரலாறு
கி. அரங்கனின் வாழ்க்கை வரலாற்றை வ. நதியா சிவகுமார் எழுதினார். இந்நூலை, கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து, 2015-ல் வெளியிட்டது.
மதிப்பீடு
கி. அரங்கன், நோம் சோம்ஸ்கி அறிமுகப்படுத்தி, வளப்படுத்திய மாற்றிலக்கண மொழியியல் தளத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆகிய துறைகளில் தனி ஆர்வம் கொண்டு செயல்பட்டார். 'தமிழ் தொடரியல்' ஆய்வின் முன்னோடிகளில் ஒருவர். மூத்த மொழியியல் அறிஞராகவும், ஆய்வாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- நோம் சோம்ஸ்கி: நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்
- தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை
உசாத்துணை
- கி. அரங்கன் வாழ்க்கை வரலாறு, வ. நதியா சிவகுமார், கலைஞன் பதிப்பக வெளியீடு: முதல் பதிப்பு: 2015
- பேராசிரியர் கி. அரங்கன் மணிவிழா மலர், ஆர்கைவ் தளம்
- கி. அரங்கன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- திராவிடக் குடும்ப மொழி ஆய்வுகளின் வரலாற்றுப் பின்புலம், கி.அரங்கன் உரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2025, 12:46:38 IST