கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
To read the article in English: K.S.V. Lakshmi Ammal.
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் (1894- 1971) திருக்குறளுக்கு புகழ்பெற்ற ஜமீன்தாரிணி உரையை எழுதிய அறிஞர். 'திருக்குறள் தீபாலங்காரம்' என்னும் இந்நூல் 1929-ல் வெளிவந்தது.
வாழ்க்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஜமீனின் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவர் கி.சு.வி.இலட்சுமி அம்மாள். 322 கிராமங்களின் மேல் ஆட்சியுரிமை கொண்டிருந்தது மருங்காபுரி ஜமீன். 14 ஆலயங்களும் இவர்களின் ஆட்சியில் இருந்தன. 24 மைல் சுற்றளவு கொண்டது. புலிக்குத்தி நாயக்கர் குடும்பம் என பெயர் பெற்றது. கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கருக்கு ஐந்து மனைவிகள். ருக்மிணி, முத்தழகு, வெள்ளையம்மா, பொன்னழகு, இறுதியாக இலட்சுமி.
1894-ல் பிறந்த கி.சு.வி.இலட்சுமி அம்மாள் தன் பதிமூன்றாம் வயதில் மருங்காபுரி ஜமீனின் ஐந்தாவது அரசியாக ஆனார். அவருக்கு ஆண்டாள் என்னும் மகள் பிறந்தார். மூத்த மனைவியரில் பொன்னழகுவுக்கு நீலாம்பாள் என்னும் மகள். மற்ற மனைவியருக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே லட்சுமி அம்மாள் தன் மகள் வழிப்பேரனாகிய சிவசண்முக பூச்சைய நாயக்கரை தனக்கு வாரிசாக தத்து எடுத்துக்கொண்டார். பொன்னழகு அம்மாள் தன் மகள் வழிப்பேரனாகிய குமார விஜய நாயக்கரை வாரிசாக தத்து எடுத்துக்கொண்டார். ஜமீன் உரிமைகள் மறைந்தபின் ஆலயநிர்வாக உரிமைகளும் உடைமைகளும் இரு வாரிசுகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
மறைவு
கி.சு.வி. இலட்சுமி அம்மாள் 1971-ல் மறைந்தார்
இலக்கியப்பணி
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் திருக்குறளுக்கு திருக்குறள் ஜமீன்தாரிணி உரை என அழைக்கப்படும் உரையை எழுதினார். இது திருக்குறள் தீபாலங்காரம் என தலைப்பிடப்பட்டது.
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் பழைய உரைகளில் மு.ரா.அருணாச்சலக் கவிராயர் மட்டுமே உரைநடையில் உரை வழங்கியிருப்பதாகவும் அது கடுமையான நடையில் இருந்தமையால் எளிமையாக ஓர் உரையைத் தான் எழுதியதாகவும் லட்சுமி அம்மாள் சொல்கிறார்.
பொதுப்பணி
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் உறுப்பினராகவும், மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இலக்கிய இடம்
கி.சு.வி.இலட்சுமி அம்மாளின் உரை திருக்குறளை இந்து மெய்யியல் மரபில் நிறுத்தி பொருள்காணும் நோக்கு கொண்டது. திருவள்ளுவநாயனார் புராணம் என்னும் தலைப்பில் அந்நூலில் திருவள்ளுவர் பற்றிய பிற்கால தொன்மங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழில் பதிப்பியக்கம் உருவாகி பண்டைய தமிழிலக்கியங்கள் அச்சேறியபோது அவற்றை பொருள் கொள்வதற்கான விரிவான விவாதங்கள் தொடங்கின. அது உரை இயக்கம் என்னும் அறிவியக்கமாக ஆகியது. அவ்வியக்கத்தில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவு. அதில் முக்கியமானவர் கி.சு.வி. இலட்சுமி அம்மாள்.
உசாத்துணை
- 91 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளுக்கு தெளிவுரை எழுதிய முதல் பெண்மணி - ntrichy.com
- திருக்குறள் தீபாலங்காரம் - இணைய நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:12 IST