under review

காரைச் சித்தர்

From Tamil Wiki
காரைச் சித்தர்
காரைச்சித்தர், அம்புஜம்மாளுடன்
காரைச்சித்தர் சிலை
காரைச்சித்தர்

காரைச் சித்தர் (1918 -1964 ) ஒரு துறவி. யோகச் செயல்களிலும் ரசவாதக்கலையிலும் ஈடுபட்டவர். சென்னையில் வாழ்ந்தார். காரைச் சித்தர் ச.து.சு.யோகியார் வழியாக க.நா.சுப்ரமணியம், அசோகமித்திரன் உள்ளிட்ட இலக்கியவாதிகளுக்கு அறிமுகமானவர். அவரை வெவ்வேறுவகையில் புனைவுகளில் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையில் காரைச்சித்தர் ஆசிரமம் உள்ளது.

பிறப்பு, கல்வி

காரைச் சித்தர் 1918-ஆம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரியார் - ருக்மணி அம்மாள். இவர்களுக்கு இரண்டாவது மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் வலங்கைமான் அருகே உள்ள நாகரசம்பேட்டை என்னும் சிற்றூரைச்சேர்ந்தவர். இயற்பெயர் சக்கரவர்த்தி ராகவ அய்யங்கார்.

தனிவாழ்க்கை

காரைச் சித்தர் 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். சுமார் 3 ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரும்பிவந்து சுலோச்சனா என்னும் பெண்ணை மணந்து ரேணுகா என்ற மகளுக்கும், ரவிக்குமார் என்ற மகனுக்கும் தந்தையானார். புனே சென்று அரசாங்க ஆயுதச் சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தார்.

துறவு

வேலையையும் குடும்பத்தையும் மீண்டும் நாடோடியானார்.மலேசியா, இலங்கையில் சுற்றி அலைந்தார். பிறகு இந்தியா திரும்பினார். காந்தியுடன் வார்தா ஆசிரமத்தில் சில மாதங்கள் இவர் தங்கியிருந்தார். இமயமலை சென்றபோது ரிஷிகேசத்தில் தன் குருவை சந்தித்தார் என்றும் அவரால் துறவு அளிக்கப்பட்டு சித்தர் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது

தொன்மங்கள்

 • காரைச்சித்தர் நூல்
  காரைச் சித்தர் பற்றிய தொன்மங்கள் அவரைப்பற்றிய நூலில் உள்ளன்
 • காரைக்கோட்டையில் வாழ்ந்த தன் சகோதரியை சந்திக்கச் சென்றவரை ஒருவர் வெட்டவந்தபோது தன் சிரிப்பாலேயே அவருடைய கையை செயலிழக்கச் செய்தார். அன்றுமுதல் காரைச்சித்தர் என அழைக்கப்பட்டார்
 • ஆண்டாம்கோயில் விழாவுக்கு வந்த மக்கள் ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அதை கடக்கமுடியாமல் நின்றபோது மூங்கில்களால் ஒரு பாலம் அமைத்து அவர்களை மறுகரை சேர்த்தார்.
 • நோயாளிகளுக்குச் சந்தனம் அளித்து நோய்களை தீர்த்தார்.
 • திருமுல்லைவாயிலில் ஒரு கோயிலில் இறைபூசனைக்கு போதிய பூக்கள் இல்லை என்று சொல்லப்பட்டபோது ஒரு செடியை பூக்கவைத்தார்
 • காரைச்சித்தர் கூடுவிட்டு கூடுபாய்தல், ககனவெளியே நடமாடுதல் ஆகிய சித்துவேலைகளைச் செய்தவர்.
 • காரைச்சித்தர் தொட்ட அனைத்தையும் பொன்னாக்கும் ரசவாதக்கலை அறிந்தவர்

பணிகள்

தஞ்சையில் ஆண்டாம் கோவில் என்னும் ஊரில் குடமுருட்டி ஆற்றோரம் உள்ள ஆலமரத்தடியில் ஆஞ்சநேயர் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். அந்த இடம் சாந்தவெளி என்று பெயர் பெற்றது. ஒரு மடைப்பள்ளி கட்டி அனைவருக்கும் உணவளித்தார்.

கனகவைப்பு என்னும் நூலை காரைச்சித்தர் இயற்றினார். அந்நூலை அவர் சொல்ல ச.து.சு. யோகியார் எழுதியதாகவும், காரைச்சித்தர் அதில் திருத்தங்கள் சொன்னதகாவும் அந்நூலிலேயே உள்ளது.

இலக்கியப் பதிவுகள்

காரைச் சித்தர் ச.து.சு.யோகியார் வழியாக ந. பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், அசோகமித்திரன் உள்ளிட்ட பலருக்கும் அறிமுகமானார். க.நா.சுப்ரமணியம் எழுதிய அவதூதர், அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் ஆகிய நாவல்களில் காரைச்சித்தரின் சாயல் உள்ள கதைமாந்தர் வருகிறார்கள். அசோகமித்திரன், க.நா.சுப்ரமணியம் இருவருமே காரைச்சித்தரையும் ச.து.சு.யோகியையும் ஆர்வமளிக்கும் மர்மம் கொண்ட மனிதர்களாகவே எண்ணியிருக்கிறார்கள்.

விவாதங்கள்

காரைச் சித்தர் சொல்லி ச.து.சு.யோகியார் எழுதியதாக கனகவைப்பு என்னும் நூல் அறியப்படுகிறது.கால சுப்ரமணியம் "காரைச் சித்தரின் கனகவைப்பு என்ற ரசவாதம் பற்றிய சித்தர் பாடல் நூலை சதுசு யோகியே எழுதினார் என்று கூறுவர். சுமார் 50 பக்கத்தில் அந்நூலுக்கு ஆங்கிலத்தில் யோகியார் சித்த வேதத்தை விளக்கி எழுதியுள்ளார். காரைச்சித்தர் சொன்ன கருத்துக்களை வைத்து இவர் சித்தர்பாடலைக் கம்பன் பாடினால் எப்படியிருக்குமோ அதுபோன்ற யாப்பில் எழுதியுள்ளது தெரிகிறது. சித்தர் தாம் எழுதியதை அவரிடம் திருத்தியமைக்கச் சொன்னதாக நூலிலேயே தகவல் உள்ளது. யோகியே செய்த மூவித பொருளுரைவிருத்தியும் அதற்குண்டு’ என்று கூறுகிறார்.

மறைவு

காரைச் சித்தர் 1964-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சமாதியானார்.

வழிபாடு

காரைச் சித்தரின் நினைவாலயம் சாந்தவெளியில் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு மேற்கே கட்டப்பட்டது. கருவறை பீடத்தின் மீது சித்தர் உருவச் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். ஒவ்வொரு ஆங்கில மாதமும் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10 நிமிடம் அங்கு தியானம் செய்யும் வழக்கம் உள்ளது

காரைச்சித்தர் பற்றிய நூல்கள்

 • மகான் காரைச்சித்தர் வரலாறு- எஸ்.அம்புஜம்மாள்
 • ஸ்ரீ காரைச் சித்தரும் கனகவைப்பும் ஓர் அறிமுகம்- ஞானசம்பந்தன்
 • காரைச்சித்தர் பாடல்கள் - எஸ்.பானுமதி

நூல்கள்

 • கனகவைப்பு - ரசவாத நூல்

உசாத்துணை