under review

காமக்காணிப் பசலையார்

From Tamil Wiki

காமக்காணிப் பசலையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. காமக்காணிப் பசலையார், மதுரைக் காமக்காணி நப்பசலையார் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறார்.

ஆசிரியர் குறிப்பு

காமக்காணி என்ற பண்டைக் காலத்தில் வழங்கிய நிலவுரிமை காரணமாகப் பெயருக்கு முன்னால் 'காமக்காணி' என்பதனைச் சிலர் சேர்த்துக் கொண்டனர். காமக்காணிப் பசலையார், அத்தகைய சிறப்புப் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். 'பசலை' என்ற இயற்பெயருடைய இவரின் புலமை காரணமாக, 'நல்' என்ற அடை சேர்த்து காமக்காணி நப்பசலையார் என்றும் வழங்கப்பட்டிருக்கலாம். இவருடைய பாடலொன்று நற்றிணையில் 243- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

நீர்க்காலை அடைக்கும் கல் துறுகல் எனப்பட்டது.

பொருள் தேடவேண்டி துணையைப் பிரிந்து செல்லவேண்டியிருந்தது. அறத்தைக் காட்டிலும் பொருள் அரியதாக இருந்ததாகப் புலவர் அக்கால நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

நற்றிணையில் 243- வது பாடலாக இடம்பெற்றுள்ள காமக்காணிப் பசலையார் இயற்றிய பாடல்;

நற்றிணை 243

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

பொருள்:

தேன் உடையது மலை: அதன் பக்கத்தில் தெளிந்த நீர் சூழ்ந்த உருண்டைக்கல் உண்டு. அதன் அருகில் துாய மணல் மிக்க கரையில் மாமரங்கள் உண்டு. அவை அசையும் கிளைகளையுடையன, நல்ல மாவடுக்கள் நிரம்பியன. மாமரச் சோலைதோறும் தங்கியிருக்கும் பூப்போன்ற கண்களையுடைய கரிய குயில்கள் 'ஆணும் பெண்ணும் மெய்யோடு மெய் சேர நின்று' அறிவுடையீர்! வாழ்க்கை சூதாட்டக் கருவி மாறிமாறி விழுவது போல நிலையில்லாதது. எனவே நிலையற்ற பொருளைத் தேடும் முயற்சியைக் கைவிட்டு, உம் தலைவியரை விட்டுப் பிரியாமல் சேர்ந்து வாழ்வீர்" என்று கையறத் துறப்போரைப் பார்த்து சொல்வது போலக் கூவுகின்றன. இவ்வாறான துன்பத்தைத் தருகின்றன இளவேனிற் காலத்தில் பொருளின் பொருட்டுப் பிரிவது ஆண்களின் இயல்பு என்றால் அறத்தினும் பொருள் ஈட்டுதல் உறுதி.

உசாத்துணை


✅Finalised Page