under review

கழார்க் கீரன் எயிற்றியனார்

From Tamil Wiki

கழார்க் கீரன் எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் எழுதிய ஒரே பாடல் குறுந்தொகையில்(330) இடம் பெறுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

கழார் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இவர். கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியார். பாலை நிலப் பெண்ணை எயிற்றி என்றும் ஆணை எயினன் என்றும் அழைப்பர். அம்பு எய்வதில் வல்லவன் எயினன். (எய் + இன் + அன்) எயினனுக்குப் பெண்பால் எயிற்றி. காவிரிக்கரையில் அமைந்த ஊரான கழாரில் வாழ்ந்த புலவர் கீரன். இவர் எயினப் பெண்ணை மணந்ததால் கீரன் எயிற்றியனார் என வழங்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

கழார்க் கீரன் எயிற்றியனார் எழுதிய பாடல் ஒன்று குறுந்தொகையில் மருதத் திணைப் பாடலாக இடம்பெறுகிறது. "தலைவி மாலையில் பூக்கும் பகன்றை மலர்கள் தலைவன் சென்ற நாட்டில் இல்லையோ? அவனுக்கு என் நினைவு வாராதோ" என்று கூறுவதாக அமைந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

பகன்றையின் மலர்கள் வெண்ணிறமானவை. அதன் மலர்கள் நல்ல மணமில்லாதவை. பகன்றையின் மொட்டு, முறுக்கிய துணியைப் போல் காட்சி அளிக்கும். முறுக்கிய துணி பகன்றை மொட்டுக்கு உவமை.

வண்ணாத்தி துணி வெளுப்பவள். அவள் உழமண் என்னும் பசைமண் நீரில் (அல்லது கஞ்சி என்றும் பொருள் கொள்லலாம்) தோய்த்து நீரில் இடும்போது அவை முறுக்கு அவிழாமல் நீரில் நிற்கும். அந்த முறுக்குத் துணியைப் போலப் பகன்றைப் பூ முறுக்கிக்கொண்டு பூத்திருக்கும். அந்தப் பூ மாலையில் பூக்கும். கள்ளைப்போல் நாறும்.

பாடல் நடை

குறுந்தொகை 330

நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே

பொருள்:

தோழி! நற்குணமும் அழகுமுடைய வண்ணாத்தி, கஞ்சியிலே தோய்த்து எடுத்து, முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு, குளிர்ந்த நீர்நிலையில் போட்டபின், அந்நீரில், பிரியாத பருத்த ஆடையின் முறுக்கை ஒத்திருக்கின்ற, பெரிய இலைகளையுடைய பகன்றையின் முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்த வெண்மையான மலர், இனிய கடுமையான கள்ளைப் போல நல்ல மணமில்லாமல் நாறுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், தனிமையும், தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்டில், இல்லையோ?

உசாத்துணை

[http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai330.html#.Y16jIXbMLMV வைரத்தமிழ்-குறுந்தொகை 330 ] தமிழ்த்துளி பதிற்றுப்பத்து 76



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Nov-2022, 09:42:32 IST