கருவூர் நன்மார்பனார்
கருவூர் நன்மார்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கருவூர் நன்மார்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். நன்மார்பன் என்பது திருமாலின் பெயர்களின் ஒன்று என்ற ஊகம் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலக்கிய வாழ்க்கை
கருவூர் நன்மார்பனார் பாடிய ஒரு பாடல் அகநானூறில் 277-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிந்த துயரை எண்ணி தோழியிடம் தலைவி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குட்டிகள் ஈன்றிருக்கும் பெண்புலியின் பசியினை போக்குவதற்காக, ஒளி பொருந்திய வரிகளையும் கார்வை மிக்க குரலையும் கொண்ட ஆண் புலியானது மரத்தின் பொந்தில் வேட்டையாட காத்திருக்கும்.
- பனை மரம் போல கருமையான கூர்ந்த மயிரையும் சிறிய கண்களையும் உடைய பன்றியை ஆண் புலி வேட்டையாடும்.
- எஃகினால் செய்யப்பட்ட வேலினை துணையாக கொண்டு ஆடவர் இறப்புக்கு அஞ்சாது பொருள் தேட கிளம்பி செல்வர்.
- உவமை: பகல் சூரியனின் முன் நிலவு ஒளி இழந்து போவதுபோல் தலைவரின் பிரிவால் என் நெற்றியின் அழகு நலம் தேய்ந்து மறைகிறது.
பாடல் நடை
அகநானூறு - 277
பாலைத் திணை துறை: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குப் பருவங்கண்டழிந்து சொல்லியது.
தண்கதிர் மண்டிலம் அவிரறச் சாஅய்ப்
பகலழி தோற்றம் போலப் பையென
நுதலொளி கரப்பவும் ஆள்வினை தருமார்
கவலில் உள்ளமொடு எஃகுதுணை யாகக்
கடையலங் குரல வாள்வரி உழுவை
பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது
இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்
சிறுகட் பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தமார் அழுவத் தாங்கண் நனந்தலைப்
பொத்துடை மரத்த புகர்படு நீழல்
ஆறுசெல் வம்பலர் அசையுந ரிருக்கும்
ஈரமில் வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை கூர்வாய்
அழலகைந் தன்ன காமர் துதைமயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி யெருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண்குரல் மாந்திச்
சிதர்சிதர்ந் துகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழிநங் காத லோரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:41:58 IST