under review

கருவூர் கலிங்கத்தார்

From Tamil Wiki

கருவூர் கலிங்கத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கருவூர் கலிங்கத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்னும் ஊரை சார்ந்தவர். இயற்பெயர் அறிய கிடைக்கவில்லை. கலிங்கத்தில் வந்தவர்களின் மரபினாராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கருவூர் கலிங்கத்தார் பாடிய பாடல் அகநானூறில் 183-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவரை எண்ணித் தன் நிலையை தலைவியானவள், தோழிக்கு உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மலைக்காட்டுப் பாதையில் பொருளீட்டுவதற்காக பிரிந்து சென்ற தம் கணவரை எண்ணி மகளிர் அழுவர். அழுகையினால் ஏற்பட்ட சோர்வினால் உணவு உண்பதை குறைக்க இடை மெலிந்து வாடிய தோற்றத்தில் காணப்படுவர்.
  • கார் மேக கூட்டங்கள் கடல் நீரை அள்ளிக்கொண்டு வந்து நிலம் மேல் மழையாகப் பொழிந்துவிட்டு கடந்து செல்கின்றன.
  • கார்காலத்திற்கு பின்னான குளிர் காலத்தில் பனி பொழிகிறது. வண்டுகளை ஈர்க்கும் பிடவம் பூ மலர்ந்து மணம் வீசுகிறது. ஊதைக்காற்று வீசி மலைக்காட்டு பாதையில் சென்றவரை வருத்துகிறது.
  • உவமைகள்: தலைவியின் கண்கள் குவளை மலருக்கும் நிலத்தின் மேல் பரவும் கார்மேக கூட்டம் புல்வெளியில் மேயும் யானைக்கூட்டத்திற்கும் உவமிக்கப்பட்டன.

பாடல் நடை

அகநானூறு - 183

  • திணை: பாலை
  • கூற்று: தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர் என்றி தோழி! பாடு ஆன்று
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின் வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரே மாலைக்
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 09:48:35 IST