under review

கதிரைமலைப் பள்ளு

From Tamil Wiki
கதிரைமலைப் பள்ளு

கதிரை மலைப் பள்ளு (1906), கதிரை எனப்படும் இலங்கை கதிர்மாகத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பட்ட பள்ளு என்னும் சிற்றிலக்கியம். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூல் தெல்லிப்பழை வ. குமாரசுவாமியால் தொகுக்கப்பட்டு, 1935-ல், இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது. கதிரை மலைப் பள்ளு, இலங்கையில் தோன்றிய முதல் பள்ளு இலக்கிய நூலாகவும், இலங்கையில் தோன்றிய மூன்று பள்ளு நூல்களில், காலத்தால் முதன்மையானதாகவும் அறியப்படுகிறது. ‘கதிரையப்பர் பள்ளு’ என்ற பெயரும் இந்த நூலுக்கு உண்டு. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் முருகன். இதன் காலம் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதி.

பதிப்பு, வெளியீடு

கதிரைமலைப் பள்ளு நூலின் முதல் பதிப்பு 1906-ம் ஆண்டு வெளிவந்தது. விரிவான இரண்டாம் பதிப்பு, 1935-ல், தெல்லிப்பழை வ. குமாரசுவாமிப்புலவரால் தொகுக்கப்பட்டு, திருமயிலை செ.வெ. ஜம்புலிங்க பிள்ளை அவர்களால் சென்னை, ப்ராகிரஸிவ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

கதிரை மலைப் பள்ளு நூலை இயற்றியவர் யார் என்பதை அறிய இயலவில்லை. தெல்லிப்பழை வ. குமாரசுவாமியால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

கதிரை மலைப் பள்ளு, கதிர்காமத்தில் கோவில் கொண்டுள்ள முருகன் மீது பாடப்பட்ட பள்ளு என்னும் சிற்றிலக்கியம். 129 பாடல்களைக் கொண்டது. கதிர்காமக் கடவுளான முருகனின் பெருமையை, சிறப்பைக் கூறும் நூல். சிந்து, விருத்தம் தரு போன்ற பாவகைகளால் பாடப்பட்ட இந்நூலில், பேச்சு வழக்குச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. நாடகப்பாங்கு அதிகம் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

காப்பு, அவையடக்கம், கடவுள் வணக்கம் ஆகியன நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து பள்ளன், மூத்த பள்ளி, பண்ணைக்காரன், இளையபள்ளி என நான்கு பாத்திரங்களும் அறிமுகமாகின்றனர். முதல் மூவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவும், இளையபள்ளி பாரத தேசத்தைச் சேர்ந்ததவளாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முருகனின் பெருமை, மூத்த பள்ளி கூறும் நாட்டு வளம், இளைய பள்ளி கூறும் நாட்டு வளம், பள்ளனின் குணங்கள், மூத்த பள்ளி, இளைய பள்ளி இருவருக்கும் இடையே ஏற்படும் சச்சரவுகள், பண்ணைக்காரன் இறுதியில் இரு சக்களத்திகளின் சண்டையையும் நிறுத்தி, கதிர்காம முருகனைக் கைதொழுது வாழ்த்துவதோடு, இப்பள்ளு நூல் நிறைவு பெறுகிறது.

பாடல் நடை

பண்ணைக்காரனைப் பள்ளர் வணங்குவது(பகடி)

சுரித்த கழுத்தனாரே கும்பிடுகிறேன் - வட்டச்
சொறித்தேமற் காதனாரே கும்பிடுகிறேன்
பெருத்த வயிறனாரே கும்பிடுகிறேன் - வாதம்
பிடித்த பொற் காலனாரே கும்பிடுகிறேன்
திருத்தமில் லாதவரே கும்பிடுகிறேன் - சற்றே
திருகல் முதுகனாரே கும்பிடுகிறேன்
அரித்ததந் தத்தனாரே கும்பிடுகிறேன் - பண்ணை
ஆண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன்”

பள்ளன், பள்ளியின் உரையாடல்கள்

பள்ளன் கூற்று:

என்னடி பள்ளி யேகாந்தக் காரி நீ
இந்நேரம் மட்டு மென்னடி செய்தாய்?”

பள்ளி பதில்:

ஆறு போந்தங் தண்ணீரு மள்ளி
அழுத பிள்ளைக்குப் பாலும் புகட்டி
சேறு போந்த சிறுநெல்லுங் குத்தித்
தீட்டி யாக்கவும் சென்றதோ பள்ளி

மூத்த பள்ளி பள்ளனைப் பற்றி பண்ணையிடம் முறையிடல்

காலமே சென்று பாலுங் கறந்து
கமுகம் பூப்போ லரிசியுந் தீட்டிக்
கடுகவே வைத்துக் காய்ச்சிய பாற்கஞ்சி
காலாலே தட்டி யூற்றினா னாண்டே
இப்படிக் கொத்த நாடங்கப் பள்ளனுக்
கெப்படிக் கஞ்சி காய்ச்சுவே னாண்டே?

மதிப்பீடு

கதிரைமலைப்பள்ளு, பள்ளு இலக்கியத்துக்குரிய எளிமையும் இலக்கியச் சுவையும் கொண்டதாக விளங்குகின்றது. உரையாடல்கள் நகைச்சுவையாக அமைந்துள்ளன. செயற்கைத் தன்மை குறைந்ததாகவும், அகப் பொருள் துறை தொடர்பான செய்யுள்கள் இல்லாததாகவும் விளங்குவதால், இதுவே ஈழத்தின் முதற் பள்ளு நூலாக அறியப்படுகிறது. . இலங்கையில் தோன்றிய மூன்று பள்ளு நூல்களில், காலத்தால் முதன்மையானதாக கதிரைமலைப்பள்ளு கருதப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page