under review

கண்ணாயிரநாதர் கோயில்

From Tamil Wiki
கண்ணாயிரநாதர் கோயில் (நன்றி: தரிசனம்)
கண்ணாயிரநாதர் கோயில் தீர்த்தம்

கண்ணாயிரநாதர் கோயில் குருமணக்குடியில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு தென்கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் குருமணக்குடி அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து பகசாலை கிராமத்தை அடைந்து அங்கிருந்து மாற்றுப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று இக்கோயிலை அடையலாம்.

வரலாறு

கண்ணாயிரநாதர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.

கல்வெட்டு

சோழ மன்னன் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த இடத்தை "குரு வாணியக்குடி" என்று குறிப்பிடுகிறது.

கண்ணாயிரநாதர் கோயில் வளர்கோதைநாயகி

தொன்மம்

  • மகாவிஷ்ணு வாமன அவதாரத்தை எடுத்த போது அவர் இங்கு வந்து மகாபலி அரசனின் அரசவைக்குச் செல்வதற்கு முன் சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறறார்.
  • மாண்டவ்யர், மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் ஆகிய துறவிகள் இங்குள்ள இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
அகல்யை

இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அகல்யையை ஏமாற்றி பாவம் செய்தான். பிரம்மாவால் இதுவரை உருவாக்கப்பட்ட மிக அழகான பெண் அகல்யை என்று நம்பப்படுகிறது. அவள் முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டாள். ஒரு நாள் முனிவர் இல்லாத நேரத்தில் இந்திரன் முனிவரின் வடிவம் எடுத்து அவரின் மனைவியுடன் உறவு கொண்டான். உறவின் போது தன் கணவன் அல்ல என்பதை அகல்யை உணர்ந்தாலும் அவளும் உறவில் ஈடுபட்டாள். முனிவர் தனது குடிலுக்குத் திரும்பி என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டார். இந்திரன் உடனே பூனை வடிவம் எடுத்து ஓட முயன்றான். கோபம் கொண்ட முனிவர் இந்திரனை தன் உடம்பில் ஆயிரம் யோனிகளைக் கொண்டவனாக ஆக சபித்தார். முனிவரின் சாபம் அகல்யையைக் கல்லாக மாற்றியது. அகல்யை முனிவரிடம் மன்னிப்புக் கேட்டபோது ராமரின் பாதங்கள் அவளைத் தொட்டவுடன் இந்த சாபத்திலிருந்து விடுபடுவாள் என்ற சாபவிமோசனம் அளித்தார். இந்திரனுக்கு பிரம்மதேவன் சிவனை வழிபடுமாறு அறிவுறுத்தினார். இந்திரன் இங்கு வந்து தீர்த்தம் அமைத்து இறைவனை வழிபட்டான். சிவன் இந்திரனை மன்னித்தார். இந்திரனின் உடலில் உள்ள அனைத்து அடையாளங்களையும் தானே எடுத்துக் கொண்டார். சிவபெருமான் தன் மீது குறி வைத்துக்கொண்டதால் அவர் ஆயிரம் கண்களைக் கொண்ட கடவுளாகக் கருதப்படுகிறார். இங்கு லிங்கம் இந்த அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது. எனவே இங்குள்ள இறைவன் ஸ்ரீ சஹஸ்ரநேத்திரேஸ்வரர்/கண்ணாயிரமுடையார் என்று அழைக்கப்பட்டார்.

கோவில் முக்கியத் தகவல்கள்

  • மூலவர்: கண்ணாயிரம் உடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்திரேஸ்வரர்
  • அம்பாள்: முருகு வளர்கோதைநாயகி, கோதையம்மை, சுகந்த குந்தலாம்பிகை
  • தீர்த்தம்: இந்திர தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: சரக்கொன்றை மரம்
  • பதிகம்: திருஞானசம்பந்தர் வழங்கிய பாடல்
  • இருநூற்று எழுபத்தியாறு தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • கடைசியாக கும்பாபிஷேகம் பிப்ரவரி 9, 2004 அன்று நடந்தது

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய கண்ணாயிரநாதர் கோயிலில் இரண்டு மாடவீதிகள் உள்ளன. ராஜகோபுரம் இல்லை. ஆனால் அதன் இடத்தில் ஒரு அழகான வளைவு உள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளைத் தவிர, சித்தி விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், நால்வர், கன்னி விநாயகர் ஆகியோரின் சன்னதிகளும் பிரதான மண்டபத்திலும் மாடவீதிகளிலும் காணப்படுகின்றன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகளைக் காணலாம். விநாயகர், முருகன், நடராஜர், சோமாஸ்கந்தர் உள்ளிட்டோரின் சிலைகள் பிரதான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் நுழைவாயிலில் இருபுறமும் குடவரை விநாயகர் மற்றும் பால தண்டாயுதபாணி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் முன்புறம் இந்திர தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சன்னதிகளைக் காணலாம். பார்வதி தேவியின் சன்னதிக்கு வெளியே கூரையில் பன்னிரெண்டு ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் விமானம் மற்றும் மூலஸ்தானத்தை ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

  • திருஞானசம்பந்தர் தனது பாடலில் இந்திரன் மற்றும் வாமன கதைகளைப் பற்றி பாடினார்.
  • கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.
  • ஜாதகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் அந்தந்த ராசியின் கீழ் நின்று அம்மனை வழிபடலாம்.
  • திருமண முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்பவர்கள் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.
  • வேலை வாய்ப்புகளை நாடுவோர்களால் பிரபலமானது.
  • விபச்சாரம் செய்தவர்கள் மன்னிப்புக்காக இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்

திறந்திருக்கும் நேரம்

  • காலை 7-12
  • மாலை 4-7

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை



✅Finalised Page