under review

ஓராங் குவாலா

From Tamil Wiki
நன்றி: Fadli Suandi - Shutterstock

ஓராங் குவாலா: (Orang Kuala) மலேசியாவின் பழங்குடியினர் .தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பெயர் விளக்கம்

ஓராங் குவாலா பழங்குடியினர் தங்களை ஓராங் டுவானோ (Orang Duano) மற்றும் டெசின் டோலாக் (Desin Dolak) என அழைத்துக்கொள்வர். டெசின் என்றால் மனிதர் எனப்பொருள். டோலாக் என்றால் கடல் எனப்பொருள். ஓராக் குவாலாவின் வாய் மொழி வரலாற்றின் வழி, அவர்கள் ஜாவாவிலிருந்து தீபகற்ப மலேசியாவிற்குள் வந்தவர் என கூறப்படுகின்றது.

1955-ல் அன்றைய ஜொகூர் மாநில பழங்குடியினர் துறை அதிகாரப்பூர்வ அலுவல் வேலைகளுக்கு டுவானோ பழங்குடியினரை ‘ஓராங் குவாலா’ என்று பெயர் சூட்டினர். அதற்கு நதிகளின் முகத்துவாரங்களில் வாழும் மனிதர்கள் என்பது உட்பொருளாகும்.

வாழிடம்

ஓராக் குவாலா பழங்குடிகளில் பெரும்பான்மையினர் மேற்கு ஜொகூர் மாநிலத்தின் பத்து பஹாட், பொந்தியான் வட்டாரத்தின் மலாக்கா நீரிணையின் கரையோரங்களை ஒட்டி வசிக்கின்றனர். சிறுபான்மை ஓராங் குவாலா பழங்குடி ஜொகூரில் கோத்தா திங்கி வட்டாரம், சுங்காய் லாயாவ் கிராமத்தில் வசிக்கின்றனர். தீபகற்ப மலேசியாவைத் தவீர ஓராங் குவாலா பழங்குடியினர் இந்தோனேசியாவிலும் வாழ்கின்றனர்.

மொழி

ஓராங் குவாலா பழங்குடியினரின் மொழி டுவானோ மொழியாகும். டுவானோ மொழி ஆஸ்த்ரோநேசிய மொழிகுடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஓராங் குவாலா மலாய் மொழியிலும் பேசுவர்.

பின்னணி

ஓராங் குவாலாவின் மூதாதையர்கள் ஓராங் லாவோட் ஆவர். ஓராங் லாவோட்டின் பூர்வீகம் நுசாந்தாரா ஆகும். இருப்பினும், ஓராங் டுவானோ பழங்குடியினரை சௌவ் மற்றும் அன்டாயா கள ஆய்வாளர்கள் ஓராங் குவாலாவின் மூதாதையர்களை சுகு சம்பான் (Suku Sampan) என்று வகை படுத்தியுள்ளனர்.

பதினான்காம் நூற்றாண்டில், பரமேஸ்வராவுக்கு ஓராங் செலெதார் பழங்குடியுடன் ஓராங் குவாலா பழங்குடியினர் நகரங்களை உருவாக்க உதவியுள்ளனர். ஓராங் லாவோட் ஜொகூர்-ரியாவ் ஆட்சியில் (1528-1857) படகோட்டிகளாகவும், கடற்படை தளபதிகளாகவும் இருந்துள்ளனர். அப்போது, ஓராங் டுவானோ பகுவான், பெரிகி ராஜா, சொங்சொங், குவாலா லாஜாவ், குவாலா துங்கால், குவால எநோக், குவாலா ரெதே தீவுகளில் வசித்தனர். இன்றளவும் தீபகற்க மலேசியாவைத் தாண்டி, ஒராங் டுவானோ நுசாந்தராவின் பெலாராஸ், சுங்காய் லாரூட், சுங்காய் பெலா, குவாலா செலாட், பதாபராங், மெனாஹாரா, சுங்காய் கெராங், தன்ஞோங் பாத்து, மற்றும் குந்தோங் தீவுகளில் வசிக்கின்றனர்.

சீன-டுவானோ

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜொகூர் மாநிலத்தின் துறைமுகமும் மீன் பிடிக்கும் தொழிலிலும் வளர்ந்திருந்தது. சீன வணிகர்கள் மலாயாவில் மீன் ஏற்றுமதி இறக்குமதி தொழிலை ஜொகூரில் மேற்கொண்டனர். சீன வணிகர்கள் ஓராங் டுவானோவின் படகோட்டும் திறமையையும் இயற்கையாக கடற்சார் பொருளீட்டும் தொழிலைச் செய்து வந்ததையும் கவனித்தனர். இதனால், ஓராங் டுவானோ சீன ‘தவுகேகளிடம் மீன் பிடிக்கும் வேலைக்கு நியமிக்கப்பட்டனர். காலங்கள் கழித்து, ஓராங் டுவானோ பழங்குடியினரில் கலப்பு திருமணங்கள் நடந்தன. இதனால், சீன-டுவானோ சிறுபான்மையினர் உருவாகினர். 1955-ம் ஆண்டு டுவானோ மக்கள் தீபகற்ப மலேசியாவின் பழங்குடியென வகைபடுத்தப்பட்டனர்.

தொழில்

ஓராங் குவாலா பழங்குடியினர் கடற்சார் வளங்களைச் சேகரித்து, விற்று வாழ்கின்றனர். ஓராங் டுவானோ தங்களின் கடல் வளங்களை இடைத்தரகர்களுக்கு விற்றும் நேரடியாக மக்களிடம் விற்றும் பொருள் ஈட்டுகின்றனர். ஓராங் குவாலாவில் சிலர் கடல் சார்ந்த தொழில்களில் பங்குகொள்ளாமல் காய்கறி, தளவாடப் பொருடகள், சிறுவர் விளையாட்டு பொருட்களை வணிகம் செய்து வருகின்றனர். பொந்தியான் பெசாரில் இள ஓராங் குவாலா பழங்குடியினரில் சிலர் பலகலைகழக கல்வி பயின்றுள்ளனர்.

பண்பாடு

நடனம்

ஓராங் குவாலா பழங்குடியினரின் நடனம் ஜோகேட் டங்கூங் (Joget Dangkung) ஆகும்.

நம்பிக்கைகள்

ஓராங் குவாலா பழங்குடியினர் 19-ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளனர். இதனால், மற்ற பழங்குடியினரைப் போல் தொக் பாத்தீன் என்றழைக்காமல், ஓராங் குவாலா பழங்குடியின் தலைவரை பெங்ஹுலு (Penghulu) என்றழைப்பர்.

பார்க்க: தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்

புத்தகங்கள்

  • Keterancaman Bahasa Orang Asli Duano & Kanaq (Mohd Sharifudin Yusop, Penerbit Universiti Putra Malaysia, 2013)
  • Andaya, L. A. (2008). Leaves of the same tree - Trade and ethnicity in the Straits of Malaka. Honolulu: University of Hawaii Press.
  • Andrew, S. & Halcomb, E. J. (2009). Mixed Methods Research for Nursing and the Health Sciences. British: Wiley-Blackwell.
  • Chou, C. (2003). Indonesian Sea Nomads Money, Magic, and fear of the Orang Suku Laut. British: Taylor & Francis Group.
  • Kalof, L., Dan, A. & Dietz, T. (2008). Essentials of Social Research. British: McGraw Hill Open University Press.
  • Nagy, S. & Hesse-Biber (2010). Mixed Methods Research - Merging Theory with Practice. New York: The Guilford.
  • Winstedt, R. O. (1988). A History of Malaya Revised and Enlarged. Kuala Lumpur: Marican & Sons (Malaysia) Sdn. Bhd.

உசாத்துணை


✅Finalised Page