under review

தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்

From Tamil Wiki
Orang-jahai-keluarga.jpg

தீபகற்ப மலேசியாவில் மொத்தம் மூன்று வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர். அப்பிரிவினர் நெக்ரீதோ (Negrito), செனொய் (Senoi), மெலாயு ப்ரோதோ (Melayu Proto) என வகுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

குடியுரிமை

மலேசியாவில், பழங்குடியினர் ‘ஓராங் அஸ்லி’ (Orang Asli) என்று அழைக்கப்படுவர். ஓராங் அஸ்லி,Aborigines’ அல்லது 'Indigenous' என்பதற்கான மலாய் சொற்றொடராகும். ஓராங் என்றால் மனிதர். அஸ்லி என்றால் அசல். 'ஓராங் அஸ்லி மலேசியாவில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ வார்த்தையாகும்.

பழங்குடியினருக்குப் 'பூமிபுத்ரா (Bumiputera) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது 'நிலத்தின் மகன்' அல்லது 'மண்ணின் மகன்' என்ற நேரடி பொருளைக் கொண்டுள்ளது. தீபகற்ப மலேசியாவின் மக்கள்தொகையில், பழங்குடியின மக்களின் பகுதி 0.5 முதல் 1 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. எனவே, பழங்குடிகள் பூமிபுத்ராவின் சிறுபான்மையினர் எனக் கருதபடுகின்றனர்.

பின்னணி

Malaysia-map.jpg

மலேசியா நாடு இரண்டு நிலப்பிரிவுகளைக் கொண்டது. ஒரு பக்கம் தாய்லாந்தும் மற்ற மூன்று திசைகளில் மலாக்கா நீரிணை, தென் சீன கடல் எனச் சூழ்ந்த தீபகற்பம் முதல் பகுதி. இந்தத் தீபகற்பத்திற்கு கிழக்கே சபா, சரவாக் மாநிலங்களின் நிலப்பரப்பு இரண்டாம் பகுதி. தீபகற்ப மலேசியாவிற்கு பழங்குடியினர் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனா, திபெத் தேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்தடைந்திருக்க வேண்டுமென அனுமானிக்கப்படுகிறது. ஒவ்வொரு பழங்குடியினரின் குடியும் மொழியும் பண்பாடும் வேறுபட்டுள்ளன. இவர்களின் மொழிக்கும் பர்மா (மியன்மார்), தாய்லாந்து, இந்து-சீன தேசங்களில் வசிக்கும் பழங்குடிகளின் மொழிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புள்ளது. பழங்குடியினர் பொதுவாக விவசாயமும் மீன் பிடிப்பதையும் தொழிலாக கொண்டவர்கள். சிலர் முறையாக கல்வி கற்று பணிகளில் பொறுப்பாற்றி வருகின்றனர். 1950ல் பிரிட்டிஷ் அரசு, பழங்குடியின் விசுவாசத்தைக் கோரி பழங்குடி துறையைக் கட்டமைத்தது. 1954-ல் கம்யூனிஸ்டினருடன் பழங்குடியினர் சேராதிருக்க பழங்குடியினருக்கு சட்டத்தின் வழி சில பாதுகாப்புகளை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சித்தது. 1961-ல் மலேசிய அரசாங்கம் பழங்குடிக்கான இத்துறையை 'மலேசிய பழங்குடி முன்னேற்ற துறை' என்று பெயரிட்டு அவர்களின் சமூகநல பொறுப்புகளுக்காகப் பங்காற்றி வருகிறது.

நன்றி: www.jakoa.gov.my

மூன்று பிரிவுகள்

நெக்ரீதோ (Negrito)

நெக்ரீதோ குடும்பத்தின் கீழ் கென்சியு (Kensiu), கிந்தாக் (Kintak), ஜஹாய் (Jahai), மென்ட்ரிக் (Mendriq), லானோ (Lanoh), பாதேக் (Bateq) என ஆறு இனக்குழுக்கள் உள்ளன. நெக்ரீதோ மக்கள் வடக்கே திதிவங்சா மலைத்தொடர்களில் வசிக்கிறார்கள். இவர்களே மலேசியாவின் மிகப் பழமையான குடியேறிகள். இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்.

செனோய் (Senoi)

செனாய் வகையில் தெமியார் (Temiar), செமாய் (Semai), ஜா ஹூட் (Jah Hut), சே வோங் (Che Wong), செமொக் பேரி (Semoq Beri), மஹ் மேரி (Mah Meri) என ஆறு இனக்குழுக்கள் உள்ளனர். இவர்கள் திதிவங்சா மலை இடுக்குகளில் வாழ்பவர்கள். மையப் பகுதியில் வாழும் செனாய் சீனாவின் தெற்கேயுள்ள யுனான் பகுதியிலிருந்து தாய்லாந்து நிலப்பரப்பு வழி வந்தவர்கள்

மெலாயு ப்ரோதோ (Melayu Proto)

மெலாயு ப்ரோதோ குழு வகையில் தெமுவான் (Temuan), ஜகூன் (Jakun), செமெலாய் (Semelai), ஒராங் குவால (Orang Kuala), ஒராங் செலேதார் (Orang Seletar), ஒராங் கனாக் (Orang Kanaq) என ஆறு இனக்குழுக்கள் உள்ளனர். இவர்கள் ஆதியில் நீர்நிலைகளில் அருகே வாழ்ந்தனர். பொ.மு 2500 முதல் 1500 இடையே கடற்படையினராக இருந்த மெலாயு ப்ரோதோ வகை பழங்குடியினர் கடல் வழியே தெற்கு தீபகற்பத்தில் குடியேறினர்.

பண்பாடு

பழங்குடியினர் தங்கள் சொந்த கலாச்சாரம், மொழி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பழங்குடியினரிடையேயும் சமூக-கலாச்சார வேறுபாடுகளும் பன்முகத்தன்மைகளும் இருக்கும். தீபகற்ப மலேசியாவில் உள்ள பழங்குடியினர் சொந்த பேச்சுவழக்குகளையும் மொழிகளையும் கொண்டுள்ளனர். ‘செமலே’ பேச்சுவழக்கு (Semelai Dialect) ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாகும், அதே சமயம் ‘புரோட்டோ மலாய்’ (Proto Malay) குழுக்கள் ஆஸ்ட்ரோனேசிய குடும்பத்தின் ஒரு பகுதியாகும். பழங்குடியினரின் மொழிகள் பொதுவாக தங்களுக்குள் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகின்றன. அனைத்து பூர்வகுடி வகையினரும் ஆரம்பத்தில் நிரந்தரமான வீடமைப்பு இல்லாமல் நாடோடிகளாகவே வாழ்ந்தனர்.

பழங்குடிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்

மலேசிய பழங்குடியினருக்கான சட்டம் 1954-ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வெளியானது. பதுங்கியிருந்து பிரிட்டிஷ் படையைத் தாக்கி வந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்களையும் ஆயுதங்களையும் பழங்குடிகள் கொடுத்து வந்தனர். அச்சட்டம், மலேசியாவில் இருந்த கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தைக் குறைக்க பிரிட்டிஷரால் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி இது. எனவே, அச்சட்டத்தில் பழங்குடியினருக்கான உரிமைகளென பிரதானமாக எதுவும் இல்லை. பழங்குடியினருக்கான சட்டத்தில், இவர்களுக்கென வள உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்வாறான சில வள உரிமைகள் தேசிய காடுகள் சட்டம் மற்றும் நில பாதுகாப்பு சட்டங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், பழங்குடிகளின் அறுதியான உரிமைகளெனும் பட்டியல் இல்லை. இதனால், மலேசிய பழங்குடியினர் நில உரிமைக்காக வழக்கில் சிக்கிக்கொள்வதுண்டு.

ஐக்கிய நாடுகள் வெளியிட்ட பழங்குடியினரின் உரிமைகள் பிரகடனத்தை (UNDRIP) 2007-ல் மலேசியா ஏற்றுக்கொண்டது. இந்த பிரகடனத்தில் பழங்குடியினரின் நல்வாழ்வுக்கான அடிப்படை மனித உரிமைகள் அடங்கும். 1957-ல் சர்வதேச உழைப்பாளி உலக மாநாடு (ILO) பழங்குடி மக்கள் உடன்படிக்கையை வெளியிட்டது. இதனை ‘உடன்படிக்கை 169’ என அழைப்பர். 'உடன்படிக்கை 169'க்கு ஒப்புதல் தரும் ஒரு நாடு, அந்நாட்டு பழங்குடி மக்கள் தங்களது சமூக, கலாச்சார, பொருளாதார நிலையைத் தனியாட்சி செய்ய உடன்படும். 'உடன்படிகை 169'க்கு ஒப்புதல் தந்த நாட்டில், பொது மக்களுக்கு அரசாட்சியும் பழங்குடியினருக்கு பழங்குடியினரின் தலைமையில் சுய ஆட்சியும் இருக்கும். மலேசியா ILO உடன்படிக்கை 169'-ஐ அங்கீகரிக்கவில்லை.

அமைப்புகள்

மலேசிய பழங்குடியினரின் வாழ்கை மேம்பாட்டுக்காக பழங்குடியினர் மேம்பாட்டு துறை (Jabatan Kemajuan Orang Asli, JAKOA) பாதுகாப்பு வழங்கி வருகிறது. பழங்குடிகளுக்காக அரசு சாரா அமைப்பான Center for Orang Asli Concerns 1989லிருந்து செயலாற்றி வருகிறது. லத்தின் அமெரிக்காவில் ஆரம்பிக்கபட்ட International Work Group for Indigenous Affairs, IWGIA மலேசியாவில் பழங்குடியினரின் தற்கால பிரச்சனைகளை வெளியுலகத்திற்கு எடுத்துச்சொல்வதில் செயலாற்றி வருகிறது. பழங்குடியினரின் நீர், நில வளங்களைப் பாதுகாக்க SAVE Rivers அமைப்பு 2011லிருந்து செயலாற்றி வருகிறது.

புத்தகம்

பழங்குடியினரின் மெண்டாங் பள்ளத்தாக்குத் தொன்ம கதைகள் நன்றி: www.kkdbooks.my

2021-ல் Fathenwan Wan Mohd Nor என்பவர் பழங்குடியினரின் பத்து தொன்ம கதைகளைத் தொகுத்து புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் பழங்குடியினரின் பஞ்சதந்திர கதைகள், அங்கதக் கதைகள், புராணங்கள், மாயாஜால கதைகளின் தொகுப்பு நூலாகும்.

உசாத்துணை


✅Finalised Page