under review

ஏகாம்பரநாதர் உலா

From Tamil Wiki

ஏகாம்பரநாதர் உலா (பொ.யு.14-ம் நூற்றாண்டு ) காஞ்சியில் கோவில் கொண்ட ஏகாம்பரநாதர் மீது இரட்டைப் புலவர்கள் இயற்றிய உலா என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

ஏகாம்பரநாதர் உலாவை இயற்றியவர்கள் இரட்டைப் புலவர்கள். ஒருவர் விழியிழந்தவர், மற்றவர் நடக்க இயலாதவர் எனச் சொல்லப்படுகிறது. திருவாமாத்துர்க் கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் வண்ணம், தியாகேசர் பஞ்சரத்தினம், மூவர் அம்மானைப் பாடல்கள், கச்சி உலா போன்றவை இவர்கள் இயற்றிய மற்ற நூல்கள்.

இந்த நூலின் அரங்கேற்றத்தின் போது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிட்ட ஆயிரங்கால் மண்டபமும், திகட சக்கர விநாயகரும் கோவிலில் இலாததால் நூலை அரங்கேற்ற அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவை இருந்ததை உறுதி செய்த பின்பே அரங்கேற்றுவதாகக் கூறி இருவரும் தலயாத்திரை சென்றதாகவும், திருப்பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது அவை தோன்றக் கண்டபின்பு ஊரார் இரட்டைப் புலவரை வேண்டி அரங்கேற்றம் நிகழ்ந்ததாகவும் செவிவழிச் செய்தி கூறுகிறது.

நூல் அமைப்பு

ஏகாம்பரநாதர் உலா கலிப்பாக்களால் ஆனது. காப்பு தவிர்த்து 556 கண்ணிகள் கொண்டது.

முதல் 185 கண்ணிகளில் பின்வரும் பகுதிகளில் ஏகாம்பரநாதரின் சிறப்பும், தலப்பெருமையும் கூறப்படுகின்றன.

  • ஏகாம்பரநாதர் இயற்பெருமை
  • அம்பிகைசெய் பூசனை
  • தழுவக்குழைந்த பிரான்
  • அருளழகன்
  • இசைப்பா விருப்பன்
  • சூழவருந்தெய்வத்தொளி
  • வாசலில் நந்தி
  • திருத்தேரில் மேவினார்
  • பல்லியம் முழக்கம்
  • திருச்சின்னம் முழக்கம்
  • தேவர் தம் ஊர்திமேல் சூழ வந்தல்
  • சூழவருந் தெய்வக் குழாங்கள்
  • திருவுலாக்காணும் திருமகளிர்
  • திருக்காட்சியும் காண்மகளிர் காதலும்

185 முதல் 556-ம் கண்ணி வரை உலா இலக்கியத்தின் இலக்கணத்துக்கேற்ப பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவத்திலுள்ள பெண்களும் காஞ்சி ஏகாம்பரநாதர் உலா வரும் அழகைக் கண்டு அவர் மீது காதல் கொள்வது கூறப்படுகிறது.

புராண வரலாற்றுச் செய்திகள்

சிவபெருமானின் திருவிளையாடல்கள்
  • சிவன் தக்கன் வேள்வி அழித்தது
  • திரிபுரம் எரித்தது
  • எமனை உதைத்தது
  • மன்மதனை எரித்தது
  • திருமாலுக்கு சக்கரம் அளித்தது
  • சிலந்திக்கு சோழ மன்னராக அருள் புரிந்தது
  • இராவணன் கைலை மலையைக் கையிலே எடுக்கும் போது தன் கால்விரலைஊன்றி அவன் முடியை நெறித்தது
  • நஞ்சினை உண்டது
  • தேவி கைத்தாளம் போட நடனம் புரிந்தது
  • கங்கையை சடையில் ஏற்று மறைந்தது
  • சிறுத்தொண்டரின் பிள்ளைக்கு உயிர் தந்தது
  • சிலந்திக்கு சோழ மன்னனாக மறு பிறப்பளித்தது
  • அடிமுடி காண முடியாத அனலாக நின்றது
  • பிரம்ம விஷ்ணுக்களை அழித்து பிறப்பித்தது அ
  • அவர்களை எரித்த சுடலை சாம்பலைத் திருநீராக அணிதது
  • தலை மாலை அணிந்தது சூலம் கை கொண்டது
சிவனடியார்கள் பற்றிய செய்திகள்
  • சிறுத் தொண்டர் சிவனடியாருக்காக பிள்ளைக்கறி சமைத்தது
  • சம்பந்தர் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
  • அப்பர் கல்லையே தெப்பமாக கொண்டு கரையேறியது
  • சுந்தரர் இறைவனை ஏவல் கொண்டது
  • மாணிக்கவாசகர்க்கு பல இடங்களில் இறைவன் காட்சி தந்தது
வரலாற்றுத் தகவல்கள்

காடவர் தலைவன் சம்புவராயன் மல்லிநாதன் பற்றிய செய்தி உள்ளது. திருமல்லிநாதன் (பொ.யு.1356 - 1379), ஏகாம்பரேஸ்வரருக்கு அளித்த பல கொடைச் சிறப்பை பற்றி இரட்டை புலவர்கள் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

உள்ளமகிழ் செம்பதுமை கேள்வன் திருமல்லிநாதனுயர்
சம்புபதி நல்கும் தடந்தேர்போல் (146).

தனக்கமையச் சம்புகுலத் தொருவன் சாத்துகைக்காம்
என்றளித்த செம்பொன் மணிமகுடம் சேர்வித்தும்(61).

பாடல் நடை

தழுவக் குழைந்த நாதர்

பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற்
   றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை

மறைபடைத்த மேனி வளையான் முலையாற்
குறிபடுத்தி மார்பு குழைய : நறைபடைத்த

தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல்
  வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர்

மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந்
   தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய (42-45

திருத்தேரில் மேவினார்

இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற்
    பட்டால வட்டம் பணிமாற :- விட்ட

வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப்
    பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு

மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன
    மூரிவிடை யெம்பிரான் முன் போதப் -பேரிகை (106-108)

பேரிளம்பெண்

பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும்
    ஏத்து மவர்க்கருளீர் என்னென்று - வாய்த்தசொலால்

ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு)
    ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ - ஆவி

உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி
    விரவுநகை கொண்டேகி விட்டார் - தரளம்

 இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன்
    கொடிய பெருங்காதல் கொள்ள - முடிமேல்

 நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன்
    உலாவுடையான் போந்தா னுலா (552-556)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:10:29 IST