under review

எஸ்.பி. பாமா

From Tamil Wiki
எஸ்.பி. பாமா

எஸ்.பி. பாமா (செப்டம்பர் 17, 1959) மலேசிய எழுத்தாளர். செய்தி வாசிப்பாளராகப் பரவலாக அறியப்பட்டவர். மலேசிய தமிழ் வானொலி நிலையத்தில் இலக்கிய படைப்புகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

எஸ்.பி.பாமாவின் இயற்பெயர் பி. சத்தியபாமா. இவர் செப்டம்பர் 17, 1959-ல் கோலசிலாங்கூரில் உள்ள ராஜா மூசா தோட்டத்தில் பிறந்தார். இவர் தந்தை ஆசிரியர் பழனிசாமி. தாயார் லீலாவதி. உடன் பிறந்த பத்து பேரில் இவர் ஆறாவது பிள்ளை. தொடக்க கல்வியைப் புக்கிட் ரோத்தான் தமிழ்ப் பள்ளியில் முடித்தவர், இடைநிலைக் கல்வியைக் கோலசிலாங்கூரில் உள்ள தஞ்ஜோங் இடைநிலைப்பள்ளியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

பாமா, குடும்பத்தாருடன்

பாமா, மலேசிய வானொலி அறிவிப்பாளரான எம்.ஜெயபாலனை ஆகஸ்ட், 28, 1983-ல் மணம் முடித்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள். 1986-ல் தொலைகாட்சி இரண்டில் செய்தி வாசிப்பாளராகப் பணிப்புரியத் தொடங்கினார். 2010-ல் விருப்பப் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பாமா 1980-ல் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை தமிழ் நேசனில் 'பொறுப்பாளி யார்' என்ற தலைப்பில் ஜூலை 27, 1980-ல் பிரசுரமானது. தமிழ் நேசனின் அப்போதைய ஞாயிறு பொறுப்பாசிரியர் காலஞ்சென்ற திரு வி.ச முத்தையா தனது பத்து குட்டிக் கதைகளோடு பாமாவுடைய குட்டிக் கதைகளில் பத்து, கு.சா. இராமசாமியின் பத்து கதைகளைத் தொகுத்து 'தேடி வந்த லெட்சுமி' எனும் சிறுகதை தொகுப்பை டிசம்பர் 1981ல் வெளியிட்டார். தமிழ் நேசன் நாளிதழின் மகளிர் பூங்கா, இளைஞர் உலகம் பதிவுகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ் மலர், வானம்பாடி, நயனம், தென்றல், போன்ற இதழிலும் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

மலேசிய வானொலிக்குப் பாமா எழுதிய "அலைபாயுதே" நாடகத்தில் நடிகை பிரேமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்

1981-ல் எஸ்.பி.பாமா வானொலி நிகழ்ச்சிகளுக்கும் எழுதத் தொடங்கினார். அவற்றில் மகளிர் பூங்கா, இசை சொல்லும் கதை, நாடகம் பிறக்கிறது, சிரிப்புச் சித்திரம், வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள் அடங்கும். வானொலி தொடர் நாடகங்களைத் தொகுத்து 'வானில் மிதந்த தேனொலி' என்ற ஒலிநாடாவை 1994-ல் வெளியீடு செய்தார். அந்த ஒலிநாடாவில் 'விக்ரம் கண்ட விசித்திர வழக்குகள்' என்ற மர்ம தொடர் நாடகமும் 'தான் என்ற சிறை' என்ற சமூக தொடர் நாடகமும் அடங்கும். இவை பாமாவின் பிரபல வானொலி நாடகங்கள். பாமாவின் நாடகங்கள் பிரத்தியேகமாக வானொலிக்காகவே எழுதப்பட்டவை. அதில் 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ வானொலிக்கே உரிய வடிவத்தில் ஒரே கதைமாந்தருடன் பலவகை பின்னணி ஒலிகளுடன் சேர்த்து எழுதபட்டவை.

எழுத்தாளர் சிவசங்கரியுடன் பாமா

இவர் தொடர்கதையான 'தாயாக வேண்டும்’ மக்கள் ஓசை நாளிதழில் தொடராக வெளியீடு கண்டு பிறகு ஒரு தொகுப்பாக 2009-ல் வெளிவந்தது.

எஸ்.பி.பாமா எழுத்தாளர் விஜயலட்சுமி முன்னெடுப்பில் வெளிவரும் 'ஒலிப்பேழை' யூடூபில் சேனலில் மலேசிய கதைகளையும் நாவல்களையும் தன்வரலாறு புத்தகங்களையும் வாசித்து வருகிறார்.

விருதுகள், பட்டங்கள்

  • 'காற்று வசப்படும்’ கதைக்காக 'இலக்கியச் செம்மல் முனைவர் ரெ. கார்த்திகேசு' விருதும் பரிசும் வழங்கப்பட்டது - 2018.
  • 'புதிதாக ஒன்று’ முதல் பரிசு, வல்லினம் சிறுகதை போட்டி - 2017.

இலக்கிய இடம்

'வானில் மிதந்த தேனொலி' வானொலி நாடக ஒலிநாடா வெளியீட்டு விழா, 1994

எஸ்.பி.பாமாவின் சிறுகதைகள் பெரும்பாலும் மையப் பிரச்சினைகளின் புறவயப் பார்வையாகவே உள்ளன. இறுதியில் வாசகனுக்கு முடிந்த முடிவாக ஒரு கருத்தை முன்நிறுத்துகின்றன. வாசகனுக்குச் சிந்திப்பதற்கு அவை கொஞ்சமும் இடமளிப்பதில்லை. நவீன கலைப்படைப்புகள் முன்னிறுத்தும் பன்முகப் பார்வை அவற்றில் சாத்தியமற்று போகின்றன.' என எழுத்தாளர் அ.பாண்டியன் எழுத்தாளர் பாமாவின் சிறுகதைகள் குறித்து குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • தாயாக வேண்டும், உமா பதிப்பகம், 2009
  • இன்னொரு முகம், சுயவெளியீடு, 2017
சிறுகதை தொகுப்பு
  • அது அவளுக்குப் பிடிக்கல, இளம்பிறை பதிப்பகம். சென்னை, 2004
  • தேடிவந்த லட்சுமி, வேணி,தணிகை, சென்னை, 1981
வானொலி நாடகம் [வானில் மிதந்த தேனொலி]
  • விக்ரம் கண்ட விசித்திர வழக்குகள், சுயவெளியீடு, 1994
  • தான் என்ற சிறை, சுயவெளியீடு, 1994

உசாத்துணை

எஸ்.பி. பாமா சிறுகதைகள் : கலையமைதியை விழுங்கி தீவிரம் - அ.பாண்டியன்

மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் பாமாவின் நேர்காணல்

ஒலிப்பேழை யூடியூப் சானல்

படத்தின் இடப்பக்கத்தில் புலவர் சேதுராமன், இரண்டாவதாக, பாமாவின் கணவர் ஜெயபாலன்
பாரதியார் நினைவு இல்லத்தில், பாமா


✅Finalised Page