under review

உலகத் தமிழ்ச் சங்கம்-மதுரை

From Tamil Wiki
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14, 1986-ல், சித்திரைத் திங்கள் முதல் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் இச்சங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட நூல்கள்

உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம்

கீழ்காணும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உலகத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

  • உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவை பற்றிய விவரங்களைத் தொகுத்தல். உலகமெங்கும் இயங்கிவரும் இவ்வமைப்புகளை ஒரு குடையின்கீழ்ப் பதிவு செய்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்குதல்.
  • தமிழறிஞர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய செய்திகளைப் பரப்புதல்.
  • தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளுக்கு ஆய்வாளர்களை அனுப்பித் தமிழர் நிலையினை ஆராய்தல். அந்நாட்டு ஆய்வாளர்களைத் தமிழகத்திற்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளுதல்.
  • பிறநாட்டுத் தமிழர்கள் பற்றிய களஞ்சியத்தைத் தயாரித்தல்.
  • தமிழ் மொழியிலுள்ள சங்க கால நூல்கள், இலக்கியங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து தெளிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல்.
  • உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல்.
  • உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இரு நாடுகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்களை நடத்துதல்.
  • கலைநுட்பம் வாய்ந்த சிற்பங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் காணும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
  • உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், அரிய கலைப் பொருட்கள் முதலியவற்றின் தரவுகளைத் திரட்டித் தொகுத்த்தல்.

திட்டங்கள்

உலகத் தமிழ்ச் சங்கம் பின் வரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

  • உலகத் தமிழ் – மின்னிதழ் வெளியீடு.
  • இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு ‘உலகத் தமிழ்ச் சங்க விருது’களை ஆண்டுதோறும் வழங்குதல்.
  • அயலகத் தமிழர்களின் படைப்புகளைப் பெற்று நூல்களாக வெளியிடுதல்.
  • தமிழ் இலக்கிய வளம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ‘தமிழ்க்கூடல்’ எனும் பெயரில் வாரந்தோறும் தமிழாய்வுக் கூட்டம் நடத்துதல்.
  • அயலகத் தமிழ்ப் படைப்புகளை ஆவணப்படுத்துதல். அயலகத் தமிழ் இதழ்கள், மின்னிதழ்களை ஆவணப்படுத்துதல்.
  • தமிழகத்தைக் கடந்து வாழும் படைப்பாளர்களையும் அறிஞர்களையும் ஊக்குவிக்கும் முகமாக ஆசியா உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பெறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்துதல்.

பணிகள்

உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கீழ்காணும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

  • உலகத் தமிழ் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது .
  • ஆண்டுதோறும் பல்வேறு கருத்தரங்குகளை, கவியரங்குகளை, கலை, இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது.
  • ஆண்டுதோறும் பல்வேறு நூல்களை வெளியிட்டு வருகிறது.
  • உள்ளூர் மற்றும் உலக அளவில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை சங்கத்துடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
  • உலகத் தமிழ் வார இதழ், உலகத் தமிழ் பன்னாடுத் தமிழாய்வு மின்னிதழ் (காலாண்டிதழ்), உலகத் தமிழ் திங்கள் மின்னிதழ் (மாத இதழ்) ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது.

உசாத்துணை

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை


✅Finalised Page