உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
உம்பற்காட்டு இளங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். உம்பற்காடு என்ற சொல்லுக்கு வேழக்காடு என பொருள். சேரநாட்டை சேர்ந்த கடன்மலை நாட்டில் உள்ள சிற்றூர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனால் குமட்டூர் கண்ணாருக்கு பிரமதேயமாக உம்பற்காடு கொடுக்கப்பட்டது. அந்த உம்பற்காட்டில் பிறந்து வாழ்ந்தவர் உம்பற்காட்டு இளங்கண்ணார்.
இலக்கிய வாழ்க்கை
உம்பற்காட்டு இளங்கண்ணனார் பாடிய ஒரு பாடல் அகநானூறில் 264-வது பாடலாக அமைந்துள்ளது. அரசனோடு போருக்கு சென்றிருக்கும் தலைவனின் கடின நிலையை எண்ணியும் அப்பிரிவால் தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நினைத்தும் தலைவி தோழியிடம் கூறுவதாக முல்லை திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மழையற்ற வானத்தில் விண்மீன்கள் தெளிவாக தெரிவது போல தழை நிறைந்த முசுண்டை பூக்கள் வெண்ணிறத்தில் பூத்திருக்கின்றன.
- வெண்காந்தள் மலர்களை தலையில் சூடிய ஆயர்கள் தாகம் மிகுந்த பசுக்களை ஊருக்கு அழைத்து வந்தனர்.
- தாழ பறந்த கருமேகங்களில் இருந்து பெரும் இடி முழக்கத்துடன் பெய்த மழையால் தெருக்கள் தோறும் நீர் பெருகி ஓடும் கூதிர் காலம் வந்தது.
- மிகுந்த சினமுடைய போர் யானைகளின் கரிய படைகளுக்கு நடுவே பகைவர்களை அழிக்கும் அரசரோடு தலைவன் பாசறையில் தங்கியுள்ளான்.
பாடல் நடை
அகநானூறு - 264
திணை : முல்லை துறை: பருவங் கண்டு வன்புறை யெதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மழையில் வானம் மீனணிந் தன்ன
குழையமன் முசுண்டை வாலிய மலர
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய சூடிய கவர்கோற் கோவலர்
எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு
நீர்திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர
நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து
ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்
கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர்
நம்நிலை அறியா ராயினுந் தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே ஓங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 19:59:04 IST