under review

உதரக்கிரியை

From Tamil Wiki
உதரக்கிரியை பற்றிய குறிப்பு: செந்தமிழ் இதழ், 1930

உதரக்‌கிரியை என்பது மருத்துவம் பற்றிய நூல். விருத்தச்‌ செய்யுட்களால்‌ இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. வயிற்றில் உருவாகும் பல்வேறு நோய்கள், அதன் அறிகுறிகள், வகைகள் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது. உதரம் என்பது வயிற்றைக் குறிக்கும் சொல். கிரியை என்பது செயல்பாடு. அதனால் இந்த நூலுக்கு ‘உதரக்கிரியை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

மதுரைத் தமிழ்ச்சங்கத்து இதழான ’செந்தமிழ்’ இதழின் பிப்ரவரி-மார்ச் 1930 தேதியிட்ட இதழில் இந்த நூல் வெளியாகியுள்ளது. 175 விருத்தச்‌ செய்யுட்களால்‌ இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து, செந்தமிழ் இதழின் உதவி ஆசிரியர் (உதவிப்பத்திராதிபர்) “உதரக்கிரியை யென்பது வயிற்றிலுண்டாகும் நோய்களின் விவரமும் அவற்றை அறிதற்கான குணங்குறிகளும் அவற்றுக்குச் செய்யும் சிகிச்சைகளும் விளங்க எளிய விருத்தச்செய்யுள்களால் அகத்தியர் வைத்யத்தின்வழி நூலாக இயற்றப்பட்டதென்று தெரிகிறது. இதனை இயற்றியவர் பெயர் முதலிய விவரம் ஒன்றும் தெரியவில்லை. இந்நூலின் ஏட்டுச்சுவடியொன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் பாண்டியன் புத்தக சாலையிலுள்ளது. அது வயிற்றிலுண்டாகும் நோய்களிற் சற்றேறக்குறைய 75-க்கு ஏதுவும், குணம் குறிகளும் மட்டும் கூறும் குறைப்பிரதியாயிருக்கிறது. ஆயினும் நாளடைவில் சிதல் முதலியவற்றால் அழிந்தொழியாது பாதுகாக்கக்கருதி ஏட்டிலிருந்தபடியே அது இங்கே வெளியிடப்பட்டுளது. முழுதும் உள்ள பிரதிகளுடையார் கொடுத்துதவுவார்களாயின் பரிசோதித்துப் புத்தகமாக வெளியிடலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை. ‘செந்தமிழ்’ இதழில் வெளியானதைத் தவிர்த்து, இந்த நூல் தனி நூலாக அச்சானதாகவும் தெரியவில்லை.

உள்ளடக்கம்

முதல் பாடலில் கடவுள் வணக்கமாக ஆதிக் கடவுளை வணங்கி பாடல்களைத் தொடங்குகிறார் புலவர். நோய்களில் 108 வகை நோய்கள் உள்ளன என்கிறார். வாத நோய்கள், கப நோய்கள், குன்ம நோய்களின் வகைகள், சிலேத்தும நோய்களின் வகைகள், சோகைகளின் வகைகள், பாண்டு, காமாலை, மகோதரம், சூலை எனப் பல்வேறு நோய்கள் பற்றி இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நோய்கள் பற்றிய குறிப்புகள்

108 நோய்கள்

அனிலத்தால் (வாதம்) வரும் நோய்கள் 56. பித்தத்தினால் 30. கபங்களால் 22. ஆக மொத்தம் நோய்கள் 108. வயிற்றில் வாதம், பித்தம், சிலேட்டுமம் ஆகியவற்றால் நோய்கள் உண்டாவதாகப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.

உதரத்தில் வாத பித்த சிலேற்பன மூன்றி னாலுங்
கதியுறு தொந்தத் தாலுங் கருதுநோ யொருநூற் றெட்டு
மதியுறு கிரியை தானு மருந்து சாத்தியம சாத்தியம்
விதியுறு நோவு சேரு மேதுவம் விளம்பக் கேளே

சோகை

காணுநீவா தம்பித்தங் கபஞ்சுரஞ் சன்னி ரத்தங்
காணுநீ சோகமாறுங் கருதிடிற் பெரிய தாகுங்
காணிநீ சோகமா றிற்சாத்தி யமசாத் தியங்கள்
காணு நீவா தஞ்சேற்பஞ்சன்னி மூன்ற சாத்தியங்காணே
சாற்றிடும் பித்த சோகம் சுரசோகம் ரத்தசோகம்
ஏத்திய ரோக மூன்றுஞ் சாத்தியமென்று கொள்க
பார்த்திடிற் குணங்கள் செய்யுங் கிரியைகள்பகர்மருந்து
மூத்தவர் மொழிந்த நீதிமுறைமையையறிந்திடாயே.

மூல வாயு

மூலவாயுகோபித்தான் முடுகிய கழிச்ச லுண்டாம்
மேலது நோகு மன்னம் வேண்டிடா தருவருக்கும்
காலொடு வயிறும் வீங்கிக் கரமொடு காலுமோய்ந்தாற்
கோலவார் குழலினாளே மரணமென் றறிந்து கொள்ளே.

காமாலை

அவயவங்கறுத்துக்‌ காட்டும்‌ அயர்வொடு மயக்கம்‌ வேர்வை
கபமுற விளைக்குங்‌ கைகால்‌ குளிர்ந்திடு நெஞ்சிற்‌ காயுஞ்‌
சுவையுறு மெண்ணெய்‌ நெய்‌ பாலினிப்பினால்‌ தொந்தமாகும்‌
இவையெலாங்‌ கருங்காமாலைக்‌ குணமென விளம்பலாமே.

சூலை, சொறி, சிரங்கு குணமாக

தானேநல் லெண்ணெயுடன் சாதிலிங்கம் வெள்ளறுகு
தேனே கருஞ்சீ ரகஞ்சேர்த்து - மானே
அறிவுடனே காய்ச்சி யருந்தவே சூலை
சொறிசிரங்கு போமெனவே சொல்.

குழந்தை பிறக்காமைக்குக் காரணம்

தாய் தந்தை செயலினாலுந் தானவாய்ப் புழுவினாலும்
வாயுவின் குணத்தினாலும் வன்சதை வளர்ச்சி யாலும்
நோயதின் குணங்களாலு நொய்து கால் விலக்கலாலும்
பேய்களின் குணத்தினாலும் பிள்ளையில்லாது போமே.

-இது போன்று பல்வேறு மருத்துவக் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page