இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் பெயரில் உள்ள 'ஒல்லை' என்பது ஒல்லையூரைக் குறிக்கும். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசன் பெயரில் உள்ள ஒல்லையூர் அது. இருங்கோ என்பது அக்காலத்தைய அரசர்களை குறிக்க அடைமொழியாகும். இதனைக் கொண்டு இவர் அரச குலத்தை சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
ஆயன் என்பவன் ஆடுமாடு மேய்க்கும் இடையன். இடையனைக் 'கோன்' என்னும் வழக்கம் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. ஆடுமாடு மேய்க்கும் கோலை வைத்திருப்பதால் இவன் 'கோன்' எனப்பட்டான். இருங்கோன் என்பதிலுள்ள இருமை என்னும் அடைமொழி இவரது குடும்பம் பெருமளவில் ஆடுமாடுகளை வைத்திருந்தமையைப் புலப்படுத்தும். கண்ணனார் என்பது இவரது பெயர். இவரது கண்கள் சிவந்து காணப்பட்டதால் ஊர்மக்கள் இவரைச் செங்கண்ணனார் என வழங்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார், இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 279-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவியின் நிலை பற்றி தன் நெஞ்சிடம் உரைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
பொருளீட்டச் செல்லாதவர், நண்பர்கள் வறுமையில் வாடுவதையும், உறவினர்கள் துன்பத்தில் உழல்வதையும் பெண்ணின்பத்தில் ஒட்டிக் கொண்டிருக்காமல் பொருள் தேடியவர்கள் செல்வப் பெருக்குடன் வாழ்வதையும் காண வேண்டி வந்தது.
காலையில் சீறியாழில் எழும் விளரிப் பண் ஒலி கேட்கும். பொங்கும் பூக்களை உண்ணும் குயிலின் குரல் கேட்கும்.
பாடல் நடை
அகநானூறு 279
பொருள்வயிற் பிரிந்து போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர்' என,
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தௌ காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?
(பொன்னழகு திகழும் பெண்ணின் முலை முற்றத்தைக் கடந்து பொருளீட்டச் செல்லாதவர், நண்பர்கள் வறுமையில் வாடுவதையும், உறவினர்கள் துன்பத்தில் உழல்வதையும் பெண்ணின்பத்தில் ஒட்டிக் கொண்டிருக்காமல் பொருள் தேடியவர்கள் செல்வப் பெருக்குடன் வாழ்வதையும் ஒரே ஊரில் பார்த்துக்கொண்டு காலம் கடத்துவர். இரவும் பகலும் இதே நினைவில் இருந்தேன். இந்த நினைவு என் நெஞ்சைச் சுட்டுக் கொண்டிருந்தது. எனவே, பொருள் தேடும் முயற்சியில் முனைந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஊர் ஊராக நடந்து இங்கே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இல்லாத துன்பத்தில் அவள் அங்கு என்ன பாடு படுவாளோ காலையில் சீறியாழில் எழும் விளரிப் பண் ஒலி கேட்கும். பொங்கும் பூக்களை உண்ணும் குயிலின் குரல் கேட்கும். இந்த ஒலிகள் அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பும். என்னைப் பற்றிய நினைவில் அவள் இவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பாள். வருந்தும் நினைவோடு அன்னம் போல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பாள். இப்படி மேகம் போன்ற கூந்தலை உடைய என் மாயோள் இருப்பாளே என்னும் நினைவு என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது.)
உசாத்துணை
- சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- அகநானூறு 279, தமிழ்த் துளி இணையதளம்
- அகநானூறு 279, தமிழ் சுரங்கம் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Jan-2023, 09:09:35 IST