under review

இடைமருதூர் கி. மஞ்சுளா

From Tamil Wiki
முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா
முனைவர் பட்டம்

இடைமருதூர் கி. மஞ்சுளா (கி. மஞ்சுளா; முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா; மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி; மணிவாசகப் பிரியா; பிறப்பு: ஜூன் 18, 1969) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். ‘தினமணி’ இதழில் பணியாற்றினார். சைவ சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்தார். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

இடைமருதூர் கி. மஞ்சுளா, ஜூன் 18, 1969 அன்று, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில், கிருஷ்ணமூர்த்தி-கல்யாணி இணையருக்குப் பிறந்தார். சுவாமிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பி.லிட். பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் கற்றார். ‘திருவாசகத்தில் மகளிர் ஆடல்' என்ற தலைப்பில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து ‘ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பில்.) பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சைவ சித்தாந்தம் பயின்று சமயக் கல்விச் சான்றிதழ் பெற்றார்.

தனி வாழ்க்கை

இடைமருதூர் கி. மஞ்சுளா டெலிபோன் ஆபரேட்டர், தரவு உள்ளீட்டாளர்(Data entry operator) , முகப்பு அலுவலக நிர்வாகி (front office executive) போன்ற பணிகளைச் செய்தார். இதழாளராகப் பணியாற்றினார். கணவர்: சந்திரமௌலி. மகள்: ஸ்ரீவித்யா.

’மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்' கி.மஞ்சுளாவின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம்.

இலக்கிய வாழ்க்கை

இடைமருதூர் கி. மஞ்சுளாவுக்கு பள்ளி நூலகத்தில் வாசித்த நூல்களாலும், தாயார் அறிமுகப்படுத்திய புத்தகங்களாலும் இலக்கிய ஆர்வம் வந்தது. முதல் நூல், ‘சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்' 2004-ல் வெளியானது. தொடர்ந்து கலைமகள், சித்தாந்தம், புதுகைத் தென்றல், இலக்கியப் பீடம், அமுதசுரபி, அம்மன் தரிசனம், மின்னல் தமிழ்ப்பணி, தமிழ் மூவேந்தர் முரசு, பேரம்பலம், ஆன்மிகக் களஞ்சியம், குட்டி போன்ற இதழ்களில் இலக்கிய, ஆன்மிக, சமயக் கட்டுரைகளை எழுதினார்.

இடைமருதூர் கி. மஞ்சுளா சிவமானசா, பரிபூர்ணா, மணிவாசகப் பிரியா, பிஞ்ஞகன், கந்தழி, வேம்பு மகள் எனப் பல புனை பெயர்களில் தினமணி இதழில் இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் எழுதினார். தொடர்ந்து பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

சிறார் இலக்கியம்

இடைமருதூர் கி. மஞ்சுளா, தினமணி சிறுவர் மணியில் சிறார்களுக்காகப் பல கதைகளை எழுதினார். ‘செல்லாக்காசு’ என்ற இவரது கதை, சாகித்ய அகாதெமி வெளியீடான ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ நூலில் இடம் பெற்றது. இடைமருதூர் கி. மஞ்சுளாவின் சிறார்களுக்கான கதைப் பாடல், சாகித்ய அகாதெமி வெளியிட்ட ‘சிறார் கதைப் பாடல்கள்’ தொகுப்பு நூலில் இடம் பெற்றது. சிறார்களுக்காக சிறுகதை, கதைப் பாடல்கள், மொழிபெயர்ப்புக்கள் எனப் பங்களித்தார்.

சாகித்ய அகாடமி நிகழ்வு

இதழியல் வாழ்க்கை

இடைமருதூர் கி. மஞ்சுளா, ஆன்மிகக் களஞ்சியம் மாத இதழில் இணையாசிரியராகப் பணியாற்றினார். தினமலர் நாளிதழில் மொழிபெயர்ப்பாளர், நூல் விமர்சகராகச் செயல்பட்டார். தினமணி நாளிதழில் நிருபர் மற்றும் முதன்மை உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தினமணியில் ஐராவதம் மகாதேவனால் தொடங்கப்பட்ட ‘தமிழ்மணி’ பகுதியில் முது நிலை உதவி ஆசிரியராகச் செயல்பட்டார்.

பதிப்புலகம்

இடைமருதூர் கி. மஞ்சுளா, தன் மகளின் பெயரில் ‘ஸ்ரீவித்யா பதிப்பகம்’ என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல நூல்களை வெளியிட்டார். தனது தாயாரின் பெயரில் ‘கல்யாணி பதிப்பகம்’ என்பதைத் தொடங்கி நடத்தினார்.

அவ்வை நடராசன், விக்கிரமனுடன் கி. மஞ்சுளா

அமைப்புச் செயல்பாடுகள்

இடைமருதூர் கி. மஞ்சுளா, வானொலி, தொலைக்காட்சிகளில் பங்களித்தார். பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல போட்டிகளில் நடுவராக இருந்தார். பல கலை, இலக்கிய, நாட்டிய நிகழ்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார். பல்வேறு இலக்கிய மற்றும் சமயச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இடைமருதூர் கி. மஞ்சுளா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளராகப் பங்கேற்று, 'சமயமும் தமிழும்-காதல் மகளிர் எழுவர்' என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். 2018-ல், கோலாலம்பூரில் நிகழ்ந்த ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘பண் சுமந்த தமிழால் முக்தி இன்பமும் வீடுபேறும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். மலாயாப் பல்கலைக்கழக இந்திய அறிவியல்துறை, ஆஸ்திரேலிய சிட்னி தமிழ் மன்றம், சென்னை செம்மூதாய்ப் பதிப்பகம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கருதாக் கருத்துடைக் கடவுள்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார். ஆரோவில் மற்றும் சாகித்ய அகாதெமி இணைந்து நடத்திய சிறுவர் இலக்கியம் குறித்த கருத்தரங்கில், ‘சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.

‘சைவத் தமிழ் சிந்தையர்' விருது

பொறுப்புகள்

  • சூளைமேடு ஒளவைத் தமிழ்ச்சங்கம் துணைச் செயலாளர்.
  • மண்ணடி ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோயில் துணைத்தலைவர்
  • வேளச்சேரி உழவாரப்பணி மன்ற உறுப்பினர்
  • சாகித்திய அகாடமி தமிழ்மொழி தேர்வுக் குழு உறுப்பினர்.
சேக்கிழார் விருது
சிறந்த எழுத்தாளர் விருது

விருதுகள்

  • 2004-ல், சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் ‘ஆடல்வல்லான்' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு, பொற்கிழி.
  • சித்தாந்த இரத்தினம் பட்டம்
  • திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சந்நிதானம் வழங்கிய ‘சைவத் தமிழ் சிந்தையர்' விருது.
  • சென்னை கம்பன் கழகம் வழங்கிய ‘தமிழ்நிதி' விருது.
  • சென்னை, சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய ‘சேக்கிழார் விருது'
  • புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ‘இதழியல் சுடர்' விருது.
  • வி.4 ஹெச் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் ஈரோடு அரிமா சங்கம் இணைந்து வழங்கிய "சிறந்த எழுத்தாளர்' விருது.
  • திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ‘ஆத்ம தாகம்' குறுநாவலுக்கு வழங்கிய ‘சக்தி விருது’
  • ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வழங்கிய ‘மங்கையர் திலகம்' விருது.
  • அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் வழங்கிய "சக்திச் சுடர்' விருது.
  • சென்னை ஆழ்வார்பேட்டை பொது நூலகத் துறை வட்டார நூலக வாசகர் வட்டம் வழங்கிய ‘எழுத்துச் சிற்பி' விருது.

இலக்கிய இடம்

இடைமருதூர் கி. மஞ்சுளா, ஆன்மிக எழுத்தாளர். சைவ சித்தாந்தம் கற்ற ஆன்மிகப் பேச்சாளர். மேடைப் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சமய, ஆன்மிகப் பணியாற்றி வருகிறார்.

கி. மஞ்சுளா நூல்கள்
கி. மஞ்சுளா சிறார் நூல்கள்

நூல்கள்

பதிப்பித்தவை
  • மூவர் அருளிய பஞ்சபூதத் திருத்தல தேவாரம்
  • திருவாசகத்தில் புராணக் கதைகள்
  • திருவாசகத்தில் மகளிர் ஆடல்
  • திருவாசகச் சிறப்பும் மணிவாசகர் பாமாலையும்
  • கற்பூரக் கனவுகள் (கவிதைத் தொகுப்பு)
  • என் நினைவுகள் (திருமதி விமலா-தன்வரலாறு)
  • திருக்கயிலாய சிறப்பு
  • மகாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை
எழுதிய நூல்கள்
  • சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்
  • திருப்போரூர் முருகப்பத்து
  • மனக்கவலை நீக்கும் மகாமந்திரங்களும் கவசங்களும்
  • ஸ்ரீமகா சரஸ்வதி விஜயம்
  • மூவர் அருளிய பஞ்சபூதத் திருத்தல தேவாரம்
  • திருவாசகத்தில் புராணக் கதைகள்
  • திருவாசகச் சிறப்பும் மணிவாசகர் பாமாலையும்
  • திருவாசகத்தில் மகளிர் ஆடல்
  • அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்
  • உடனாய் நிற்கின்றான் (ஆன்மிகக் கட்டுரைகள்)
  • ஞானத்தின் வாயில்
  • அறம் வளர்த்த நாயகி
  • ஆத்ம தாகம்
  • சாதகப் பறவையாய் இருங்கள்
  • மீண்டு வாரா வழி
  • திருக்கயிலாய சிறப்பு
  • இலக்கியச் சொற்கோயில்
  • மண்ணடி ஸ்ரீமல்லிகேஸ்வரர் ஆலய வரலாறு
  • நிம்மதி (சிறுகதைகள்)
  • மாணிக்க மணிமாலை
  • ஸ்ரீதேவி பாடம் (நவராத்திரி நாயகி பாமாலை)
  • மணிவாசகத்தை காதல் செய்து உய்மின்
  • மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்
  • நலம் தரும் திருமுறைகள்
  • திருமூலரும் வாலாம்பிகையும்
  • அப்பாக்கள் பலவிதம்
சிறார் நூல்கள்
  • சிங்கம் கூறிய தீர்ப்பு
  • சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்
  • உண்மை தந்த பரிசு
  • தாத்தா சொன்ன கதைகள்
  • பானைக்குள் போன யானை
  • யானைக்கு உதவிய எறும்புகள்
  • சுட்டிப் பாப்பாவும் குட்டிப் பெட்டியும்
  • முயலுக்குக் கிடைத்த புத்தகம்
  • ஜம்புவும் ஜிங்கிலியும்

உசாத்துணை


✅Finalised Page